உள்நாட்டுச் செய்திகள்
உள்நாட்டுச் செய்திகள்
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற தூள் வியாபாரி மும்பையில் கைது !
இலங்கையில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுகின்ற போது, கடல் மார்க்கமாகத் தப்பி வெளிநாடு சென்றுவிடுகின்றனர் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அவ்வாறு தப்பித்துச் சென்ற முக்கிய தூள் வியாபாரியும் பாதாள உலகத் தலைவர்களில் உருவருமான பொடி லெசி என அறியப்பட்ட ஜனித் மதுசங்க என்பவர் மும்பையில், சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் ஆவாகுழு வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நல்லநாதன் பிரசன்னா கனடாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
மீனவர் பிரச்சினையில் பா உ சிறிதரன்: ‘ரீல் விடுகின்றார்’ மீனவர் சங்கம் – ‘மக்களை ஏமாற்றுகின்றார்’ டக்ளஸ் தேவானந்தா
மீனவர் பிரச்சினையை தமிழ்நாட்டில் நிற்கும் போது கதைக்காமல் இங்கு திரும்பி வந்தபின் நேரம் கேட்டிருக்கிறேன் கதைப்பம் என்பதெல்லாம் பகட்டு என்றும் மீனவர்களுக்கு ரீல் விட்டு வாக்குவாங்கப் பார்க்கிறார், மீனவர்களுக்கு காதுகுத்த முனைகிறார் என்பது போல் பதில் அளித்துள்ளார் யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் பிரான்ஸிஸ் ரட்ணகுமார். பா உ சிறிதரன் தமிழக முதல்வருடன் நேரத்தைப் பெற்று மீனவர் பிரச்சினையைத் தீர்த்துக் காட்டட்டும், நாங்கள் அவரை வரவேற்போம் என்றும் பிரான்ஸிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்தார். மேலும் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தங்களுடைய பிரச்சினையை தமிழக முதல்வருடன் கதைக்காததையும் ரட்ணகுமார் குறைப்பட்டுச் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர்களை பா உ சிறிதரன் ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அயலகத் தமிழர் தின விழாவுக்கு போயிருந்த போதும் மீனவர்களுடைய பிரச்சினையைப் பற்றிப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தள்ளார். தான் அவ்விழாவுக்குச் சென்றிருந்தால் நிச்சயமாக மீனவர் விடயம் பற்றிப் பேசியிருப்பேன் என்பதையும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்கள் எதையோ நம்பி இவர்களுக்கு வாக்குபோட்டு ஏமாந்துவிட்டார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும் சட்ட விரோத மீன் பிடியைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கழக்கு மாகாண அளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பா உ சிறிதரனை கட்சியிலிருந்து நீக்க, திருமலையில் தமிழரசுக் கட்சி கூடுகின்றது ! பா உ சிறிதரன் கலந்துகொள்ளவாரா ?
நாளை 18, திருகோணமலையில் தமழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி, உள்ளுராட்சித் தேர்தல், கட்சியின் முடிவுகளுக்கு புறம்பாகச் செயற்பட்டவர்கள் தொடர்பிலான முடிவுகள், கட்சி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் வைக்கப்படும் தமிழர் பேரவைத் தீர்வுத் திட்டம் தொடர்பான கட்சி நிலைப்பாடு, முன்னைய மட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என்பன பற்றி ஆராயப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா உ சிறிதரன் கட்சி நிலைப்பாடுகளுக்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது, மற்றும் கட்சி நிலைப்பாடுகளுக்கு புறம்பாக நடந்துகொள்வதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டு, பா உ சிறிதரனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட குழப்பநிலைகளாலும் பா உ சிறிதரனுக்கு ஆதரவு தெரிவக்கக் கூடியவர்கள் கட்சியிலிருந்து ஏற்கனவே வெளியேறியும் உள்ளனர். கட்சி மத்திய குழவிற்குள் தற்போது பா உ சிறிதரனின் ஆதரவுத்தளம் என்ன நிலையில் இருக்கின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நாளைய மத்திய குழக் கூட்டத்தில் பா உ சிறீதரன் கலந்துகொள்ளமாட்டார் எனவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஜனவரி 18 பா உ சிறிதரனின் முடிவெடுக்கும் நாளாக அமையலாம், இல்லையேல் இந்த இழுபறி இன்னும் தொடரலாம். எம் ஏ சுமந்திரன் மீதான அடுத்த கட்டத் தாக்குதலுக்கு புலம்பெயர் அனுசரணையில் இயங்கும் ஊடகங்கள் தயாராகி வருகின்றன.
கூட்டுக் களவாணிகள்: மருத்து மாபியாக்களும் ஊடகவியலாளர்களும் – சிஐடி விசாரணைகளை நாடும் சுகாதார அமைச்சு
கூட்டுக் களவாணிகள்: மருத்து மாபியாக்களும் ஊடகவியலாளர்களும் – சிஐடி விசாரணைகளை நாடும் சுகாதார அமைச்சு !
