கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம் ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

அர்ச்சுனா – கஜேந்திரகுமார் – தமிழ்தேசியம்

ஆய்வாளர் வி சிவலிங்கத்துடனான நேர்காணல்

 

 

தையிட்டி விகாரையை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள்..? பா.உ அர்ச்சுனாவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான அதிருப்தி, பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜனநாயக விரோத கட்சி நடைமுறை, சுகாஸ் போன்றோரின் உசுப்பேற்றும் அரசியல், மீண்டும் பாசிச பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ள தமிழ்தேசியத்தின் எதிர்காலம் என்ன..? என பல விடயங்களை தேசம் ஜெயபாலனுடன் கலந்துரையாடுகிறார் மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம்!

 

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தேசியத் தலைவர் யார் ? சரியான போட்டி: சிறிதரன், கஜேந்திரகுமார், சீமான் ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின் அந்த இடத்தில் தங்களை முன்னிலைப்படுத்த பலரும் முயற்சி எடுத்தனர். அதில் முன்னிலைக்கு வந்தவர்களில் பா உ சிறிதரனும், பா உ கஜேந்திரகுமாரும் முக்கியமானவர்கள். இவர்கள் மாவீரர் தினங்களில் தங்களை அடையாளம் காட்டியும், தாங்களே ‘தேசியத் தலைவர்’ரின் கொள்கைகளை முன்னெடுப்பதாகவும் நம்புகின்றனர். முன்னாள் விடுதலைப் போராளியும் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளருமான முல்லை மதியின் வார்த்தைகளில் சொன்னால் அதித கற்பனாவதிகள்.

தற்போது ஈழத் தமிழர்களைத் தாண்டி பின்தளத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் “தேசியத் தலைவர்” போட்டியில் முன்னணியில் ஓடிக்கொண்டுள்ளார். அவருடைய அணிக்கு மதிவதனி பிரபாகரனின் சகோதரி அருணா முக்கிய தூணாக உள்ளார். தலைவரின் குடும்பத்தை தான் நேரில் சந்தித்ததாக சீமானுக்கான அன்று ஒரு புரட்டையும் அவர் வெளியிட்டு இருந்தார். சீமானுக்கு லண்டனில் நிதி வழங்குபவர்களில் முக்கியமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட பிரித்தானிய அரசியல் செயற்பாட்டாளர் ஜனனி ஜனநாயகத்தின் தந்தை, நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி சீவரத்தினத்தின் மகன் இவர்களை விடவும் பல குட்டிக் குட்டி சீமான் ஆதரவுக் கூறுகள் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளனர்.

இனவாதியும் சாதியமானுமான சீமானுடன் உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக மான் சின்ன அரசியல்வாதி இராசையா உமாகரன் உள்ளார். அவர் சீமானை வெகுவிரையில் தேசியத் தலைவராகப் பிரகடனப்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விசிலடிச்சான் குஞ்சுகளும் பிற்போக்குத் தமிழ் தேசியவாதிகளும் சமூகவலைத்தள லைக் பிரியர்களுமே சீமானின் அணியல் பெரும்பாலும் உள்ளனர். அவர்களுடாக சீமான் கணிசமான வருமானத்தை ஈட்டுவதுடன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக முற்போக்குதன்மையோடு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை சீமான் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி சங்கிகளின் பிஜேபியை தமிழ்நாடுக்குக் கொண்டு வரப்படாதபாடு படுகின்றார்.

திராவிடம் தமிழகத்தில் ஆரியத்துவத் திணிப்புக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் வீச்சுப்பெற்ற கருத்தியல் என்கிறார் அசோக் யோகன் கண்ணமுத்து. பெரியார் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியாரின் சீர்திருத்தங்களில் காணப்பட்ட முற்போக்குப் பாத்திரம் முக்கியமானது என்கிறார் அவர். சீமான் போன்றவர்களின் சுயநல விமர்சனங்களையும் அசோக் யோகன் கண்ணமுத்து கடுமையாக விமர்சித்தார்.

கொம்யுனிஸ்ட் சண்முகதாசனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவரும் முகநூலில் நன்கு அறியப்பட்டவருமான எஸ் பாலச்சந்திரன் தன்னுடைய இடதுசாரியச் சிந்தனைக்கு முரணாக சீமானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார். அவருடைய பதிவை நீங்கள் இங்கு காணலாம்.

“தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள், புலனாய்வுத்துறைகள் பேச விரும்புவதை தன்னை விடுதலைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் சீமானே பேச ஆரம்பித்து விட்டார்” என்று சீமானின் சந்தர்ப்பவாத அரசியலைக் கடுமையாக விமர்சிக்கின்றார், ஜேர்மனியில் இருந்து இயங்கும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சபேசன்.

