கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 30 பேர் பலியானார்கள். இவர்களில் சிலர் வெளிநாட்டினர். 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தேக்கடியில் படகு குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலம்.
இன்று மாலை ஒரு இரண்டு அடுக்குப் படகில் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி சென்றனர். அப்போது யானைக் கூட்டத்தைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் யானைகளை நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக படகின் ஒரே பகுதியில் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். நீரில் மூழ்கி பலர் பலியானார்கள். இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 35 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் இருந்த அனைவருமே நீரில் மூழ்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்புப் பணிக்கு உதவுமாறு கடற்படைக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன. தற்போது இருள் சூழ்ந்து விட்டதால் மீட்புப் பணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.