அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மீள்குடியேறாத காரணத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்க கோரிக்கை

wanni.jpgமீளக் குடியேற மறுப்பு தெரிவித்துள்ள 332 குடும்பங்களையும் , அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தனியாக சமர்ப்பிக்குமாறு மீளகுடியேற்ற அமைச்சின் திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ,செங்கலடி மற்றும் கிரான் பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த இக் குடும்பங்கள் மீண்டும் அப்பகுதிகளில் குடியேற மறுப்பு தெரிவித்ததை அடுத்தே அதற்கான காரணத்தை செங்கலடி கிரான் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு திட்ட இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

இப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதும் மிகுதியான 332 குடும்பங்கள் மீள்குடியேற மறுத்துவருகின்றனர். இவர்கள் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தும் இவர்கள் மறுக்கின்ற காரணத்தால் இவ்விரு பிரதேசங்களிலும் பூரணமாக மீள்குடியேற்ற முடியாமல் உள்ளதாக திட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

ருவென்ரி 20′ போட்டி மஹேல, சங்ககார இல்லை

srilanka-india.jpgஇந்தியா வுக்கு எதிரான “ருவென்ரி20′ போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து கப்டன் மஹேல ஜெயவர்தன, சங்ககாரா நீக்கப்பட்டுள்ளனர். புதிய கப்டனாக திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரு “ருவென்ரி20′ போட்டி 10 ஆம் திகதி நடக்கவிருக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கப்டன் மஹேல ஜெயவர்தன, துணைக்கப்டன் சங்ககாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. புதிய கப்டனாக டில்ஷானும், கப்புகெதர துணைக் கப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முழங்கால் காயத்தால் கடந்த ஒரு ஆண்டாக அவதிப்பட்டு வந்த லசித்த மலிங்கா மீண்டும் “ருவென்ரி20′ அணியில் இடம்பெற்றுள்ளார்.

மாகாண சபைகளையும் குடும்ப மயப்படுத்த அரசு திட்டம்: மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பசில் நியமிக்கப்படுவார் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

wijitha_herath_jvp.jpgமாகாண சபைகளையும் குடும்பமயப்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டு செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி. அதற்காகவே மேல்மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. வியாழக்கிழமை கோட்டேயிலுள்ள சோலிஸ் மண்டபத்தில் அக்கட்சி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்; அரசாங்கம் கடந்த இரு மாகாண சபைகளில் தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்து தனதாக்கிக் கொண்டது. வரவுள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளிலும் அமைச்சர்கள் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல்மாகாண சபையை திடீரென அரசு கலைத்துள்ளது. இதன் முதலமைச்சர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷவை நியமிக்கவுள்ளது. இவ்வாறு மாகாண சபைகளை முழுவதுமாக கலைக்காது பகுதிபகுதியாகக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு காரணம் தமது குடும்ப உறவினர்களை வேட்பாளராக நியமிப்பதற்கேயாகும்.

இவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு இராணுவ வீரர்களின் வெற்றியை பயன்படுத்துவதுடன் அரச சொத்துகள் உட்பட அரச அதிகாரிகளையும் பயன்படுத்துகின்றது. இது தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது. அதாவது தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்கள் கட்டிடங்களும் பாவிக்கப்படுகின்றது. இது சட்டத்திற்கு முரணானது.

ஒரு பக்கம் பகுதிபகுதியாகத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் நாசமாவதுடன் அரச வளங்கள் பயன்படுத்தப்படுவதாலும் மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இவ்வாறு மாகாண சபைகளில் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்கே தமது குடும்ப உறுப்பினர்களை நியமித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று பட வேண்டும். இந்நிலையில் மக்களுடன் மக்களாக அவர்களுக் பணிசெய்ய காத்திருக்கும் ஜே.வி.பி.க்கு உங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்கின்றேன்.

மிருசுவிலில் தங்கவைக்கப்பட்ட அகதிகளை யாழ். ஆயர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவிப்பு

thomas-sawndaranayakam.jpgஉணவு நிவாரணப் பொருட்களும் விநியோகம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இருந்து யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மிருசுவில் றோ.க.பாடசாலை , மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மடம், புனித நீக்கிலார் ஆலய வளாகம் என்பவற்றில் தங்கியுள்ள 333குடும்பங்களைச் சேர்ந்த 1313 பேரையும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அதி. வண தோமஸ் சவுந்தர்நாயகம் மற்றும் குருமார் சந்தித்து ஆறுதல் கூறினர். யாழ். ஆயர் இல்ல நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உடுபுடைவைகள் , சமையல் பாத்திரங்கள் , உணவுப் பண்டங்கள் என்பன அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதேபோல யாழ். ஆயர் இல்லத்தை சூழவுள்ள பங்குகளைச் சேர்ந்த மக்கள் சமைத்து வழங்கிய உணவுப்பொதிகளும் எடுத்துவரப்பட்டு இந்த அகதிகளிடம் கையளிக்கப்பட்டன. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தாங்கள் அனுபவித்து வந்த துன்பமான நிகழ்வுகளை கண்ணீர் மல்க ஆயரிடம் கூறினார்கள்.

