இலங்கை வந்துள்ள மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சிலும், இராணுவத் தளபதியுடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்திலும் கடற்படைத் தளபதியுடனான சந்திப்பு கடற்படைத் தலைமையகத்திலும் நடைபெற்றது.
இலங்கை – மாலைதீவின் உறவு தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருடனான சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது. வன்னியில் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நாளுக்கு நாள் படிப்படியாக அடைந்து வரும் வெற்றிகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களின் நிலைமைகள், அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் இராணுவத் தளபதி மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்துள்ளார். இதேவேளை, மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்ததாக சிறப்பாக பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும், அதற்கான சந்தர்ப்பத்தை இராணுவத் தளபதி வழங்கி வருவதற்காகவும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.