அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எகிப்தில் பொதுநலவாய முதல் பெண்மணிகள் மாநாடு சிரந்தி – ராஜபக்ஷ பங்கேற்பு

shi-raja.jpgபொது நலவாய நாட்டுத் தலைவர்களுடைய முதல் பெண்மணிகள் மாநாடு நேற்று முன்தினம் (15) எகிப்தில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்குபற்றினார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பாரியார்களின் மாநாடு நடைபெற்றது. பொதுநலவாய நாட்டுப் பெண்களின் நலன் குறித்தும் உலக பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதப் பிரச்சினை, பெண்கள் மீதான அடக்குமுறை, சமூகப் பிரச்சினைகள் என்பவற்றில் பெண்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ: 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பமானது முதல் பல மோசமான சவால்களுக்கு முகம்கொடுக்க அங்கத்துவ நாடுகளுக்கு நேரிட்டதாகக் கூறினார்.

பொருளாதார, நிதி நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, உணவு நெருக்கடி, வரட்சி, சூறாவளி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இவற்றினால் பெண்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்த இந்த மாநாட்டில் உலகத் தலைவிகள் இணக்கப்பாட்டுக்கு வந்தது குறித்து பாராட்டு தெரிவித்த சிரந்தி ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மேற்படி பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பெண் அமைப்புகள் முக்கிய பங்காற்றின. ஜனாதிபதி நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்துள்ள நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களையும் யுத்த பயிற்சி வழங்கப்பட்ட சிறுவர்களையும் புனரமைக்கவும் கல்வி புகட்டவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்கென ‘சிரிலிய செவன’ பாதுகாப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனூடாக அவர்களுக்கு கல்வி அறிவு வழங்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உள்ளதாகவும் சொன்னார். மேற்படி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது குறித்து சிரந்தி ராஜபக்ஷ எகிப்திய ஜனாதிபதியின் பாரியாருக்கு நன்றி தெரிவித்தார்.

கந்தளாயில் மூன்று புலி சந்தேக நபர்கள் கைது

_arrested.jpgபுலி களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கந்தளாய் சேருவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் இளைஞர்கள் என்று தெரிவித்த அவர் கையடக்கத் தொலைபேசி, கணனி உட்பட உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தங்களது கையடக்கத் தொலைபேசியில் புலிகளின் கீதங்களை பதிவு செய்துள்ளதுடன் புலிகள் தொடர்பான ஆவணங்களை கணனியில் வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொட்டதெனிய கொள்ளைக்கு சிறையினுள் இருந்து திட்டம்? – 3 பொலிஸ் குழுக்கள் தீவிரம்

கொட்டதெனிய கொள்ளைச் சம்ப வம் தொடர்பாக விசா ரணை நடத்துவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

சிறைச்சாலையிருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு இப்பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்ப தாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவரே இக் கொள்ளையை திட்டமிடுவதில் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டிருக்க வேண்டு மெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்படி தகவல்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் நால்வரையும் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

அதேவேளை, பணத்தை வான் ஒன்றில் கொழும்புக்கு எடுத்து வந்த ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியிலுள்ள இலக்கங்கள் குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

தப்பியோட முயற்சித்தவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடமிருந்தும் மயக்க மருந்து, மிளகாய்த்தூள் பொட்டலம் மற்றும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

கொட்டதெனியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இப்பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலில் இருந்து கொழும்புக்கு இரு நிறுவனங்களின் 10 கோடி ரூபா பணம் வாகனமொன்றில் எடுத்து வரப்பட்டபோதே திட்டமிட்டகொள்ளைக் கும்பல் இதனை ஆயுதமுனையில் செய்துள்ளது. அப்போது, அவ்வழியாக பொலிஸ் வாகனமொன்று வந்துள்ளது. அதனைக் கண்டதும் இரு கொள்ளையர்கள் ஒன்றரைக்கோடி ரூபா பணத்தைக் கொண்ட பொதியை எடுத்துக்கொண்டு வாகனமொன்றில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கியபோது கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த ஏனைய நால்வரும் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பியோட முயன்றுள்ளனர்.

பொலிஸார் இந்நால்வரையும் சுமார் 8 1/2 கோடி ரூபா பணத்துடன் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய நிறுவனத்துக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் கொட்டதெனிய பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

யாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் 17 வாக்களிப்பு நிலையங்கள்

election_cast_ballots.jpgயாழ். மாநகரசபைத் தேர்தலில் இடம்பெயர்ந்து வாழ்வோர் வாக்களிக்க ஆறு மாவட்டங்களில் பதினேழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 6242 பேர் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு தேர்தல் திணைக்களத்திடம் கோரியதையடுத்து இவர்களுக்கு கொத்தணி வாக்குச்சாவடிகளை அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 324 வாக்காளர்கள் வாக்களிக்க மட்டக்குளி சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயம், பவிலியன் ஒவ் பிளசரணங்கர விளையாட்டு மைதானத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். கம்பஹா மாவட்டத்தில் வாழும் 849 வாக்காளர்கள் வாக்களிக்க சென்பீற்றர்ஸ் முஸ்லிம் மகாவித்தியாலயம், தளுவ கொட்டுவ சென் அன்ரனிஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 320 பேருக்கு கெனமுல்ல ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் வாக்களிப்பு நிலையம் நிறுவப்படும். புத்தளம் மாவட்டத்தில் வாழும் வாக்காளர்கள் 4550 பேருக்கு இம் மாவட்டத்தில் ஏழு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இவர்களுக்கு புளிச்சங்குளம் சமத்பாறுக் மத்திய மகா வித்தியாலயம், ஸாகிரா பாத்திமா தேசியபாடசாலை, தில்லையடி மகாவித்தியாலயம் பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பலப்பிட்டிய அலக்ஸா தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

