கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நடிகர் விஜய்க்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி – காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

rahul_vijay.jpgகாங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என,  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர்  திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யு.எஸ்.ஓபன்: சானியா-கோவர்ட்சோவா மோதுகின்றனர்

sania-mirza.jpgவரும் திங்களன்று அமெரிக்காவில் துவங்கும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை ஆல்கா கோவர்ட்சோவாவுடன், சானியா மிர்சா மோதுகிறார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் 2-வது சுற்றுக்கு மேல் முன்னேற கடுமையாக திணறி வரும் சானியா மிர்சா தற்போது 71-வது தர நிலையில் உள்ளார், கோவர்ட்சோவா 64-வது தர நிலையில் உள்ளார்.

இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து 2 முறை விளையாடியுள்ளனர். இருவரும் ஒரு போட்டியில் ஒருவரையொருவர் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் இந்த முறை முதல் சுற்றே சற்று கடினமாக அமைந்திருக்கும் வேளையில் போராடி சானியா வெற்றி பெற்றாலும் இரண்டாவது சுற்றில் சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகளை வீழ்த்தி விரைவில் நட்சத்திர தகுதியை நோக்கி முன்னேறி கொண்ரிருக்கும் 10-வது தர நிலையில் உள்ள இத்தாலி வீராங்கனை ஃபிளாவியா பன்னெட்டாவை சந்திக்க நேரிடும்.

எனவே இந்த முறையும் இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அன்றைய தினத்தில் சானியாவின் ஆட்டம் பன் மடங்கு உயர்ந்தால் பன்னெட்டாவை அவர் வீழ்த்தலாம்.

அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை

santhanam-nuclear_blast.jpgஇந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.

அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.

போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.

ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படியும் இந்தியாவில்..

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் டோனியுடன் ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்காக தனக்கு வருமானம் தந்த ஒரே சி.டி. கடையையும் விற்று போண்டி ஆகி உள்ளார் ஒரு வாலிபர். அவரது பெயர் ரவீந்திரகுமார் சைனி. 23 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் சஹராங்பூரை சேர்ந்தவர்.

இவருக்கு விரைவில் சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இருவரும் டோனியின் தீவிர ரசிகர்கள் என்றாலும் சோனியாவை விட சைனிக்கே டோனி என்றால் கொள்ளைப் பிரியம். ‘டோனியுடன் இணைந்து உங்களால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று சோனியா ஒரு நாள் சவால் விட்டார். சவால் மட்டுமல்ல, தனது ஆசையும் அது தான் என்று சைனியிடம் கூறினார்.

இதையடுத்து வருங்கால மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ. 25 ஆயிரம் முதலீடு போட்டு ஆரம்பித்த கடையை வெறும் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று விட்டு டோனியை பார்க்க ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கிளம்பினார் சைனி. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள டோனியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். டோனியின் சகோதரர் நரேந்திராவை சந்தித்து பேசியும் கூட, டோனியை பார்க்க இயலவில்லை. இப்படி 35 நாட்கள் தவம் கிடந்த அவரது கனவை கடைசியில் சில பத்திரிகையாளர்கள் நிறைவேற்றினர்.

அவர்கள் உதவியுடன் மும்பைக்கு புறப்பட இருந்த டோனியை ராஞ்சி விமான நிலையத்தில் சைனி சந்தித்தார். அப்போது தனது வருங்கால மனைவியின் சவால் மற்றும் ஆசையைபற்றி எடுத்து கூறி அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தனது வருங்கால மனைவிக்காக தான் நடத்திய கடையை விற்று ஒரு மாத காலம் அலைந்து திரிந்து இதை செய்ததில் சைனிக்கு துளி கூட வருத்தம் இல்லையாம். புகைப்படம் எடுத்து கொண்ட தகவல் அறிந்ததும் சோனியா ரொம்ப ஆச்சரியப்பட்டதாக சைனி தெரிவித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை அவருடன் நேரில் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கொண்டு வந்த பணம் எல்லாம் காலியாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ராஞ்சியில் ஜெய்பால்சிங் மைதானம் அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  அது சைனியின் ஊரைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடை. ரயில் டிக்கெட் எடுக்க பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவேன் என்றும் சைனி தெரிவித்தார்.

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் தற்போது குழந்தைகளுடன் மீட்பு

அமெரிக்காவில் பெண்ணொருவர் சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த இடம் எனத் தெரியும் வீடொன்றை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.

11 வயதிருந்தபோது இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். ஜெய்சி டூகர்ட் என்ற இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவரும் இவ்வளவு காலமும் கட்டடங்கள் மற்றும் கூடாரங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிள்ளைகள், ஜெய்சியைக் கடத்தி அடைத்துவைத்திருந்தவருக்கு பிறந்த குழந்தைகள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜெய்சியின் குழந்தைகளுக்கு தந்தையென குற்றஞ்சாட்டப்படுபவர்
இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ சென்றதில்லை என பொலிசார் கூறுகின்றனர். 1991ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஜெய்சீ காரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

ஜெய்சி,கடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுபவருடன் பிள்ளைகளோடு அவர்கள் தங்கியிருந்த சான்ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் நிலையம் வரும் வரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாதிருந்தது.

‘மரணத்தின் வாசனை’, ‘பலி ஆடு’ புத்தக வெளியீடுகள்

ஈழத்தின் அறியப்பட்ட கவிஞரும் விமர்சகருமான கருணாகரனின் கவிதைகள் மற்றும் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய நூல்களின் வெளியீடு வெள்ளிக்கிழமை கனடா – ஸ்காபரோ சிவிக் சென்ரரில் மாலை 6 இலிருந்து 9 மணி வரை இடம்பெற இருக்கிறது. கருணாகரனின் தொகுதி போர் தொடங்க முன் வன்னியுள்ளிருந்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்.Book_Launch_28Aug09

இலங்கை 339 ஓட்டங்கள் முன்னிலை

2nd-test.jpgகொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து  ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள்  எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.

மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள்  எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

பாக். தற்கொலை தாக்குதல்-50 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை  படைதாக்குதல்  நடத்தினர்.

அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா  இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான்  போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.

ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல் செயலகம் இன்று அறிவிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.  இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் மாகாணத்திலுள்ள காலி, மாத்தறை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர அங்கீகரிக்கப்பட்ட ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என்பனவும் இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தென் மாகாண சபைக்கு காலி மாவட்டத்திலிருந்து 23 பேரும் மாத்தறை மாவட்டத்திலிருந்து 18 பேரும் ஹம்பந்தோட்டை மாவட்டத்திலிருந்து 12 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தென் மாகாண சபை தேர்தல் ஐ.ம.சு.மு., ஐ.தே.க. வேட்பு மனுத் தாக்கல்

election_fingercolur.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும்,  ஐக்கிய தேசியக் கட்சியும் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மூன்று மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. மக்கள் விடுதலை முன்னணி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை நேற்று சமர்ப்பித்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும் இறுதி தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவிருக்கின்றது. அதேநேரம்,  இம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவுற்றது.

இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சை குழுக்களும்,  மாத்தறை மாவட்டத்தில் பத்து அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேச்சைக் குழுக்களும், காலி மாவட்டத்தில் எட்டு அரசியல் கட்சிகளும்,  இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

அதேவேளை,  இம்மாகாண சபைத் தேர்தலுக்காக இன்றும் சில கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.