ஏர் இந்தியா விமானிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அனைத்து விமானிகளும் இன்று பணிக்குத் திரும்பியதால், விமான சேவை சீரடைந்துள்ளது.
இதனால் ஏர் இந்தியா விமானத்தில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுடன் விமானப் பயணம் மேற்கொண்டதாக ஏர் இந்தியா வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏர் இந்தியா விமான சேவைகள் இன்றிரவுக்குள் முழு அளவில் சீரடைந்து விடும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானிகளின் வேலைநிறுத்தம் செய்த போது, நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
விமானிகள் அனைத்தும் பணிக்குத் திரும்பியுள்ள போதிலும், உரிய விமானங்கள் ஒதுக்கீடு தாமதமாவதால், ஒரு சில விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.
முக்கிய விமான நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஏர் இந்தியா பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
விமானிகளின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு தங்கள் நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், ஏர் இந்தியா கவுன்டர்களுக்கு பயணிகள் சென்று தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.