கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

வடக்கு மற்றும் கிழக்கில் ஆய்வுகளை செய்த பின்னரே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் யோசனை கோரியிருந்தார். ஆனால் இதுவல்ல முறை, போரால் பாதிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில், மக்களின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் இடத்தில் முழுமையான திட்டமிடல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது முழுமையான தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். அதனை செய்யாமல் நாங்கள் முடிவுகளை எடுத்தால் அந்த மக்களின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. என தெரிவித்துள்ளார்.

 

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் ! 

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் !

த பினேன்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு உரியத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த எம்.பி கஜேந்திரகுமார், மூடப்பட்ட குறித்த நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. குறித்த நிறுவனம், மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அந்த நிறுவனத்தினால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் த பினேன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் செய்வதற்கு நீதிமன்றம் விற்பனை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போதைய மதிப்பீட்டை விடவும் குறைந்த அளவில் அவை விற்பனை செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் ! 

கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் !

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொ.ஐங்கரநேசன், தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகியன தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது சகலரும் அறிந்ததே.

இக்கூட்டணி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை தமிழரசுக் கட்சி முறித்ததாக ஆதங்கம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளே உள்ளது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா போல் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட உதிரிகள் தான். இவர்களை கட்சி என்ற அடையாளத்துக்குள் கொண்டுவர முடியாது. இதே போல் ஒன்பது கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள் கூட கட்சி என்று வரையறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சியாகக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வி சிவலிங்கம் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சிக் கட்டமைப்பை வைத்துள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு வாக்கு வங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய நலன்களை முன்னெடுப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய உதிரிகளும் கட்சிகளுமல்ல அவர்கள் யாழ் மக்களின் நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை, அவர்கள் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிர், மலையகத் தமிழர்களுக்கு எதிர், ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிர் என்று இருக்கின்ற போது, இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர் வி சிவலிங்கம், இவர்கள் குறும் தேசியவாத வலதுசாரிப் பிற்போக்குசக்திகள் என்றும் இவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ் நூலகத்தை பாதுகாக்க நூறு மில்லியன் போதாது! வடக்கு கிழக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ் நூலகத்தை பாதுகாக்க நூறு மில்லியன் போதாது! வடக்கு கிழக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு நூறு மில்லியன் ரூபாய் போதாது என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள அடிப்படை இனப்பிரச்சினைக்கு காரணம், நாட்டில் காணப்படும் இனவாதமே ஆகும். இந்தநிலையில், அன்று முதல் இன்று வரை தொடர் பிரச்சினைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தற்போதைய அரசால் சரி அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நினைத்தோம்.

இதனடிப்படையில், கொண்டு வரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி வடமாகாணத்திற்கு போதுமானதாக இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். இந்த அழைப்பிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக் கட்சியை உடைக்கும் திடடம் பலிக்காது என்பதை தேசம்நெற் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தது. எம் ஏ சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போடும் கணக்கு பலிப்பதற்கான வாய்ப்பில்லை. மாறாக எம் ஏ சுமந்திரன் மீண்டும் கட்சிக்குள் பலம்பெற்று வருகின்றார்.

சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை

 

“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரையை இடித்தழிப்போம் – கஜா குழுவினருடன் கைகோர்த்தார் பா.உ சிறிதரன் !

தையிட்டி விகாரை இடித்தழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் முப்பது வருடங்களுக்கு மேலதிகமாக தம்புள்ளையில் இருந்த காளி கோயில் இடித்தழிக்கப்பட்டது என கூறுகிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அநுர சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் எனவும் பா உ சிறிதரன் கூறியுள்ளார்.

பா.உ கஜேந்திரகுமார் உள்ளிட்ட அவருடைய சைக்கிள் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தமது அரசியலை உறுதி செய்ய மீள தையிட்டி விகாரையை கையிலெடுத்துள்ளனர் என குற்றச்சாட்டினை முன்வைக்கும் தேசம் ஜெயபாலன் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறுவது மீள ஓர் இனவாத தீயை கொழுந்து விட்டு எரிய வைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட முனையும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மைய தேசம் திரை நேர்காணலில் கலந்து கொண்டிருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோருக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் கண்ணுக்கு தெரியாத நிலையில் தையிட்டி உள்ளிட்ட அரசியல் செய்யக்கூடிய பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செல்கிறது எனவும் இந்த குறுந்தேசியவாதிகள் எதிர்வரும் காலங்களிலும் மக்களால் நிராகரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே தனிக்கட்டையாக பாராளுமன்றத்தில் உள்ள பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என்ற கருத்துடன் கைகோர்த்திருக்கிறார் பா.உ சிறிதரன். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் பலரை தேசியம் என்ற பெயரில் உசுப்பேற்றி வரும் பா.உ சிறிதரன் தையிட்டி விகாரையை வைத்து தனது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்திருக்கிறார்.

