வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடா விமான நிலைய துப்பாக்கிச்சூடு தொடர்பில் அல்பிரட் துரையப்பா பேரன் நிஸான் துரையப்பா விளக்கம்

கனடாவில் பியர்சன் விமான நிலையத்தில் பொலிஸார் சுட்டதில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். விமானநிலைய புறப்பாடு பகுதி ஒன்றில் இரண்டு தொடக்கம் மூன்று நபர்களை உள்ளடக்கிய சிறு குழுவினருக்கிடையேயான முரண்பாட்டின் போது துப்பாக்கியை பயன்படுத்த முற்பட்ட வேளை அதனை தடுக்க பொலிஸார் சுட்டதாக கூறப்படுகிறது.

விமானநிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பீல் பிராந்திய தலைமை பொலிஸ் அதிகாரி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பேரனாவார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தினை அண்டிய சில வீதிகள் மூடப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

இறந்த புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், மீன் ஸ் ரீற்ஸ் (Mean Streets) தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது என்று கூறி ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது. இப்படத்தை முழுமையாக தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைளையும் எடுக்க உத்தேசித்திருப்பதாகவும் இச்சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கையெழுத்துப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் வகையில், இப்படம் குறித்து பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. லிற்றில் ஜப்னா திரைப்படத்திற்கு மட்டும்மல்ல வேறு சில ஈழத்தமிழர்கள் வரலாற்றை மையமாக வைத்து தயாரித்த படங்களை வெளியிடக் கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாகும். பிரான்ஸ் போன்று படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சுதந்திரமான நாட்டிலிருந்து கொண்டு லிற்றில் ஜப்னா படத்தை தடை செய்யக் கோருவது சர்வதிகாரப் போக்கு என பிரான்ஸ் வாழ் படைப்பாளிகள் கண்டிக்கின்றனர். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவது ஜனநாயக விரோதமான செயலாகும். மேலும் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் கருத்துக்கள், படைப்புக்கள் வருகின்ற போது அதனைத் தடைசெய்யக் கோரும் முட்டாள்தனமான கலாச்சாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தே ஆரம்பிப்பது வழமை. சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய ஆவணப்படத்தை வெளியிட யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி ரகுராம் தடைவிதித்த்தார். அவ்வாறே சுயாதீன கருத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.

பிரான்ஸ் நாட்டின் அறிஞரான வோல்ரயர்: “உன்னுடைய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், உன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன் எனத் தெரிவித்தார். வோல்ரயர் வாழ்த்த மண்ணில் தங்களுடைய மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகச் சொல்லி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் ஈழத் தமிழ் திரைப்படச் சங்கத்தினர். இபோது பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்துகொண்டு ஒரு படைப்புக்கு தடைவேண்டி கையெழுத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

தங்களை கருத்துச் சுதந்திரர்களாகக் காட்டி கொண்ட சிலர் தேசம்நெற் தளத்தை மூடச்சொல்லி 17 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்குநாடுகளில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வேறு சிலர் லிற்றில் ஜப்னா வுக்கு எதிராகக் கெம்பியுள்ளனர்.

 

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

ஏப்ரல் 28 இல் நடைபெறவுள்ள கனடியத் தேர்தலில் எதிரும் புதிருமாக உள்ள ஆளும் லிபிரல் கட்சியில் இருவரும் எதிர்க்கட்சியான பழமைவாத கொன்சவேடிவ் கட்சியில் இருவருமாக நால்வர் போட்டியிடுகின்றனர். நீதி அமைச்சராகவுள்ள ஹரி ஆனந்தசங்கரியும் கனடா தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஜொவனிற்றா நாதனும் லிபரல் கட்சியில் போட்டியிடுகின்றனர். லைனல் லோகநாதனும் நிரான் ஜெயநேசனும் கொன்சவேடிவ் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

மார்க் கார்னி தலைமையிலான லிபிரல் கட்சி விரல் விட்டு எண்ணும் விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றார். ஜஸ்ரின் ரூடோர் தலைமையில் லிபிரல் கட்சி ஏற்கனவே இரு தடவைகள் ஆட்சியில் இருந்ததில் மக்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனக் காரணமாக கொன்சவேடிவ் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் ஜனாதிபதியாகி கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் எனத் தெரிவித்ததும் கனடாவுக்கு எதிராகவும் வர்த்தக வரிகளைப் பயன்படுத்தியதும் கனடாவில் டொனால் ட்ரம்முக்கு எதிராக மார்க் கார்னியின் கருத்துக்கள் வரவேற்பபைப் பெற்றது. சரிந்திருந்து லிபிரல் கட்சி கிசுகிசுவென மேல்நிலைக்கு வந்து தற்போது மூன்று புள்ளிகளால் மட்டும் முன்னணியில் உள்ளது.

