அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சவூதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்: பிரதியமைச்சர் பைலா நேற்று ஜித்தா அதிகாரிகளுடன் பேச்சு

சவூதி அரேபியாவின் கந்தகார் பாலத்துக்குக் கீழே தஞ்சமடைந்துள்ள இலங்கையர் தொடர்பாக பிரதி வெளி விவகார அமைச்சர் ஹுசைன் பைலா நேற்று ஜித்தாவிலுள்ள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் இங்கு சென்றுள்ளனர். இதேவேளை அங்கு தஞ்சமடைந்துள்ள இலங்கையருக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்கியிருப்பதற்காக இரண்டு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் ஜித்தா செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலத்திற்குக் கீழ் தஞ்ச மடைந்திருப்பவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  என்றாலும் சவூதி அரேபியாவில் ஹஜ் விடுமுறையையிட்டு எதிர்வரும் 2ம் திகதிக்குப் பின்னரே இதற்கான நடவடிக்கைகள் சாத்தியமாகுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்கக் கடலில் தாழமுக்கம்; இன்றும் இடியுடன் மழை

rain2.jpgவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் ஊவா பகுதிகளிலும் வடமத்திய பகுதிகளிலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இடைக்கிடையே இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்வதுடன் கிழக்கு கடல் பகுதி சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதியையும் பாதிக்கும் என தமிழ்நாடு வானிலை அவதான மையமும் அறிவித்துள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ். ஆர். ரமணன் கூறியதாவது:-

வங்க கடலில் இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங் களிலும், புதுச்சேரியிலும் இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும், ஒன்று அல்லது 2 இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளார்

மட்டக்களப்பில் அமைச்சர் முரளி தலைமையில் சு. க. கலந்துரையாடல்

கிழக்கில் ஸ்ரீல. சு. கவை பலப்படுத்தும் வகையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது.

ஸ்ரீல. சு. க. பொதுச் செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண ஸ்ரீல. சு. க. அமைப்பாளர் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை அதிபர் மரணம்

பன்றிக் காய்ச்சலினால் குருநாகலில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் வென்னப்புவவில் மற்றுமொரு பாடசாலை மூடப்பட்டுள்ளது. குருநாகல் மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.டபிள்யூ.குணதிலக என்ற 58 வயதுடைய பாடசாலை அதிபரே பன்றிக் காய்ச்சலினால் இறந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். அவரது மகளுக்கு நேற்று திருமணம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதேவேளை, இவரது மரணம் பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்டதென குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.கே.சேனநாயக்க உறுதிப்படுத்தியதுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் இத்தொற்றுக் காரணமாக 28 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வென்னப்புவ தங்கொட்டுவ பாலிகா வித்தியாலயத்தின் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் பன்றிக் காய்ச்சல் தொற்றினால் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இப்பகுதியில் பல பாடசாலைப் பிள்ளைகள் இந் நோய்த் தொற்றுக்குள்ளானதல் நேற்று சனிக்கிழமை முதல் மூடப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை திங்கள் முதல் மத்திய மாகாண பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பாடசாலைகளை மூடும் விவகாரம் கல்வியமைச்சர் மத்திய மாகாண முதலமைச்சருடன் மோதல்

மத்திய மாகாணப் பாடசாலைகள் மூடப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மத்திய மாகாணப் பாடசாலைகளை மூடிவிடும் அறிவிப்பு தொடர்பாக கல்வியமைச்சிடம் கலந்தாராயப்படவில்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

பாடசாலைகளை மூடிவிடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பது தொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சர் பிரத்தியேகமான உரிமையை கொண்டிருக்கவில்லை என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அதேசமயம் இந்த விடயம் தொடர்பாக மத்தியமாகாண முதலமைச்சருக்கு தான் அறிவிக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.  வைரஸ் காய்ச்சல் (பன்றிக் காய்ச்சல்) அச்சுறுத்தல் சாத்தியத்தையடுத்து நவம்பர் 23 தொடக்கம் டிசம்பர்9 வரை மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மூடப்படுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா அறிவித்திருந்தார்.

கொழும்பில் குடாநாட்டு மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பு அனுமதியை கேட்கும் பொலிஸார்

யாழ்.குடாநாட்டிலிருந்து ஏ9 வீதியூடாகக் கொழும்புக்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டபோதும் அவர்கள் கொழும்பில் தங்குவதற்கு அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை பொலிஸார் கேட்கின்றனர். இதுவரை காலமும் கொழும்பு வருபவர்கள் தமது பாதுகாப்பு அனுமதித்துண்டை (கிளியறன்ஸ்) பொலிஸ் நிலையங்களில் காண்பித்து வதிவிட பொலிஸ் பதிவை மேற்கொண்டனர்.

