உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த 

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

 

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் நிரூபிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன். தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது இராணுவம் அந்த முடிவை செயல்படுத்தியது. போரின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

புலிகளை வென்றதை வைத்து மகிந்தவும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடிகொடுக்க நேரம் பார்த்து இருந்தனர். அதற்கான வாய்ப்பை பிரித்தானிய அரசின் தடையுத்தரவு அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதே போல் மாறி மாறி இனவாதம் பேசி அரசியல் நடத்துவதற்கு தடையாக உள்ள தேசிய மக்கள் சிக்தியை கவிழ்ப்பதற்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை தூண்டிவிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை கவிழ்க்கலாம் என பல்வேறு முயற்சிகளையும் எடுக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தலில் மண் கவ்விய சிங்கள தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு உள்ளுராட்சி சபை. வாயில் வந்தது எல்லாம் பேசி களமாடுகின்றனர். மே ஆறு பலருக்கும் பல கட்சிகளுக்கும் இறுதி ஊர்வலமாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலவசக் கல்வியும் வேணும் ! போட்டிப் பரீட்சை இல்லாமல், அரச வேலையும் வேணும்! யாழ்.பல்கலை மாணவர்களின் காலத்துக்கு ஒவ்வாத கோரிக்கை !

இலவசக் கல்வியும் வேணும் ! போட்டிப் பரீட்சை இல்லாமல், அரச வேலையும் வேணும்! யாழ்.பல்கலை மாணவர்களின் காலத்துக்கு ஒவ்வாத கோரிக்கை !

யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளை தவிர்த்து, கொத்தலாவல மற்றும் வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசுத்தொழிலில் இணைப்பதை அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் எனவும் இலவசக் கல்வியால் உருவாகும் அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளும் அரசுத்தொழிலுக்கு உடனடியாக இணைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியை வழங்கும் அரசாங்கமே தங்களுக்கு அரச வேலைகளைப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அரசதுறையில் தேவைக்கு அதிகமாக உள்ள 50 வீதமான அரச அலுவர்களைக் குறைப்பதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில் இலவசக் கல்வியும் வேணும் போட்டிப்பரீட்சை இல்லாமல் அரச வேலையும் வேணும் என்று மாணவர்கள் போராடுவது பலரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது தேசியக் கொடியை இறக்குகிறார்கள். பல்கலைக்கழகத்தால் வெளியே வந்தது அரசாங்க வேலை வேணும் என்கிறார்கள் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதனிடையே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்த பிரயத்தன முயற்சிகளை முன்னெடுத்தனர். இறுதியில் மேலதிக பொலிஸாரையும் வரவழைத்ததுடன் மாணவர்கள் கலைந்து சென்றதாக அறிய முடிகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி ஊடகவியலாளருக்கு கருத்துதத் தெரிவிக்கையில், தனியார்தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கற்பவர்களை மிகத் தரக்குறைவாக, அவர்கள் பணத்தைக் கொடுத்து பட்டம் பெற்றவர்கள் என்ற தோரணையில் அதாவது அவர்கள் கல்வி கற்காமல் லஞ்சம் கொடுத்து பட்டத்தைப் பெற்றது போன்று குறிப்பிட்டார். தற்போது அறிமுகப்படுத்துகின்ற ஐகியூ எக்ஸாம் ஐந்தாம் ஆண்டுக்குரியது என்றும் மட்டம்தட்டிய அவர், அந்தப் பரீட்சை இல்லாமல் தங்களை அரச வேலைக்கு எடுக்க வேண்டும் என்று கோருகின்றார். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் ஐக்கியூ பரீட்சையை செய்வதில் என்ன தடை என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