டொனால் ட்ரம் உடைய கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பஃரே பொலிவ்ரே தேர்தல் நெருங்கும் தருவாயில் தொழிலுலகிற்குள் நுழையும் இளவயதினரின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுவருவதாக அரசியல் சமூக ஆய்வாளர் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களுக்கான வரிகளைக் குறைப்பதும் குடிவரவாளர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற இறுக்கமான வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

கனடாவுக்கு முந்திச் சென்றவர்கள் கொன்சவேடிவ் கட்சியை ஆதரிப்பதாகவும் பிந்திச் சென்றவர்கள் தங்களுடைய குடியுரிமை மற்றும் உரிமைகளுக்காக லிபிரல் கட்சியை ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது குடியேறுபவர்களின் வருகையால் வீட்டு வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளதால் குடிவருவோர் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பரவலாகக் காணப்படுவதையும் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கனடா உள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களதும் மொத்த சனத்தொகைக்கு ஒப்பான தொகையான தமிழ் மக்கள் கனடாவில் வாழ்கின்றனர். இத்தேர்தல் கனடாவில் உள்ள தமிழ் மக்களை மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவுக்குச் செல்வதற்கு பாரிய தடைகள் இருக்கவில்லை. வருகின்ற ஆட்சி மாற்றம் இவ்விடயத்தில் தாக்கத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

 

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !

‘50501’ என்ற போராட்டக்குழுவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் மக்கள் வீதிகளில் திரண்டு ஜனாதிபதி ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்பிரல் 5 ஆம் திகதி மற்றும் 19 களில் நியுயோர்க் நகரம் மற்றும் வெள்ளைமாளிகை முன் திரண்ட மக்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷமிட்டனர். ‘50501’ அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது. 50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘50501’ என இப்போராட்டக்குழுவுக்கு பெயரிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் குடிவரவு கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரச ஊழியர்களின் ஆட்குறைப்பு போன்ற அடாவடியான கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்றனர்.

“அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை“ பதாதைகளை தாங்கிக் கொண்டு கோஷமிடுகின்றனர். ட்ரம்ப் கிட்லர் போன்று செயற்படுவதாகவும் விமர்சிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

ஓடும் ரயிலில் ஏரிஎம்மெஷின் (ATM)

அபிவிருத்தி அடைந்த நாடுகள் என மார் தட்டும் நாடுகளுக்கே முன்னோடியாக இந்தியா ஓடும் ரயிலில் முதன்முறையாக ஏரிஎம் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. மும்பையிலிருந்து மான்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் புகையிரத சேவையிலேயே இந்தியாவின் மத்திய ரயில்வே இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் இச்சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

உலகத்தில் இணையவழி மற்றும் பண அட்டைகள் மூலம் பரிவர்த்தணை அதிகமாகி வருகிறது. எப்படியாயினும் வங்கிகளிலிருந்து நாணயத்தாள்களாக பணத்தை எடுத்து பயன்படுத்துவதும் இன்னும் தொடரத்தான் செய்கின்றது. அந்தவகையில் பணம் எடுக்கும் ஏரிஎம் இயந்திரங்கள் தமது செல்வாக்கை இன்னும் கூட இழக்கவில்லை என்று கூறலாம்.

ஹார்வர்ட் பல்கலைக்கு நிதி நிறுத்தம் – தொடரும் ட்ரம்ப்பின் அடாவடி !

ஹார்வர்ட் பல்கலைக்கு நிதி நிறுத்தம் – தொடரும் ட்ரம்ப்பின் அடாவடி !

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சிவில் உரிமைச் சட்டங்களை பின்பற்ற தவறினால் நிதியுதவி கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் டொலர் நிதியைத் தற்காலிகமாக நிறுத்தும் முடிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

யூத மாணவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் காட்டி, பல்கலைகழகங்கள் இதனை தீவிரமாக கவனிக்க வேண்டும் என்றும், அர்த்தமுள்ள மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, காசா போர் உள்ளிட்ட விவகாரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்வி வளாகத்தில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பதையே முன்னிலைப்படுத்தியுள்ளது.

கனடா தமிழ் திருமணம் செய்து வைக்கின்ற ஐயரின் திருவிளையாடல்கள் – ஐயர் பிரவின் ரனிஜன் கைது !

கனடா தமிழ் திருமணம் செய்து வைக்கின்ற ஐயரின் திருவிளையாடல்கள் – ஐயர் பிரவின் ரனிஜன் கைது !

