அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் “கெயர்” நிறுவனப் பணியாளர் ஒருவர் பலி

care.jpg“கெயர்” எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக “கெயர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் “கெயர்” நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்” மேலும் தெரிவித்துள்ளது. 

திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் ரிஎம்விபி யினரின் தொடர்பு மூடி மறைக்கப்படுகின்றது. – அனுரகுமார திசாநாயக்க

Regie_Varsaதிருகோண மலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்புவரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவை! அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அறிவிப்பு

parliament.jpgகொழும்புக் கோட்டையிருந்து மட்டக்களப்பு வரையில் நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவையொன்று இவ்வார இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல ரயில் என்ஜின்களும் இப்பொது சேவையிலீடுபடடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அரச வங்கிகளில் கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்கு – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தகவல்

ranjithsiyabalapitiya.jpg இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச வருமான மற்றும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 17800 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அமைச்சர் கடன்களை மீளச் செலுத்தாதவர்களுக்கு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்;.

இலங்கை நிலைமை தொடர்பாக ஜனாதிபதியுடன் ஐ.நா. செயலர் தொலைபேசியில் உரையாடல்

ban-ki-moon.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூன் செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை நிலைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இலங்கையில் மனிதாபிமான நிலைவரங்கள் தொடர்பான ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் அண்மைய அறிக்கை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வடக்கின் மனிதாபிமான நிலைமைகள் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அரசாங்கத்தின் ஏனைய உதவிகள், இடம்பெயர்ந்தவர்களுக்கான கிராமங்களின் நிலைமைகள், அரசு மேற்கொள்ளும் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் பொதுமக்களை விடுவிக்க எதிர்ப்பு காட்டி வருவதால் அம் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு தப்பிவரும் மக்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் அபாயம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதேநேரம், விடுதலைப்புலிகள் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்திருப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதை புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க முடியுமென்றும் ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இது சாதகமான சமிக்ஞை என்பதுடன், சுருங்கி வரும் புலிகளின் பகுதியிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு வருவதானது சிறைவைப்பிலிருந்து மக்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கு உதவியாக இருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

இதேநேரம், இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவு விநியோகம் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்ட கரிசனைக்கு பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு மற்றும் தடங்கல்களுக்கு மத்தியிலும் போதியளவான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், உணவு விநியோகம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஐ.நா. செயலாளருக்கு கிடைக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ பான் கீ மூனிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.  இதேநேரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து இதன்போது குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் அடங்கலாக பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடாதென்ற உத்தரவை படையினர் கடுமையாக கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன், பாதுகாப்பு படையினரால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு அல்லது பாதுகாப்பு வலய பகுதிகளில் எந்த தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பாகிஸ்தானிய சாரதி மேகர் கஹாலியா இலங்கைக்கு விஜயம் செய்ய குடும்ப விசா

drive-mogar.jpgபாகிஸ்தான் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது இலங்கை அணி சென்ற பஸ்ஸை செலுத்திய பஸ்ஸின் சாரதி இலக்கைக்கு விஜயம் செய்ய விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ்சினை செலுத்திய பாகிஸ்தானிய மேகர் கஹாலிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கைக்கு 10 நாள் விஜயத்தை மேற்கொள்ள குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளது. அவரது திறமையையும், சாதுரியத்ததயும் பாராட்டியே இலங்கை கிரிக்கட் அணி மேகர் கஹாலியாவை நாட்டுக்கு அழைத்துள்ளது.

புதிய குடியேற்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத பிறநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரித்தானியாவிற்குள் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் குடியேற்றக் கட்டணமாக 50 ஸ்ரேலிங் பவுண்களை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. இப்புதிய சட்டம் குடியேற்ற முறைமையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் பணம் குடியேற்றவாசிகளின் பொதுச் சேவைக்கான மேலதிக செலவை ஈடு செய்யும் பொருட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் குடியேற்றக் கட்டணத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் டொலர்களை பெற முடியுமென அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. பெருமளவிலான குடியேற்றவாசிகளால் தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகார சபைகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இப்புதிய குடியேற்றக் கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் சமூகம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; எமது சமூகத்தில் குடியேற்றவாசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.இவர்கள் எமது சமூகத்திற்கு செய்யும் பங்களிப்பு தொடர்பில் விவாதங்கள் தேவைப்படுகின்றன. தற்போது குடியேற்றக் கட்டணத்தின் மூலம் அறவிடப்படும் பணம் குடியேற்றவாசிகள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கே வழங்கப்படும் என்றார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் தமது முதல் வருடக் கல்விக்கும் 9 மாதங்களுக்குரிய வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான பணம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரப்படுகின்றனர். இச்சட்டத்தின் படி இத்தொகை பணமாக இருக்க வேண்டும். பங்குகளாகவோ ஓய்வூதியத் தொகையாகவோ இருக்கும் பட்சத்தில் தூதுவராலயம் இதனை ஏற்றுக் கொள்ளாது. அத்துடன், அவர்களது பணம் வங்கிக் கணக்கிலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பணத்தின் தொகை அவர்கள் தொடரவுள்ள கற்கை நெறியின் காலம் மற்றும் அவர்கள் லண்டனிலா அல்லது புறநகர்களிலா தங்கியிருக்கப் போகின்றனர் என்பதற்கேற்ப மாறுபடும்.