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரையை உடைக்க வேண்டும் ! பா உ கஜேந்திரகுமார் – கட்டிய தையிட்டி விகாரையை உடைக்க முடியாது, இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் ! பா உ அர்ச்சுனா

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முரண்பாடு ஏற்பட்டது. தையிட்டியில் கட்டப்பட்ட விகாரை சட்;டவிரோதமானது என்றும் அதனை உடைத்து அப்புறப்படுத்தி காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் மாவட்ட அபிவிவிருத்திக் கூட்டத்தில் தெரிவித்தார். அதனை உடனடியாக நிராகரித்து, எந்த மதமாக இருந்தாலும் கட்டிய வழிபாட்டுத்தலத்தை உடைப்பது தவறு என்றும் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தமாறு பா உ அர்ச்சுனா இராமநாதன், பா உ கஜேந்திரகுமாருக்குத் தெரிவித்தார். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி பிரச்சினையைத் தீர்க்குமாறும் இதையெல்லாம் தங்களுடைய அரசியல் கட்சி நலன்கனுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரினார்.

தையிட்டி விகாரை தொடர்பில் தேசம்நெற்க்கு நேர்காணல் வழங்கிய வணக்கத்துக்குரிய மாத்தளை சுனித்தா ஹமத்துரு அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே இனங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பதாகவும், தான் தையிட்டி விகாரைக்கு நியமிக்கப்பட்டால் மக்களோடு பேசி அவர்களுக்கான நஸ்டஈட்டைப் பெற்றுக்கொடுத்து இப்பிரச்சியைனைத் தீர்த்து வைப்பேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் விகாரைக்கு உரித்தான காணி இருந்தும் 6 ஏக்கர் தனியார் காணி ஆக்கிரமிக்கபட்டு விகாரை கட்டப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் வீடு கட்டினால் இடிக்க சொல்லுகின்றனர். ஆனால் விகாரை விவகாரம் தொடர்பில் கட்ட முன்பே சொல்லப்பட்டும் அது கட்டப்பட்டுள்ளது. எனவே இதை விவகாரத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் மோடி சங்கிகளின் துணையோடு பள்ளிவாசலை உடைத்து இராமர் கோயில் கட்டிய பாணியில் ஒரு இன மதக் கலவரத்தை கஜேந்திரகுமார் மனக்கண்ணில் ஓட்டுகின்றார் என்கிறார் பாரிஸ் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதற்கு பதிலளித்த ஆளுநர்.நா வேதநாயகன் விகாரை தொடர்பில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் விகாரைக்குரிய காணியை மாற்றீடாக ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றார்.

ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதை ஏற்க மறுத்ததுடன் அந்த விடயம் தொடர்பில் இன்னும் ஆழமாக மக்களுடன் தங்கள் முன் கலந்துரையாட வேண்டும் என்றார்.

இதன் போது குறுக்கிட்ட இராமநாதன் அர்ச்சுனா, இவர்கள் தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள். முடிந்த கோவிலை இடிக்கச் சொல்வது முட்டாள்தனமானது. கட்டிய கோவிலை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய நட்டஈட்டைக் வழங்கி விகாரைக்குரிய காணியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அத்தோடு இந்த தையிட்டிப் பிரச்சினை முடிந்ததும் இவர்களுடைய பாராளுமன்றக் கதிரை பறிக்கப்படும் என்றார். அர்ச்சுனாவுடைய கருத்தை ஜனாதிபதி சிரித்தபடி கேட்டமையை அவதானிக்க முடிந்தது.

பா உ கஜேந்திரகுமார் இனவாதத்தைத் தூண்டி இன்னுமொரு இன, மதப் பிரச்சினையை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கின்றார் என்றும் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான் தெரிவித்தார். தமிழ் மக்கள் எந்த ஒரு சமூகத்திற்குமோ மதத்திற்குகோ எதிராகச் செயற்படவில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகிறோம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு நேரம்பார்த்துக்கொண்டுள்ளனர்.