மருந்து மாபியா நிறுவனங்களிடமிருந்து மாதந்தோறும் சம்பளம் பெற்று, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும், இது தொடர்பான உண்மைகளை கண்டறிந்த பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறைபிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிகையாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்குப் பதிலாக சேவைகளை வழங்கும் மருந்து நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்றும், பணத்திற்கு ஈடாக பல்வேறு பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ள விஜேமுனி, சட்டப்படி செயல்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தான் அவர்களின் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் விஜேமுனி, கடந்த காலங்களில், சில மருந்து நிறுவனங்கள் நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தன என்றும், இந்த ஏகபோகத்தை உடைத்து பல நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்ததன் மூலம், சில மருந்துகளின் விலை சுமார் 200 மடங்கு குறைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் சீன விஜயம்: இலங்கைப் பொருளாதாரத்தை நிமிர்த்த தோள் கொடுக்கின்றது சீனா!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினோபெக் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கீழ் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த இந்த புதிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், ஹம்பாந்தோட்டையின் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ் வாதாரத்தையும் பலப்படுத்தும். அத்துடன் முழு இலங்கை மக்களுக்கும் இதன் பலன் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்படுகிறது.
தேர்தல் பிரச்சார காலங்களில் திருகோணமலை எண்ணெய்குதங்கள் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்திருந்ததுடன் எமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சூழலை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இதேவேளை சீனாவின் முன்னணி நிறுவனங்களுடன் முதலீட்டு அமர்வு ஒன்றில் பேசியிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்ய சீனாவின் முன்னணி நிறுவனங்களை அழைத்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார இலஞ்சத்துக்கு துணை போகின்றார் – சுமந்திரன் குற்றச்சாட்டு !
பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன் ‘’நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. அதிகரித்த மதுபான பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டிற்கு நல்லதல்ல’’ என தெரிவித்தார்.
முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள் இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள் தான் எனக் குறிப்பிட்டார் எம் ஏ சுமந்திரன். பா உ சிறிதரனுக்கு ஆப்பு வைப்பதற்கு சுமந்திரன் ஆதாரம் கோருகின்றார் என சில தமிழ் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
பழிக்குப் பழி உயிருக்கு உயிர்: சட்டத்தை கையில் எடுத்து மன்னார் நீதிமன்றத்தின் முன் இருவர் சுட்டுக்கொலை !
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2022 ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளாத சமூகமாக, சர்வசாதாரண பிரச்சினைககும் வன்முறையூடாக தீர்வு காணும் சமூகமாக தமிழர்கள் மாறி வருகின்றார்கள் என்ற அச்சம் அடுத்து வருகின்ற சந்ததியினர்க்கும் மிகுந்த ஆபத்தானதாக அமைய உள்ளது. ஒரு மாட்டுவண்டிச் சவாரி நான்கு குடும்பங்களின் தலைவிதியை தலைகீழாகப் புரட்டிப்போட்டதை புரிந்து கொள்ளாமல், அதனை வைத்து அரசியல் செய்ய முற்பட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் குரல்தரவல்லவர்களில் ஒருவரான சட்டத்தரணி சுகாஸ். இந்த வன்முறைகளின் பின்னால் சட்டத்தரணிகளின் பங்களிப்புகளும் உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது. வன்முறையாளர்களை பிணையில் வெளியே கொண்டுவரும் சுகாஸ் போன்றவர்கள் அவ்வன்முறையாளர்களை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும் பலமான குற்றச்சாட்டுக்கள் யாழில் உள்ளது.
அண்மையில் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு முன்பாகவும் சாட்சியமளிக்க வருகை தந்த நபர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. பாதுகாப்பு தேடி சரணடையும் மக்களின் இறுதி முடிவிடமாக நீதிமன்றங்கள் காணப்படும் நிலையில் நீதிமன்றங்களுக்கு இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் என்.பி.பி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையும் கவனிக்கத்தக்கது.
பரீட்சை கட்டணத்தை நீக்கவும் – யாழ்.பா.உ ரஜீவன் பாடசாலைகள் நீதி கேட்கக் கூடாது !
வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாடசாலைகள் பெற்றோரிடம் மாணவர்களிடம் நிதி கேட்கக் கூடாது என முன்னர் ஆளுநர் வேதநாயகன் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பா.உ ரஜீவன் அரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில், வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றார். இது அனைவருக்கும் இலவச கல்வியை உறுதிப்படுத்தும் வழி. 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த தேவையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க இது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சை கட்டணங்களால் மட்டுமன்றி பாடசாலை அபிவிருத்தி கட்டணம், அனுமதிக்கான அன்பளிப்பு கட்டணம் என பல வகைகளில் மாணவர்களின் பெற்றோரிடமிருந்து பாடசாலைகள் அறவிடுவதும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து நகர பாடசாலைகளிலும் வாடிக்கையாகியுள்ளது. புதிதாக மாணவர்களை உள்ளெடுக்கும் போது சில ஆயிரங்கள் என தொடங்கி லட்சம் ரூபாய் வரை அறவிடப்படுகின்றது. இதனால் திறமை இருந்தும் நகர மற்றும் வளங்கள் நிறைந்த பாடசாலைகளை மாணவர்கள் அணுக முடியாத ஓர் சூழல் உருவாகியுள்ளது. வறுமைக்குட்பட்ட மாணவர்களை உள்ளீர்க்கும் நோக்குடனேயே C.W.W கன்னங்கரா இலவச கல்வி செயற்திட்டத்தை கொண்டு வந்த போதும் கூட அக்கல்வி முறை ஏழைகளுக்கு இன்னமும் எட்டாக்கனியாகி வருகிறது.
அரசியல் மயப்படும் வாள்வெட்டு: தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
நேற்று சுன்னாகம் மற்றும் கொட்டடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு எதிராக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது இருவர் காயப்பட்டதாக தெரியவருகின்றது. சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் க இளன்குமரன் ஆகியோர் விரைந்து நிலைமைகளைப் பார்வையிட்டனர். தொலைபேசியில் அச்சுறுத்திவிட்டு பத்து நிமிடங்களுக்கு உள்ளாக வந்து இந்த வாள்பெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் உள்ளுரில் உள்ள சமூகப் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இந்த சமூகவிரோத சக்திகளால் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இந்த சமூக விரோத சக்திகளுக்குப் பின்னால் இவர்களைப் பிணை எடுத்துவிடும் சட்டத்தரணிகளின் அரசியல் செல்வாக்கு இருப்பதாக நீண்டகாலமாகக் குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் யாழ் சித்தன்கேணியில் வன்முறைத் தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவாகிப் பின்னர் சரணடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. சில மாதங்களுக்கு முன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்த மணிவண்ணனின் மான் அணியினர் நடத்திய கூட்டத்திலும் வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலும் அரசியல் காரணங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என முன்னாள் மேயர் மணிவண்ணன் குற்றம்சாட்டியிருந்தார். வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா தேசம்நெற்க்கு அன்றைய நாட்களில் வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிணை எடுக்கும் ஆவா குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
கிளிநொச்சியில் கள்ள மண் ஏற்றுபவர்கள், கள்ள மரம் வெட்டுபவர்கள், காசிப்பு காச்சுபவர்கள் எல்லோரும் தமழரசுக் கட்சி பா உ சிறிதரனுக்கு வேண்டப்பட்டவர்கள் என அப்பகுதிகளில் குற்றச்சாட்டுகள் உள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை பொதுக் கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிக்கு எதிராக இந்த சமூகவிரோத சக்திகளே ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
தான் தாக்கப்பட்டதற்கு சமூகவிரோத சக்திகளை அம்பலப்படுத்தியதே காரணம் என்றும் பொலிஸாரும் சமூகவிரோத சக்திகளும் இணைந்து செயற்படுவதாகவே மக்கள் நம்புகிறார்கள் என்றும் சூழலிலயல் ஊடகவியலாளர் மு தமிழ்செல்வன் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
அண்மையில் பா உ இளன்குமரன் முன்னாள் பா உ அங்கஜனின் தந்தை காணி ஒன்றைப் பிடிக்க முயன்ற தகராற்றில் அவரோடு முரண்பட்ட காணொலி ஒன்று வெளியாகி இருந்தது. அதன்பின் சுன்னாம்புக்கல் கடத்த முயன்ற சம்பவத்தை இளன்குமரன் அம்பலப்படுத்தியதும் தெரிந்ததே. இந்தக் காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியை அரசியல் ரீதியில் பழிவாங்கா முடியாமல் அடியாட்களை ஏவி வன்முறையை அரசியல்மயப்படுத்தும் போக்கு வடக்கில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகட்டங்களிலும் கள்ளக் கடத்தல், தெருச்சண்டித்தனங்களில் ஈடுபட்டவர்களே போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களிடம் அரசியல் தெளிவு இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்த முடிவைச் சந்தித்ததற்கு இவைகளும் ஒரு காரணம். இன்று மீண்டும் சமூகவிரோத சக்திகளிடமே தமிழ் தேசிய அரசியல் போய் சரணடைந்துள்ளது. ஆவா குழுவில் உள்ள பிரசன்னா முதல் பல்கலைக்கழகத்தில் உள்ள ரகுராம் வரை தங்கள் சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் தேசியம் போர்த்துவதே அவர்களுக்குப் பாதுகாப்பு. ஆனால் மக்களுக்கும் மாணவிகளுக்கும் சீரழிவு.









