பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் குறிப்பிட்ட மூன்று பாடநெறிகள் இரத்துச் செய்யப்பட்டதனால் இவ்வாண்டில் இக்கல்லூரியில் 150 ஆக இருந்த பெருந்தோட்டத்துறை சார்ந்த ஆசிரிய பயிலுநர்கள் எண்ணிக்கை 47 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை பெருந்தோட்ட ஆசிரிய பயிலுநர்களைப் பாதிக்கும் செயலென முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தனுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கல்லூரியில் தமிழ், ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளை இவ்வாண்டு முதல் இரத்துச் செய்யத் தாங்களே காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இக்கல்லூரி பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே உருவாக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஏனைய சமூகத்தவர்களையும் இக்கல்லூரியில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அனுமதி பெற்றவர்களின் உள்ளக பயிற்சிகளைப் பெறும் வகையில் பத்தனைப் பகுதியின் ஐந்து பாடசாலைகள் அபிவிருத்தியும் செய்யப்பட்டன.
எமது சகோதர சமூகமான முஸ்லிம் சமூகம் இன்றைய நிலையில் கல்வியில் உயர்வதற்கு அமைச்சராக இருந்த அமரர் பதியூதீன் முகம்மத்தே காரணமாக இருந்திருக்கின்றார். அவரது தொலைநோக்குப் பார்வையின் பிரகாரம் தரம் 8 இல் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன். எமது நாட்டின் தேசிய கல்லூரிகளில் இக்கல்லூரி மாத்திரமே அதிகளவிலான எமது சமூகம் சார்ந்த ஆசிரியர் பயிலுனர்கள் உள்வாங்கப்படுகின்றனர். இதன் பிரகாரம் ஆண்டுதோறும் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் 200 பயிலுநர் ஆசிரியர்களில் 150 பேர் பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்திய வம்சாவளியினர். இக்கல்லூரியின் ஆரம்பந்முதலே தமிழ்மொழி, ஆரம்பக்கல்வி, சமூகக்கல்வி, கணிதம், விஞ்ஞானம், நாடகம், சங்கீதம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடநெறிகள் கடந்த வருடம் வரை பயிற்றப்பட்டு வந்தன.
க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளில் அதிகமான பெருந்தோட்டத்துறை சார்ந்த மாணவர்கள் சித்தியடைவதால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறாமல் கல்வியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் மூன்று ஆண்டு பயிற்சியின் பின்னர் டிப்ளோமாப் பட்டம் பெற்று ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர். மலையகத்தில் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர்தரம் கற்கப் போதிய பாடசாலைகள் இல்லாமையினால், எமது மாணவ சமூகத்தினர் கலை மற்றும் வர்த்தகத்துறை பாடநெறிகளில் விரும்பியோ விரும்பாமலோ தொடர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இதன் பிரதான காரணம் கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு மலையகப் பாடசாலைகளில் இருந்து 150 பயிலுநர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதேயாகும். இந்நிலையில் 103 பயிலுநர்களுக்கான வெற்றிடங்களை ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது. ஆரம்பக்கல்வி, தமிழ்மொழி, சமூகக்கல்வி போன்ற பாடநெறிகளுக்கு இனிமேல் புதிதாக ஆசிரியர்கள் தேவையில்லையென்ற நிலைப்பாடே இம்முடிவிற்கு காரணமென்று கருதப்படுகின்றது.
போதியளவு பயிலுநர்களை கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடநெறிகளில் உள்வாங்க தொலைநோக்குப் பார்வையோடு அதனை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் இல்லாத நிலையில் வருடத்திற்கு 150 கணித, விஞ்ஞானப் பயிலுநர்களை முழுமையாக எப்போது தயார்ப்படுத்தப் போகின்றோமென்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எமக்குக் கிடைத்திருக்கும் இவ் அரியவாய்ப்பினை ஏனையவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலையினை நாமே ஏற்படுத்தியிருக்கின்றோம்.
நிறுத்தப்பட்டிருக்கும் பாட நெறிகளில் போதியளவு ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளில் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், குறிப்பிட்ட பாடநெறிகளை இரத்துச் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆகவே, தாங்கள் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இரத்துச் செய்யப்பட்ட பாடநெறிகளை மீளவும் ஆரம்பிப்பதுடன், எமது சமூகத்திற்கென்று ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வியியல் கல்லூரியையாவது பாதுகாத்துத் தரும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.