இவர்களுக்கு தம்மால் இயன்றவற்றை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயர் கூறினார். குறிப்பாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கான கற்றல் உபகரணங்கள் பெற்றுக் தருவதாகவும் ஆயர் கூறினார். ஆயர் கொண்டுவந்த இனிப்பு பண்டங்களை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன் சிறு வழிபாடும் இடம்பெற்றது. மிருசுவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு 15 மைல் தூரத்தில் இருந்து தாம் கால் நடையாகவே இங்கு வந்ததாக தெரிவித்தனர

தேர்தல் வன்முறைகள் குறித்து பொய் முறைப்பாடு தெரிவித்தால் கடும் நடவடிக்கை

vote.jpgதேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொய்யான முறைப்பாடுகளை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் செயலகம் பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளில் சில பொய்யானவை என தெரிய வந்துள்ளதையடுத்து தேர்தல் செயலகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதேசமயம், சில கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் விசேட சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போலி முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் தெரிவித்து வருவதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தைச் சேர்ந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நவரட்ண தெரிவித்தார். சிலர் அற்பமான விடயங்களை பெரிதுபடுத்த முயல்கின்றனர். சில வேட்பாளர்கள் தமக்கு எதிரான கட்சிகள் தொடர்பாக பிரச்சினையான சூழலை தோற்றுவிக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சில பொலிஸ் நிலையங்களில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்த சமயம், இந்த முறைப்பாடுகள் பொய்யானவை என்பது தெரியவந்துள்ளதை அடுத்து அது பற்றி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் பொய்யானவை என்பது இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் 5,000 பொதுமக்கள் வருகை

mullai-ahathi.jpgபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மேலும் அதிகளவிலான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நேற்றைய தினம் (06) மட்டும் சுமார் 5,500 பேர் இவ்வாறு வந்து சேர்ந்துள்ளார்கள். இது தொடர்பாக பிரிகேடியா சவேந்திர சில்வா தகவல் தருகையில் இன்றும் (07) அதிக எண்ணிக்கையான மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தவண்ணமுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கடற்புலித் தளபதி சூசை தங்கியிருந்த இடத்தின் மீது விமானத் தாக்குதல்

mi24_2601.jpgவிமானப் படையின் கிபிர் ஜெட் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த புலிகளின் கடற்புலித் தளபதி சூசையின் மறைவிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 11 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி களமுனைச் செய்திகள் தெரிவிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் புலிகளின் கடற்புலி தளபதி சூசையும் அங்கே இருந்ததாக நம்பப்படுகிறது.  இந்த தாக்குதல் புதுக்குடியிருப்பு திரணைப்பாலை என்ற இடத்தில் உள்ள பங்கர் ஒன்றின்மீதே நடத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விமானப் படையின் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில்  கிபீர் மற்றும் எப் 7 ரக ஜெட் விமானங்கள் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நகரச் செயலாளர் தீக்குளித்து மரணம்

ravichandran-1.jpgநாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைப்பதாக கூறி இன்று காலையில் தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். சீர்காழி நகர 17-வது வார்டு காங்கிரஸ் இணை செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். தலைஞாயிறு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேவைபார்த்து வந்தார்.

இன்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனையும், தீப்பெட்டியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் ஓடினார். நடுத்தெருவில் வைத்து இலங்கையில் போரை நிறுத்து….தமிழ் வாழ்க.. என்று கோஷம் போட்டபடியே தன் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார்.

உடனே ரவிச்சந்திரன் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை தூக்கிச்சென்று சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமடைந்ததால் தஞ்சைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் டாக்டர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறி விட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று மாலை உயிரிழந்தார் ரவிச்சந்திரன்.  மரணவாக்கு மூலத்திலும் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தாக கூறி உள்ளார்.

