அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பீடைகொல்லி பாவனை ஒழுங்கு விதிகளை மீறினால் ரூ. 5 இலட்சம் வரை அபராதம்

பீடைக்கொல்லி பாவனை தொடர் பான ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக் குத்துறை அமைச்சின் பீடைக்கொல்லிகள் பதிவாளர் அலுவலக சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரியான சுமித் ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார்.

பீடைக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பாவித்தல் என்ற தொனிப் பொருளில் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் சுகாதார கல்வி பணியகம் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் கருத்தரங்கின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேக்கடி படகு விபத்து: பலி 30 – 13 பேர் மீட்பு – 35 பேரைக் காணவில்லை

30-thekkady.jpgகேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.

இன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு  கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான சேவை சீரானது

26-air-india.jpgஏர் இந்தியா விமானிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளும் இன்று பணிக்குத் திரும்பியதால், விமான சேவை சீரடைந்துள்ளது.

இதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக ஏர் இந்தியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏர் இந்தியா விமான சேவைகள் இன்றிரவுக்குள் முழு அளவில் சீரடைந்து விடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானிகளின் வேலைநிறுத்தம் செய்த போது, நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

விமானிகள் அனைத்தும் பணிக்குத் திரும்பியுள்ள போதிலும், உரிய விமானங்கள் ஒதுக்கீடு தாமதமாவதால், ஒரு சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

முக்கிய விமான நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஏர் இந்தியா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

விமானிகளின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஏர் இந்தியா கவுன்டர்களுக்கு பயணிகள் சென்று தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சுமத்ராவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு

இந்தோனேஷிய,  சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவாக இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லையென வளி மண்டல திணைக்களம்  தெரிவித்துள்ளது.

மலேஷியா,  சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது தெரிந்ததே. 

மத வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்து – அமைச்சர் பந்துல தகவல்

300909cement.pngமத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு குறைந்த விலையில் சீமெந்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மதத்தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்தை வழங்கும் திட்டம் அரசாங்க கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ்; வணக்கஸ்தலங்களுக்குத் தேவையான 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றை சந்தை விலையினை விட 120 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தது 50 பொதிகளைக் கொள்வனவு செய்தாலே இச்சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் தமது விண்ணப்பங்களை கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

சமோவோ தீவுகளில் சுனாமி – 100 பேர் பலி

300909samova_tsunamy.pngபசிபிக் பெருங்கடலில் உள்ள  சமோவோ மற்றும் அமெரிக்கன் சமோவோ ஆகிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் 100 பேர் பலியானார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக் கூட்டமே இந்தத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் சமோவா என்ற நாடும் அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோவா என்ற தீவும் அடங்குகின்றன்

இவற்றின் சில பகுதிகளில் நேற்று 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி வந்ததால்,  நிலப்பரப்புக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையோர விடுதிகளில் நீர் புகுந்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்திருக்கின்றன.

வருட இறுதிக்குள்; தாண்டிக்குளம் முதல் முகமாலை வரையான ரயில் சேவைகள் – போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை

train0000.jpgஇவ்வருட இறுதிக்குள்; தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.  யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி காங்கேசன்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.

போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா இன்று உத்தியோகபூர்வமாக இதனைக் கையளிக்கின்றார்

மிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடல் பகுதி பாதுகாப்புக்கு இந்தியா, பாகிஸ்தான் கூட்டுப் படை – பாகிஸ்தான் யோசனை

210909flag.jpgகடல் வழியாக வந்து தீவிரவாதிகள் தாக்குவதைத் தடுக்கும் வகையில், கடல் பகுதி பாதுகாப்புக்கு கூட்டுப் படை அமைக்கலாம் என பாகிஸ்தான் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில்,  பாகிஸ்தானின் கராச்சி பகுதியிலிருந்து கடல் வழியாக மும்பை சென்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 183 பேர் பலியாகினர். இந்நிலையில்,  கடல் கொள்ளைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு, கராச்சி நகரில் திங்கள்கிழமை நடந்தது. இக்கருத்தரங்கை துவக்கிவைத்த பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் நோமன் பஷீர்,  பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மும்பை தாக்குதலை அடுத்து,  கடல் பகுதி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், இந்தியா,  பாகிஸ்தான் இரு நாட்டு வீரர்களையும் கொண்ட கூட்டுப் படை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்திருக்கிறோம் என்றார்.

மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய படகுகளை,  விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் படகுகளை ஓட்டிச் சென்றவர்களை தற்போது தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை கடல் கொள்ளை அதிகமாக நடந்துள்ளது. 33 கப்பல்களை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 140 தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

வட கொரிய அரசியலமைப்பில் மாற்றம்!

வட கொரியா அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா,  தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக,  தென் கொரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கம்யூனிச நாடான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல் (67). தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பகைமை போக்கை மேற்கொண்டுள்ள இந்நாடு ஏராளமான ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் குவித்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, சீனா,  மியான்மர்,  உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் தோழமை நாடாக விளங்கி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கிம் ஜாங் இல் நோய் வாய்ப்பட்டார். மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் இவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது மூன்றாவது மகனிடம் ஆட்சியை ஒப்படைக்கும் வேலைகள் நடக்கின்றன. இளம் தலைமுறையிடம் ஆட்சி மாற இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் கடந்த ஏப்ரலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மாற்றத்துக்கு ஏற்ப கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா, தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக,  தென் கொரிய் தெரிவித்துள்ளது.