தற்போது அந்த பாதுகாப்பு அனுமதித்துண்டை கொழும்பில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் கேட்பதாக அங்கிருந்து வருவோர் கூறுகின்றனர். பாதுகாப்பு அனுமதி நீக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையின் போட்டோ பிரதியைக் காண்பித்து தற்போது குடாநாட்டு மக்கள் பயணம் மேற்கொள்ளும் முறையை பொலிஸ் நிலையங்களில் கூறினால் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

அத்துடன், இங்குள்ள சில கிராம சேவையாளர்கள் பொலிஸ் பதிவை உறுதிப்படுத்த யாழ்ப்பாணத்தில் உள்ள கிராம சேவையாளரின் கடிதத்தையும் கேட்கின்றனர். இவ்வாறான நிபந்தனைகளால் குடாநாட்டு மக்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடாநாட்டிலிருந்து வருபவர்கள் கொழும்பில் தங்குவதற்கு பொலிஸ் பதிவை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளுர் விமான சேவையில் புதிதாக 6 விமானங்கள் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

chamalrajapaksaa.jpgமஹிந்த சிந்தனையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்ப உள்ளுர் விமான சேவையின் மேம்பாடு கருதி 6 புதிய சிறிய விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுமார் 50 பேர் பயணம் செய்யக்கூடிய எம்.ஏ-60 என்ற இந்த சிறியரக விமானங்களை கொள்வனவு செய்ய 105 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியான சுழ்நிலை நிலவுவதால் விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  சீன அரசாங்கம் 5 வருடங்களில் திருப்பச் செலுத்தக் கூடிய வகையில் கடனுதவியாக இந்த விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் சுதந்திரமாக வெளியே நடமாடலாம்.

வன்னி நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படுமென ஜனாதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ சற்று நேரத்துக்கு முன் மெனிக் பாம் நிவாரண முகாமில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பு அனைவரும் முகாம்களிலிருந்து சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏ (எச் 1 என் 1): புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி

influenza-a.jpgஉலக சுகாதார நிறுவனத்தால் சிபாரிசு செய்யப்பட்ட ஏ (எச்1 என்1) வைரஸ¤க்கான புதிய தடுப்பூசிகள் உடனடியாக இறக்குமதி செய்யப்படவுள்ளன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் புதிய தடுப்பூசிகள் இலங்கைக்குக் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

ஏ (எச்1 என்1) வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 258 பேர் இவ் வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை உடனடியாகத் தடுக்கும் நோக்குடன் புதிய ஏ (எச்1 என்1)  தடுப்பூசியை இறக்குமதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய்த்தடுப்பு நோய் அறிகுறி தொடர்பான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏ (எச்1 என்1) வைரஸ் பீடிக்கப்படும் நபர்கள் தொடர்பாக வயதெல்லைகள் பற்றி அறிவித்துள்ளது.

கர்ப்பிணித்தாய்மார், 6 மாதங்களுக்குக் குறைந்த குழந்தைகள், முதல் 24 வயதுடையவர்கள், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள், கோமா நிலையிலுள்ளவர்கள் போன்றோர் இவ்வைரஸால் பீடிக்கப்படக் கூடியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் உண்டாதல், மேல் வலி தலையிடி, என்பவற்றுடன் சிறுவர்களாயின் வயிற் றோட்டம், வாந்தி போன்ற நோய் அறி குறிகள் இருப்பின் உடனடியாக டொக்டர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க ஜெனரல் பொன்சேகாவிடமிருந்து சமிக்ஞை

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவாலாக நிறுத்தப்படுவாரென்று பரவலான ஊகத்தின் மத்தியில் தனது பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் போராடப்போவதாக நேற்று வெள்ளிக்கிழமை சூளுரைத்திருக்கின்றமை வேட்பாளராக தான் நிற்கப்போகிறார் என்பதை அவர் விரைவில் அறிவிக்கும் சாத்தியத்தை அதிகரித்திருக்கிறது.

படையினருக்கு ஜெனரல் பொன்சேகா எழுதியுள்ள பிரியாவிடைக் கடிதத்தில் நிழல்போன்று உங்கள் பக்கத்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் புகழுக்கு மாசு கற்பிக்க எவருக்கும் இடமளிக்காதீர்கள். அத்துடன் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தவும் இடமளியாதீர் என்று படைவீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விலாசமிட்டு எழுதிய கடிதத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை நேற்று குறிப்பிட்டுள்ளது.குறிப்பிட்ட சிலர் எம்மை அவமதிக்க முயற்சிக்கின்ற போதிலும் யுத்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் நாங்களே என்பதை நாம் மனதில் கொண்டிருக்க வேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் துரிதமாக இழந்து கொண்டிருக்கும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் நான் உறுதிப்பாட்டுடன் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன் என்று படையினருக்கு எழுதிய பிரியாவிடைக் கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை நேற்றுத் தெரிவித்தது.