அநுராதபுரம் மாவட்டத்தில் வாழும் நூற்றி இருபது வாக்காளர்களுக்கு இங்கிரிகொள்ளாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகொல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் சிறார் பாடசாலை, நச்சன்டுவ முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதேவேளை, குடாநாட்டில் தென்மராட்சி கைதடி, கொடிகாமம் நலன்புரி நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும். வெளி மாவட்டங்களில் அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களில் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் யாழ். மாநர சபை வாக்காளர் வாக்களிக்க எழுபது வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுமென யாழ். மாவட்ட தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை-தென்னாபிரிக்க ஜனாதிபதிகள் எகிப்தில் சந்திப்பு

sa-sl.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸமாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு இன்று எகிப்தின் ஷார்ம் அஷ்ஷெய்க்கில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மெய்ட் இன்கோனா மஷபேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

பயங்கரவாதம், சமாதானம் தொடர்பாக சர்வதேச சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்

111111.jpgஅணி சேராமைக்கு நடைமுறைசார் ஆழமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  எகிப்தின் சாம் அல் சேக் இல் இடம்பெற்ற அணிசேரா நாடுகள் அமையத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் உரையாற்றுகையில்;

உலகின் மிகக் குரூரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்து பொது மக்களை மீட்டு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ள இலங்கையின் வீரம்மிகு பாதுகாப்பு படைகளைப் பாராட்டினார். இலங்கையை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி அதன் ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம், இறைமை மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் உரிமைகள் என்பவற்றை மேலும் பலமூட்டியிருக்கும் இவ்வடைவு சாத்தியமடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளுடனான கடப்பாடு, தரிசனம் மற்றும் விடாமுயற்சி என்பன வழிகோலியுள்ளன.

காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அணிசேரா கொள்கையினை திடமாக ஸ்தாபிப்பதற்கு முக்கிய பங்காற்றியமையை அவர் அங்கு தெரிவித்ததோடு, அதற்காக அன்னாருக்கு புகழாரம் செலுத்தினார்.

இன்று இக்கொள்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கையின் வெளியுலகிற்கான ஈடுபாட்டில் செயல் ரீதியான நோக்கெல்லை மற்றும் ஆழமான முக்கியத்துவம் என்பன வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அமைதி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒருமித்த கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றுகையில், பயங்கரவாதம், நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கான முக்கியமானதொரு சவாலென இனங்கண்டதோடு, அதனை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய சவால்கள் ஒருமித்த பதில் நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தினை வலியுறுத்திய போகொல்லாகம, இவ்வாறான ஒன்றுபட்ட முயற்சிகளை முன்னெடுக்க அணிசேரா நாடுகளின் அமையம் தலைமைத்துவத்தை தாங்குமாறு அறை கூவல் விடுத்தார்.

15 ஆவது அணிசேரா நாடுகளின் அமையத்தின் உச்சி மாநாட்டிற்கு முன்பதாக இன்று இடம்பெற்ற இவ்விரு நாள் கூட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தம் மற்றும் வறுமை தணிப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆராயப்பட்டன.

நேற்று இடம்பெற்ற அமைச்சு மட்டத்திலான ஒன்று கூடலின் பின்புலத்தில் அமைச்சர் போகொல்லாகம தனது தென்னாபிரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ராஜாங்க அமைச்சர்களும் அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

பாதாள உலகக் கும்பலை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லை

sarath-pon-eka.jpgபாதாள உலகக் குழுக்களை ஒழிக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனை இரண்டரை வருடத்துக்குள் ஒழித்த படையினருக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனவும் கூறினார்.

கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நேற்று புதன்கிழமை பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினருக்கு நாம் பங்களிப்புச் செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் எமது ஒத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை தொடர்ந்தும் வழங்குவோம்.  விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் இரண்டரை வருடங்களுக்குள் ஒழித்த இராணுவத்துக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

கியூபா தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

raaul-castroooo.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவின் ஜனாதிபதி ராஉல் கஸ்ட்ரோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு, மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் ஷெய்க்கிலுள்ள ரோயல் சுய்ட் சர்வதேச ஹோட்டலில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி,  இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல்கடாபியை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கைக்கு நேசக் கரம் நீட்ட தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக இச்சந்திப்பின்போது லிபியத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill-gates.jpgவரும் காலத்தில் இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க கணிப்பொறியின் இயக்க மென்பொருளை முழுமையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மைக்ரோசாப்ட் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில்  இலங்கை அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அதிபர் ராஜபக்சேவின் அலரிமாளிகையில் நடந்தது.

விழாவில் பேசிய ராஜபக்சே, ‘பிராந்திய மொழிகளில் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை வந்துவிட்டால் இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில், இலங்கை இப்போது நல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை அந்நாடு எட்டும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐடி துறையில் சாதனைகள் படைக்க இலங்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை.

election.gifவவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.