வன்னிப் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் காயமடைந்த பொதுமக்களை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று பதவியா மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.
மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து மேற்படி காயமடைந்த பொதுமக்கள் கடல் மார்க்கமாக புல் மோட்டைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பதவியா நகருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக சுமார் 70 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வவுனியா சைவப்பிரகாசர் மகா வித்தியாலயத்திலுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய வட மாகாண விசேட செயலணியின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அம்மக்க ளின் கோரிக்கைகளை ஆராயும் முகமாக தனது பிரதி நிதிகளை அங்கு நியமித்துவிட்டு உடினடியாக பதவியா நகருக்குச் சென்றார்.
பதவியாவில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையத்திற்கு முதலில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் அம்மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ மத குருமார்களுடன் தற்போதைய வன்னி நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன் இம்மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதாகவும் உறுதியளித்தார்.
இதன் பின்னர் பதவியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் வருகையால் பெரிதும் ஆறுதலடைந்த நோயாளர்கள் தங்களது குறைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.