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

கஜாவின் அழைப்பை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவிகெ சிவஞானத்திடம் வழங்கிய அழைப்பை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது. கடந்த 27ஆம் திகதி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடையே இடம்பெறவிருந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் தமிழரசுக்கட்சியினர் கலந்து கொள்ளாததால் கைவிடப்பட்டிருந்தது. தாங்கள் அடுத்த பெப்ரவரி 8 வரை தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். ‘நாங்கள் முயற்சிகள் எடுத்தோம் தமிழரசுக் கட்சி ஐக்கியத்திற்குத் தயாரில்லை. எம் ஏ சுமந்திரன் ஐக்கியப்பட விடுகிறார் இல்லை’ என்று ஒரு கதையாடலை இதன் மூலம் அவிழ்த்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும். கட்சிகள், உறுப்பினர்கள் மற்றும் கொள்கைகள் மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதாக்கும் அரசியலமைப்பை தமிழ் மக்களாக நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றையாட்சி சிந்தனையோடு வரும் எந்த அரசியலமைப்பை ஏற்க முடியாது. சமஷ்டி தீர்வை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். சமஷ்டி என்பதில் எந்த ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக சமஷ்டி தீர்வாகவே தீர்வுத்திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசியிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சமஷ்டி தொடர்பில் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றும் மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தான் நாம் அதிக கவனம் செலுத்த முயற்சிக்கிறோம் என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் பா.உ கஜேந்திரகுமார் !

 

இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைத் தேசிய மக்கள் சக்தி இதுவரையில் முன்வைக்கவில்லை. 75 ஆண்டு கால பிரச்சினைகளைத் தீர்க்கவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பியினருக்கும் இந்த சட்டத்தின் பாதிப்பு நன்றாகவே தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பதிலளித்த நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, பயங்கரவாதத் தடை சட்டம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

தேர்தல் அறிவிப்பின் போதெல்லாம் உயிர் பெறுகிறது கஜா – கஜா குழுவினரின் தையிட்டி மீட்பு !

 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்படும் வரை அமைதி காத்து பின்னர் திறப்பு விழா செய்யும் வரையும் அமைதி காத்துவிட்டு தற்போது முழுமையடைந்த விகாரையை இடிக்குமாறு முன்னணியினர் கோசம் போடுவது தேர்தல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். முழுமையடைந்த விகாரையை மீண்டும் இடித்துவிடுங்கள் என முன்னணியினர் கூறுவது மீள ஓர் 1983 கலவரத்தை ஏற்படுத்தும் என கூறும் நல்லிணக்க அரசியலை விரும்பும் செயற்பாட்டாளர்கள் கஜா – கஜா குழுவினர் கனவு உலகத்தில் வாழ்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதி காத்து பின்னர் விகாரையை இடியுங்கள் என கூறுதல், ஒற்றையாட்சியையும் – தேசிய கொடியையும் எதிர்ப்பதாக கூறிவிட்டு ஒரு நாட்டிற்குள் இருப்போம் என பாராளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்தல், மாகாண சபை முறையை எதிர்த்து நடை பவணி செய்து விட்டு மாகாண சபை தேர்தலிலேயே போட்டியிடுதல் என விதவிதமாக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் முன்னணியினர் என முகஞ்சுழிக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.

இதேவேளை அரசியல் லாபமீட்டும் விடயங்களில் மட்டும் தலைபோடும் முன்னணியின் கஜா குழுவினர் தமிழர் பகுதிகளில் உள்ள சமூக சீரழிவுகள் பற்றியும் வைத்திய – அரச அலுவலக மாபியாக்கள் பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை ! 

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை !

 

கடந்த தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை காகம் திட்டுவது போல் திட்டிக்கொண்டே அக்கட்சியில் தனிக்கட்டையாகவும் கறுப்பாடாகவும் உள்ள பா உ சிவஞானம் சிறிதரனை கிளப்பி தங்கள் பக்கம் தருப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பில் சில பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. வாக்கு வங்கியை இழந்து தனிக்கட்டையாகிப் போன செல்வம் அடைக்கலநாதனின் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பும் தனிக்கட்டையாக இல்லாமல் மற்றைய தனிக்கட்டைகளோடு கட்டுண்ட கட்டுமரமாகாலாம் என நினைக்கிகன்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இவர்களோடு தனித் தனியா கதைத்துவிட்டார்.

 

வரும் ஜனவரி 25இல் கட்சிகளோடு சந்திக்கப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகச் சந்திப்பதோ கட்சியாகச் சந்திப்பதோ ஒரு விடயமேயல்ல. இவர்கள் யாழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டவர்கள். ஆனால் எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி இவர்களோடு கதைக்கப் போய் இவர்களை வளர்த்துவிடுகின்ற வேலையை செய்ய விரும்புமா என்பது என்பது சந்தேகமே. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் நாணயக் கயிற்றை கையில் வைத்துள்ள சுமந்திரன் ஒளிவுமறைவில்லாமல் தடாலடியாக இந்த அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தாங்கள் முன்நகர்த்திய பாதையிலேயே தொடருவோம் என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மீறுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எம் ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.