இங்குள்ள பிரச்சினை என்ன வென்றால் இவர்களுக்கு தாங்கள் பல்கலைக்கழகம் புகுந்துவிட்டோம் பட்டம் பெற்றுவிட்டோம் என்ற தலைக்கணம் இருக்கின்ற அளவுக்கு அவர்கள் தங்கள் அறிவுப்புலமையை இன்றைய சூழலுக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால் தனியார் துறையிலும் பரீட்சை நேர்காணல் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதால் இவர்கள் தொழில் சந்தையில் போட்டி போட முடியாதவர்களாக உள்ளனர். பல்கலைக்கழகம் செல்லாதவர்கள் தொழிற்சந்தைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கு கொண்டு முன்னேறிச் செல்ல பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றவர்கள் சிவனே என்று போராட்டத்தில் காலம் கடத்துகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இலவசக் கல்வியும் தந்து போட்டிப் பரீட்சை இல்லாமல் அரச வேலைகளைத் தராது. அரச பணியாளர்கள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. டிஜிற்றல் மயமாக்கல் மிக வேகமாகப் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. அரசும் ஒரு தொழில்நிறுவனமாக வினைத்திறனுடையவர்களையே வேலைக்குத் தெரிவு செய்யும். எதிர்காலத்தில் ஐக்கியூ ரெஸ்ற் மட்டுமல்ல, சைக்கோ அனலிஸிஸ், சிருவேசன் அனலிஸிஸ், ரீம் வேர்கக், கேஸ் ஸ்ரடி, இதைத்தாண்டி இரண்டு இன்ரவியூஸ் எல்லாம் முடித்துத்தான் வேலைக்கு ஆள்எடுப்பார்கள். அதலால் உங்கள் திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு தொழில் சந்தையில் உங்களை விற்கக்கூடியதாக தக்க வைத்துக்கொள்ளுங்கள். அல்லது சுயதொழில் செய்யத் தயாராகுங்கள். போராடி வேலை எடுப்பது வரலாறாகிவிட்டது.

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணியின் போராட்டம் !

“என்னுடைய பென்சன் 27 இலட்சத்தை பிரதம செயலாளர் இளங்கோவன் கள்ளக்கையெழுத்திட்டு சூறையாடிவிட்டார் “ ஆசிரியை கல்யாணியின் போராட்டம் !
உதவி ஆங்கில ஆசிரியையாக இணைந்து நீண்டகாலம் பணியாற்றியவர் ஆசிரியை கல்யாணி. இவருடைய ஓய்வூதியம் 2006 டிசம்பர் 14 முதல் இதுவரையான 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக ஆசிரியை கல்யாணி ராஜூ வியூ என்ற யூரியூப் சனலுக்கு தெரிவித்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடுக்கிச் செல்லும் இந்த வயோதிப ஆசிரியை வடகாமாணசபையின் பிரத செயலாளரான எல் இளங்கோவனே இதற்குக் காரணம் என மிக ஆணித்தரமாகக் குற்றசம்சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது முதல் அரச அதிகாரிகளை தட்டிக் கேட்பதில் மக்கள் முன்நிற்கின்றனர். பிரதேசசபைக் கூட்டங்களில், மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டங்களில் அதிகாரிகள் மீது சரமாரியான கேள்விகள் வைக்கப்படுகின்றது. தற்போது ஆசிரியை கல்யாணியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க புயலாகப் புறப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்வதாக கூறியிருந்தார். ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை.
தற்போது பா உ அர்ச்சுனா தான் ஆசிரியை கல்யாணியுடைய பிரச்சினையைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.
ஆசிரியை கல்யாணி உதவி ஆசிரியையாக சம்பளம் இல்லாது பணியாற்றி உள்ளார். ஆனால் அதன் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஆசிரியை நியமனம் வழங்கப்படும் அதற்கான பென்சனும் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்து கல்வி அமைச்சு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
ஆனால் பிற்காலத்தில் இந்த நியமனம் தவறானு என இன்னுமொரு கடிதம் அனுப்பப்ட்டுள்ளது. அத்தோடு அவருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி எழுப்பும் ஆசிரியை கல்யாணி இது வடமாகாண சபையின் பிரதம செயலாளரான எல் இளங்கோவனே இந்த மோசடிகளுக்கு பின்னின்றதாக குற்றம்சாட்டுகின்றார்.
அரச அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்கின்றார்கள், சில சமயங்களில் பழிவாங்குகின்றார்கள் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்கள் இதனைத் தினம் தினம் எதிர் நோக்குகின்றனர். இந்த நிலைக்கு தன்னுடைய ஆட்சியில் முடிவு கட்டப்படும் என ஜனாதிபதி அனுர மீண்டும் மீண்டும் உறுதி அளித்து வருகின்றார். ஆட்சிக்கு வந்துள்ள ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றது. வட மாகாண அளுநர் வேதநாயகமும் தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் சிலரே மக்களை சரியான முறையில் நடத்தாதையிட்டு தான் மனம் வருந்துவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் வட மாகாணத்தின் பிரதம செயலாளர் எல் இளங்கோவனுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆசிரியை கல்யாணியின் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதம செயலாளர் எல் இளங்கோவன் என்ன சொல்கின்றார் என்பது மிக முக்கியமானது. ஆசிரியை கல்யாணியுடைய குற்றச்சாட்டுக்கள் எவ்வளவுதூரம் உண்மையானது என்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயம். புpரதம செயலாளர் இளங்கோவன் தன் கருத்துக்களை பதிவு செய்யும் பட்சத்தில் அதனை தேசம்நெற் வெளிப்படுத்தும்.