இதேவேளை விகாரை அமைக்கப்பட்டு முழுமையடையும் வரை அமைதியாக இருந்துவிட்டு விகாரை முழுமையடைந்ததும் அதனை இடித்தழிக்க வேண்டும் என தமிழ்தேசிய தலைவர்கள் கூறி மீள ஓர் வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைக்கின்றனர் என இணக்க அரசியலை விரும்பும் தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவையின் இறுதிநிகழ்வில் கறுப்புச்சட்டை அடியாட்களை இறக்கிய பா உ சிறிதரனும் அணியும் – கஜேந்திரகுமார் அணியும்

மாவை சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களைத் தடுத்து அவர்களை அவமதித்து திருப்பி அனுப்பும் திட்டத்தோடு பா உ சிறிதரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயற்பட்டதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சர்வதேச பத்திரிகையாளர் டிபிஎஸ் ஜெயராஜ் டெய்லி எப்ரி இணையத்தில் பெப்ரவரி 7இல் எழுதிய கட்டுரையிலும் குற்றம்சாட்டியுள்ளார். பெப்ரவரி 2இல் மாவையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள கறுப்புச்சட்டை அணிந்த கூட்டம் கிளிநொச்சியிலிருந்து இறக்கப்பட்டதாகவும் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்த 18 பேரைக் குறிவைத்திருந்ததாகவும் டிபிஎஸ் ஜெயராஜ் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பா உ சிவஞானம் சிறிதரன் அண்மையில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஒரே நிர்வாகத்தின் கீழு; கொண்டு வரும் முயற்சியை தனது கையாட்களை வைத்து குழப்பினார் என்ற குற்றச்சாட்டுக்களை மாவீரர் துயிலும் இல்ல நிர்வாகம் முன்வைத்திருந்தது. மேலும் சிறிதரன் சட்டவிரோத சக்திகளை வைத்து கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் பா உ முருகேசு சந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பட்டியலில் தற்போது மவையின் இறுதி நிகழ்வை குழப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

மாவையின் குடும்பத்தினர் குறிப்பாக மாவையுடைய மனைவி பவானி சேனாதிராஜா, தன்னுடைய கணவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொள்ளும் யாரையும் தடுக்க வேண்டாம் என்று கேட்டிருந்ததாகவும் ஆனால் அதனை இறுதி நிகழ்வு விடயங்களை முன்நின்று நடத்திய பா உ சிறிதரனோ மற்றவர்களோ கருத்தில் கொள்ளவில்லை என்றும் பவானி சேனாதிராஜாவின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் செயற்பட்டதாகவும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

மாவையுடைய இறுதிநிகழ்வை வைத்து இலங்கைத் தமழரசுக் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர்களைப் பழிவாங்க பா உ சிறிதரன் அணி முழு முயற்சி எடுத்தது. குறிப்பாக மத்திய குழுவிலிருந்த 18 பேருக்கு எதிராகவும் அவர்கள் தான் மாவையின் மரணத்துக்குக் காரணம் என்று பொருள்பட தயாரிக்கப்பட்ட பெரும் போஸ்டர்கள் இறுதிநிகழ்வு நடைபெற்ற தச்சன்காடு மயானத்தில் கட்டப்பட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டில் குளிர்காயும் கஜேந்திரகுமார் அணி மற்றுமொரு போஸ்டரை தெல்லிப்பளைச் சந்தியில் கட்டியது.

எம் ஏ சுமந்திரன் குடும்பத்தினர், கறுப்புச்சட்டை அணிந்த வெறிக்குட்டிகள் போதை மயக்கத்தில் உறக்கத்தில் இருந்த காலை வேளையில் பவானி சேனாதிராஜாவையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துவிட்டு வந்தனர். ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

மாவையின் உடலைப் பொறுப்பேற்று சகல ஆயத்தங்களையும் செய்வித்து தனது அரசியலை ஸ்தீரனப்படுத்த முயன்ற சிறிதரன் கடைசி வரைக்கும் கட்சி அலுவலகத்திற்கும் மவையின் உடல் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை. அங்கு நிகழ்த்தப்பட்ட இறுதி உரைகள் கூட தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவதற்கான களமாகவே பயன்படுத்தப்பட்டது.

மரணச் சடங்கிலாவது அத்மாவை அமைதியாக உறங்கவிடுவோம் என்ற மனநிலையில் பா உ சிறிதரன் செயற்படவில்லை. மாவையின் இறுதி நிகழ்வு தன்னுடைய எதிரிகளைப் பழிவாங்குவதற்கான நிகழ்வாக உரைகள் அமைந்தது. மட்டு பா உ ஞானமுத்து சிறிநேசன், யாழ் பல்கலை விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன், மாவையின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் மற்றவர்களை தாக்குகின்ற விமர்சிக்கின்ற உரைகளை வழங்கினர்.

நிகழ்வை ஏற்பாடு செய்த பா உ சிறிதரன் இவற்றையெல்லாம் அனுமதித்தார். தடுக்க முயற்சிக்கவில்லை என்கிறார் மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒரு அரசியல் தலைவருடைய இறுதி நிகழ்வு எப்படி நடத்தப்படக் கூடாது என்பதற்கு மாவையுடைய இறுதி நிகழ்வு நல்ல உதாரணம் என சவுதஏசியன் அபயர்ஸ் என்ற இணையத் தளத்திற்கு நேற்று எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்