உத்தியோக பூர்வமாக ஒலிவாங்கி முடுக்கிவிடப்படாத வேளையில் உறுப்பினர் ஒருவர் பேசிய விடயத்தையோ, பிரசுரிக்க வேண்டாம் என கூறப்பட்ட விடயத்தையோ பிரசுரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் ஊடக நிறுவனத்திற்காக வழங்கப்படும் பாராளுமன்ற அனுமதியும் ரத்துச் செய்யப்படும் என சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கபண்டார நேற்று அறிவித்தார்.
அத்துடன் ஆளும் தரப்பினரோ, எதிர்த்தரப்பினரோ பாராளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமை யில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் குளறுபடிகள் நடந்ததாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்தன என்று கூறியதுடன், வேண்டுமென்றே தவறான தகவல்கள் வழங்கப்பட்ட தாகவும், நடக்காத ஒரு விடயம் நடந்துவிட்டதாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சபையில் தெரிவித்து ஊடகங் களூடாக பிரசாரம் செய்யப்பட்டது என்று குற்றம் சுமத்தினார்.
எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதுடன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் ஐ.தே.க குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சில காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன. எனினும் அவற்றை திரிவுபடுத்தி சபையில் நடந்த விடயத்தை எடிப் செய்யப்படாத இறுவெட்டுக்களை அனுப்பி ரூபவாஹினியூடாக ஒலிபரப்பினார்கள் என குற்றம் சாட்டினார்.
அமைச்சர் ஜகத் புஷ்ப குமார எம்.பியே பாராளுமன்றத்தில் தவறான செய்தியை பரப்பிவிட்டார் என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.பி குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நான் ஒருபோதும் எதிர்க் கட்சித் தலைவருக்கு அடித்து விட்டார்கள் என கூறவில்லை. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐ.தே.க. எம்.பி ஒருவர் அவரது தொலைபேசியினூடாக எனக்கு தகவலைத் தந்தார்.
“எதிர்க் கட்சித் தலைவர் எந்நேரத்திலும் தாக்கப்படலாம். இங்கு நிலமை மோசமடைந்து கொண்டு வருகிறது” என்றார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கடமையாக கருதி இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை சபாநாயகருக்கு அறிய த்தந்தேன் அவ்வளவுதான் என்றார்.
கட்சிக்குள் உட்பூசல்கள் இருக்கின்றன. அதனை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. ஏன் எமது கட்சிக்குள் இப்படி உட்பூசல்கள் இருப்பதாக ஊடகங்கள் வெளி யிடவில்லையா? ஏன் அரச ஊடகம் மட்டும்தானா இந்த விடயத்தை வெளிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவின் பத்திரிகை கூடத்தானே இதற்கு முக்கிய த்துவம் கொடுத்திருக்கிறது. என சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.“நடக்காத விடயம் ஒன்றை பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் கூறி அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பது தான் தவறு என்கிறேன்” என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
இவ்வாறு இரண்டு தரப்பினருமே செய்திருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார். ‘இல்லை’ ‘இல்லை’ என ஜோசப் மைக்கில் கூறியபோது “நானும் எதிர்க் கட்சி பிரதம கொரடாவாக இருந்திருக்கிறேன்” என சபாநாயகர் தெரிவித்ததுடன் ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசினார். அவருக்கு ஒலி வாங்கி வழங்கப்படவில்லை. அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதால் அவருக்கே ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜகத் புஷ்ப குமாரவுக்கும், தயாசிறி ஜயசேக்கரவுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஒலிவாங்கிகள் வழங்கப் பட்டிருக்கவில்லை.
சபாநாயகர் லொக்குபண்டார சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவக சட்ட மூலத்தை சமர்ப்பித்து பேசுமாறு அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அழைப்பு விடுத்தார். ஒலிவாங்கி அமைச்சர் பந்துலவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு பேசமுடியாதவாறு சபையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன.
இந்த சந்தர்ப்பத்திலேயே சபாநாயகர் மேற்படி அறிவித்தலை விடுத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.