பழக்கடைச் சிறுவனிடம் ஆளுநர் பேச வேண்டும் ! தனது அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் !
ஆளுநர் வேதநாயகன் விழாக்களில் சொற்பொழிவாற்றுவதோடு நின்று விடாமல் இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் நகரப் பகுதியில் தெருவோரம் பாடசாலை மாணவன் ஒருவர் வைத்திருந்த பழக்கடையை அகற்றி யாழ் மாநகரசபை அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கியிருந்தனர்.
அது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தது.
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தெருவோரம் பழ விற்பனையில் ஈடுபடும் மாணவனிடம் பழங்களை மாநகரசபை ஊழியர்கள் வழமையாக இலஞ்சமாக பெற்று வந்திருக்கின்றனர். குறிப்பிட்ட தினத்தில் தான் பழங்கள் கொடுக்காமையாலேயே அதிகாரிகள் தனது கடையை அகற்றினர் என்கிறார். மேலும் இரு அதிகாரிகள் தன்னை பிடித்துக் கொள்ள தனக்கு முதுகில் அடிகள் விழுந்ததாகவும் கூறினார்.
இம் மாணவனின் பழக்கடைக்கு விஜயம் செய்த யுரியூப்பர் ரஜித் இடம் அம் மாணவன் இவ்வாறு கூறினார். அவர் மொத்த பழ வியாபாரியான ஒரு முதலாளியிடம் பழங்களை வாங்கி விற்பனை செய்கிறார். அம் மாணவனுக்கு நாளாந்த கூலியாக 2500 ரூபாய் கிடைப்பதாக தெரிவித்தார். இந்த விடயத்தில் மாநாகர சபை அதிகாரிகள் ஏனைய நடைபாதை வியாபாரிகளிடமும் மணிக்கூடு மற்றும் ரிசேர்ட் என இலஞ்சம் வாங்கின்றனர் என்பதைக் கேள்வியுற்றதாகவும் இச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாநகரசபை நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்களை மேற்கொள்ள வேண்டும். பாடசாலை மாணவர்கள் நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வழிசமைத்திருக்கின்றது.