“சுடர்ஒளி’ ஆசிரியர் வித்தியாதரனுக்கு மூன்று மாதம் தடுப்புக் காவல் உத்தரவு

vithyathara-01.jpgகுற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள “சுடர்ஒளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதிவான் ஜெஹான் பலப்பிட்டிய முன்னிலையில் இவரை ஆஜர் செய்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், கொழும்பில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து இவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மூன்று மாத தடுப்புகாவல் உத்தரவினை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், சுடரொளி பிரதம ஆசிரியர் தொடர்பில் மருத்துவ அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து, வித்தியாதரனை தடுத்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் திகதி கல்கிசையில் வைத்து கைதுசெய்யப்பட்ட சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இருவரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

நிவாரணக் கிராமங்களின் சுகாதாரம்; 64 மருத்துவர், 107 தாதியர்கள் பணியில்

health-care.jpg வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை உடனுக்குடன் பெற்றுக் கொடுக்கவென 64 மருத்துவ அதிகாரிகளையும், 107 தாதியரையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதேநேரம் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிவாரணக் கிராமத்திற்கும் ஒரு அம்புலன்ஸ் வண்டி வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். உலக காசநோய் தினத்தையொட்டி இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்படித் தகவல்களைத் தெரிவித்தார்.

சுகாதாரக் கல்வி பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் சரத் அமுனுகம தலைமையில் பணியகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் மஹீபால மேலும் கூறுகையில்: புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்த மக்கள் வவுனியாவில் அமை க்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இக்கிராமங்களில் சுமார் 34 ஆயிரம் பேர் தங்கியுள்ளார்கள்.

இக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்க வென 64 மருத்துவ அதிகாரிகளையும் 107 தாதியரையும் 19 மருத்துவ மாதுகளையும் 5 மயக்கமருந்து கொடுக்கும் டாக்டர்களையும் 12 பொது சுகாதாரப் பரிசோதகர்களையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை, செட்டிக்குளம் தள வைத்தியசாலை மற்றும் பூவரசங்குளம் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள் ளனர். என்றாலும் இந்த டாக்டர்களில் ஒரு தொகுதியினர் தினமும் இந்த நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ கிளினிக்குகளையும் நடாத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இம் மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கென செட்டிக்குளம் ஆஸ்பத்திரியின் மருத்துவ ஆய்வு கூட வசதிகள் மேம் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அங்கு நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வு கூட வசதியும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன.

இம்மக்களுக்கு அடுத்த மாதம் முதல் காசநோய் தடுப்புக்கான சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் அமைச்சு அதிகாரிகளும், உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளும், காசநோய்த் தடுப்புக்கான தேசியத் திட்ட அதிகாரிகளும் விரைவில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் மருத்துவ நிபுணர்களான டாக்டர் ஏ. கே. எஸ். பி. டி. அல்விஸ். டாக்டர் அமித பெரேரா, கபில சூரியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

யாழ். தேவி ஆரம்ப பணிகள் 23ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

mahinda-rajapaksha.jpgயாழ்ப்பாணத் துக்கான ரயில் சேவை ஆரம்பிப் பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன. வடக்கிற்கான ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான தேசிய செயலகமொன்றை அன்றைய தினம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

யாழ். தேவி சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட் டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்பட உள்ளதோடு இதனூடாக யாழ்ப்பாணம் வரையான 37 ரயில் நிலையங்கள் மீளமைக்கப்படவுள்ளன.

இந்தப் பூர்வாங்க பணிகள் இன்று (19) இடம் பெற இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணங்களினால் 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.