சாதாரண மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பேசுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எனக்கெதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம் – ஜனாதிபதி

mahi-raja.jpg“கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை அழைத்துப் பேசுவதைச் சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்கு தொடரப் போகிறார்களாம். நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு குறைகளைச் சுமத்துகிறார்கள்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டம் உள்ளிட்ட வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொருட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்ட சுமார் 3000 பேர் மத்தியில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  இங்கு ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறியதாவது,

இந்த ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண மக்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் நான் பேசுவதாக சிலர் குறைபடுகிறார்கள். இங்குள்ளோரை கிராமங்களுக்கு வந்து சந்திக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. பலரை இவ்விடத்திற்கு அழைத்து இந்த மாளிகையை அசிங்கப்படுத்துவதாக ஒரு வேட்பாளர் கூறியிருக்கிறார்.  இந்த மாளிகைக்கு அப்பாவி மக்கள் வந்து பல அனுபவங்களைப் பெற்றதன் மூலம் அவர்களது உள்ளங்களில் ஏற்பட்டுள்ள ஆனந்தத்தையும் அபிலாஷைகளையும் நான் நன்கு உணர்ந்தேன். நான் உங்களை எல்லாம் இங்கு அழைத்துப் பேசுவதை சகிக்க முடியாத சிலர் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போகிறார்களாம். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆடம்பரமான வகை தொகை படைத்தவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்பதே.

இந்த நாட்டின் கிராமப்புறப் பகுதியில் பிறந்து வளர்ந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய நான் மக்களோடு மக்களாக இருப்பதை விரும்பாதவர்களே இவ்வாறு என்மீது குறை கூறுகிறார்கள். இவ்வாறு மக்களுடன் நான் தொடர்பு கொள்வதை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது.

இந்த நாடு பல்லின மக்களைக் கொண்ட நாடாகும். இவர்களின் சமய கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் பல வகைப்பட்டவை. அவர்களின் எழுச்சிக்கும் வாழ்க்கைக்கும் உதவும் வகையில் அவர்களை ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஆதரிக்க வேண்டியது எனது பொறுப்பாகும். முஸ்லிம் மக்களின் கல்வி பல நிலைகளிலும் பின்னடைவை நோக்கி இருப்பதாக எனக்குப் பலராலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து நாம் விரிவாக ஆரய வேண்டியுள்ளது. இது குறித்து நான் மிகுந்த கவனத்தை எடுப்பேன்.

புலிகளின் கெடுபிடியால் பல வகைகளிலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதில் பாரிய வெற்றியே நாம் அடைந்துள்ளோம். இதன் பொருட்டு பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மக்கள் கல்வியையும் மற்றும் இயல்பு வாழ்க்கையையும் இன்று இட்டுச் செல்லக் கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.  குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருக்கிறார்கள். இவர்களில் முஸ்லிம்கள் பெரும் அளவில் அரசுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருக்கிறார்கள். இது நல்லதோர் அறிகுறியாகும். ஐ.தே.கட்சியைச் சேர்ந்த பலர் இங்கு திரண்டிருப்பதன் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் உள்ள எனது முயற்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அப்பாவி தமிழ் மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதே எமது தலையாய பணியாகும். இதனையே நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.எனவே புலிகள் இத்தருணத்திலாவது இந்த நிலைப்பாட்டை உணர்ந்து அப்பாவி மக்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ராதா படையணி – பிரபாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவு தலைமையகம் படைவசம்

udaya_nanayakkara_.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவான ராதா படையணியின் தலைமையகத்தை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.57 வது படைப் பிரிவும், இராணுவத்தின் மூன்றாவது செயலணியும் இணைந்து இதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவின் விசுவமடுவுக்கு கிழக்கே இந்த முகாம் அமைந்திருந்தது. இராணுவத்தின் மேற்படி இரண்டு பிரிவுகளும், ராதா படைப் பிரிவு தலைமையகக் கட்டடத் தொகுதியை கைப் பற்றும் போது அங்கு புலிகளின் ஈழக்கொடி பறந்து கொண் டிருந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பிரிவாக இருந்த இந்த படையணி தலைமையகத்திலிருந்தே சகல பாதுகாப்பு மற்றும் யுத்த கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறினார்.

பிரபாகரனுக்கும், அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த முக்கிய தலைவர்களுக்கும் ராதா படையணியே பாதுகாப்பு வழங்கி வந்தது. அதேநேரம், புலிகளின் விமானப் படைப் பிரிவுக்குரிய பாதுகாப்பையும் இந்த படையணியே வழங்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ராதா படையணி தலைமையகம் பாரிய மண் அணைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள், இராணுவத்தினர் கட்டடத் தொகுதிக்குள் புகுவதற்கு சற்று முன்னதாகவே தப்பிச் சென்றுள்ளனர். படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.