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் ! 

என்பிபி அரசாங்கமும் தமிழர்களை வன்முறைக்கு தூண்டுகிறது – அருட்தந்தை மா. சக்திவேல் !

 

சட்ட விரோத தையிட்டி விகாரைக்கு மேலதிகமாக புதிய மடாலயமும் அமைக்கப்பட்டுள்ளமையானது விகாரை விடயம் மீண்டும் தமிழர்களின் நீதிக் குரலை இராணுவத்தின் சப்பாத்துக்காலால் மிதித்து சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொடுங்கரங்களால் தேசிய மக்கள் சக்தியும் அடக்கும் என்பதை நிரூபித்துள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அருட்தந்தை மா.சத்திவேல் , இது தமிழர்களை மீண்டும் போராட்ட வன்முறைக்கு தூண்டி பயங்கரவாதிகளாக்கும் அரச பயங்கரவாதத்தின் வன்முறையை கண்டிப்பதோடு அண்மித்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் இதற்கு தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ் முஸ்லிம் சிவில் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு !

 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த திங்கள் சபாநாயகரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” 

ஆட்டம் காணும் “ கிழக்கு தமிழர் கூட்டமைப்பு”

மும்மூர்த்திகளாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என சோடி சேர்ந்த பிள்ளையான் , வியாழேந்திரன் மற்றும் கருணா அணிக்கு அடுத்தடுத்து அடி விழுந்து வருகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் வியேழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இலக்கு வைத்து முன்னாள் அமைச்சர்களான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் ஓர் புதிய கூட்டணியை அறிவித்திருந்தனர். இவர்களுடன் இறுதியில் முன்னாள் பா.உ கருணா அம்மானும் இணைந்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருணா அம்மானுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதுடன் வியாழேந்திரனும் கைதாகி குறித்த கூட்டணியில் பிள்ளையான் தனிக்கட்டையாக்கப்பட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது சஜித் பிரேமதாச திடீர் கரிசனம் !

நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது சஜித் பிரேமதாச திடீர் கரிசனம் !

 

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் இதுவரையில் இனங்காணப்படாத நிலையில் நாட்டில் மக்களின் உயிர் பாதுகாப்புடன் தேசிய பாதுகாப்பும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று சமூகம் குரூரமான கொலை கலாசாரத்திற்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இரையாக்கப்பட்டுள்ளன. நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரியவில்லை. நாட்டில் சட்டம் அமுலில் இல்லை. கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரைக் கூட இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் புலனாய்வுத் துறையின் இயலுமை எங்கனம் என்பதை இவ்வாறானதொரு சூழ்நிலையை வைத்து ஊகிக்க முடிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் !

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை (STF) பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களை தெரிந்து வாக்களிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன். யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். நீட்சியாக இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம். எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு! 

சகாக்கள் மீதான பிரித்தானியாவின் தடை நாமல் ராஜபக்ச கொந்தளிப்பு!

 

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகோடா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோர் மீது பிரித்தானியா விதித்த தடை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.

இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தியும் சலுகைகளை அனுபவித்தும் நமது தேசத்தின் நல்லிணக்கத்தை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.