 

இந்தப் பின்னணியில் ஜனவரி 25 இல் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாடை எட்ட சந்திக்க உள்ளதாகச் சொல்வதே ஒரு ஏமாற்று நாடகம். தமிழரசுக் கட்சியில் அக்கட்சியின் கறுப்பு ஆடாக உள்ள பா உ எஸ் சிறிதரன் மட்டுமெ வருவார், தனிக்கட்டையாக. கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரும் வருவதற்கில்லை. இதையெல்லாம் தெரிந்து கணக்குப் பார்த்தே மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்கத் துணைபோன சட்டப் பரம்பரையில் வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் காய்நகர்த்தல் ஒரு அங்குலம் தன்னும் நகருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!

கஜேந்திரகுமாருக்கும் அறளைபெயருகிறது: சங்கரி ஐயாவுக்கு போட்டியாக கடிதம் எழுதுகிறார்!
தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி சங்கரி ஐயா தான் கடிதம் எழுதுவதில் வல்லவர். அவருக்குப் போட்டியாக கஜேந்திர குமாரும் கடித எழுத ஆரம்பித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அனுரவுடன் எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுகளையும் இதுவரை முன்னெடுக்காத நிலையில், இந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு மோடியை அவர் கோரியுள்ளார்..
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை தன்னுடைய நலன் தவிர வேறு எதற்காகவும் இந்தியா கையிலெடுக்கப் போவது இல்லை. தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசின் மீது அது எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கப்போவதும் இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது ஆட்சியிலுள்ளவர்களுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆக்கபூர்வமாக தொடர் பேச்சுக்களை முன்னெடுத்து புரிந்துணர்வின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஒன்று. பேசிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தயாராகவுள்ள தலைவராக அனுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். ஆனால் அதைச் சரிவர பயன்படுத்தாது வெறும் கண்துடைப்புக்காக இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
தமிழர் விவகாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தம்முடைய அரசியல் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர் என்பது மீண்டும் இந்த சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடைய அரசியல் சாயம் வெழுத்து வாக்கு வங்கி கவிழ்ந்து ஒரு ஆசனம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னணியினர் தொடர்ந்தும் பூகோள அரசியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினால் அடுத்த ஆசனமும் பறிபோகும் என்கின்றனர் அரசியல் அவதானிகள். இந்தியாவை வைத்து இலங்கைக்கு குட்டலாம் என்ற போர்மிலா காலாவதியாகிப் போனது காலாவாதியாகிப் போய்க்கொண்டிருக்கின்ற பொன்னம்பலம் சஜேந்திரகுமாருக்குப் புரியவில்லையா அல்லது அவருக்கும் அறளைபெயருகிறதா? என்கிறார் ஆய்வாளர் மாவடி ஏஆர் சிறிதரன்.

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழ் தேசியமும் இணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினர். இந்த ஜனாதிபதி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியது தான் இந்தத் தையிட்டி விகாரை,  இந்த விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . அப்போது கஜா கோமாவில் இருந்தாரா தெரியவில்லை. நேற்று நடந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர் . குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் – ஆரப்பாட்டக்காரரிடையே போராட்ட நிலை வலுவடைந்துள்ளதுடன் இதனை கஜா – கஜா குழுவினர் சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் செய்தது போல பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் நல்லிணக்க சூழல் ஒன்று உருவாகும் நிலையில் இத்தகைய செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த தையிட்டி விகாரை 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு முழுமை நிலையை அடைந்தது.  குறித்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தனியார் காணியில் . இக்காணி வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது. ஆதலால் வடக்கு பிரதேச சபையினரையே கஜா கஜா குழுவினர் கைநீட்டி கேள்வி கேட்க வேண்டியுள்ளது.  இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பத்மநாதன் என்பவர் விகாரை அமைக்கப்படும் போதே அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும் அப்போது யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பிய மாமாக்கள் மாதிரி நடிக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில் விகாரை அமைக்கும் போதே நிபுணத்துவம் மிக்க சட்டம்பிகளை வைத்திருக்கிறோம் என கூறும் கஜா கஜா கோஷ்டி விகாரை அமைக்கும் போது கோமா நிலையில் இருந்து விட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போதும் – தற்போது பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்பும் போராட்டங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  விகாரைப்பணிகள் முழுமைகண்டு விட்ட நிலையில் ஒரு மதஸ்தலத்தை இடிப்பதோ அல்லது அதனை இல்லாதாக்குவதோ மிகவும் உணர்வுபூர்வமான விடயம் . இனிமேல் இந்த விகாரையை அகற்றுவது நடக்க முடியாத காரியம் என்பது தெரிந்தும் கூட அடுத்த மாகாண சபை . உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தன் இருப்பை நிலைநாட்ட கஜா குழுவினர் இந்த போராட்டங்களை தம் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  இதே போல் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தான் என்பதைத் தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை தொடர்ந்தும் செய்கின்றனர் என யாழ் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.