லண்டனில் இரு வாரங்களுக்கு முன் தமிழ் பெண்களைப் பாலியல்துஸ்பிரயோகம் செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க்பட்டு இருந்தது. ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ந்த குற்றத்திற்காகவும் அவர் மீது பாலியல் வன்புணர்வுக்கு முயன்றமைக்காகவும் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தண்டனை விதிக்கப்பட்டு இரு வாரங்களுக்குள்ளாக அட்லான்டிக் சமுத்திரத்தின் மறுமுனையில் கனடாவில் 44 வயது நிரம்பிய பிரவின் என்ற ஆன்மிக குருவாகக் கருதப்பட்டவரை யோர்க் பொலிஸார் தமிழ் புத்தாண்டு அன்று கைது செய்துள்ளனர். தமிழ் திருமணங்களை முன்நின்று நடாத்துகின்ற இவர், மாணவர்களுக்கு ஆன்மீகமும் கற்பிப்பவராக இருந்தள்ளார். இவர் தான் வாழ்கின்ற பிக்கரிங் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் இருந்து ஆன்மிக – சமயக் கல்வியைப் போதித்து வருபவர் என யோர்க் பிரதேச பொலிஸாரின் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பிரிவு தெரிவிக்கின்றது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரவின் ரனிஜன் தன்னிடம் ஆன்மீக – சமயக் கல்வி கற்க வந்த மாணவியை ஆறு தடவைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் தாக்குதல்கள் 2021 முதல் 2024 வரையான காலகட்டத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றுமொரு இளம்பெண் தன்னை குறித்த நபர் 2024இல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னும் பல பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்ய முன் வருவார்கள் எனப் பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட வேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள ஆண்கள், பெண்களை பாலியல் பண்டமாக நோக்கும் போக்கு பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது. பா உ சிறிதரனின் வலதுகரமாக இயங்கிய வேளமாழிதன் மேற்கொண்ட பாலியல் லஞ்சங்கள் அம்பலமாகி இருந்தது. தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிக் கூட கட்சி கண்துடைப்பிற்காகவாவுதல் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது பா உ சிறிதரனின் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒருவரான அலன் 16 சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துஸ்பிரயோகம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து பா உ அர்ச்சுனா பொறாமை மற்றும் காரணங்களுக்காக பெண்களை இழிவுபடுத்தி அவர்களது நிர்வாணங்களை ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றார். இவர்களுக்கு ஆதரவாக தமிழ் அடியான் என்ற பிரித்தானிய யூரியூபாளர் செயற்படுகின்றார். இவர்கள் வெளியிடும் நிர்வாணங்களைக் காண தமிழ் தேசிய ஆண்கள் இவர்களது முகநூல்கள் காணொலிகளை நோக்கி ஈகள் போல் மொய்க்கின்றனர்.

இவ்வாறான மூன்றாம் தரமான அரசியல் போக்குகள் காரணமாக அரசியலில் ஆர்வமுடைய பெண்கள் கூட AI மூலம் தங்களுடைய நிர்வாணங்களைத் தயாரித்து வெளியிட்டு விடுவார்கள் என அஞ்சுகின்றனர். அதனால் அரசியலில் இருந்து ஒதுங்குகின்றனர். இந்த நிர்வாணப் போட்டியில் கௌசல்யா நரேனின் நிர்வாணப் படம் வெளியாகினதை அடுத்து அவர் பொதுச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். பா உ அர்ச்சுனா – ஊழல் ஒழிப்பு அணி வன்னி – தமிழ் அடியான் கூட்டு பெண்களுக்கு எதிரான மிகக் கீழ்த்தரமான தாக்குதல்களை பொதுத்தளத்தில் மேற்கொள்கின்றனர். இவர்களால் ஈர்க்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கு எதிரான பெண்கள், முன்னாள் காதலிகள், முன்னாள் மனைவிகளின் படங்களை இவர்களுக்கு அனுப்பி அப்பெண்களை இழிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரபல்யமான பெண்கள் இவர்களின் தாக்குதல் இலக்காக உள்ளனர். இவர்களின் தாக்குதலுக்கு தற்போது உள்ளாகி இருப்பவர் டென்மார்க்கைச் சேர்ந்த மாலினி மார்க்கண்டு என்ற காணொலியாளர்.

இதுவரை இவர்கள் குற்றம்சாட்டிய எந்தப் பெண்ணும் பாலியல் தாக்குதலிலோ பாலியல் துஸ்பிரயோகத்திலோ ஈடுபடவில்லை. அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களுடைய பலவீனத்தை இவர்கள் பலமாக்கிக் கொண்டு அவர்களது நடத்தையை நயவஞ்சகமாக களங்கப்படுத்தி அவர்களது சமூக அந்ததஸ்தை குறைத்து தங்களைப் போன்ற ஆணாதிக்க சிந்தனையுடையவர்களுக்கு தீனி போடுகின்றனர்.

ஆனால் உண்மையிலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தத்தில் ஆண்கள் பற்றி பா உ அர்ச்சுனா, ஊழல் ஒமிப்பு அணி வன்னி மற்றும் தமிழ் அடியான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இலங்கை, பிரித்தானியா, கனடா என்று பல நாடுகளிலும் ஆண்கள் கைது செய்யப்பட்டு தண்டணையும் பெற்றுள்ளனர். ஆனால் அதைப்பற்றிக் கண்டுகொள்வதில்லை. பெண்களது நிர்வாணத்தை வெளியிடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் !

முன்னாள் அதிமுக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக புதிய தலைவர் !

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளது. அந்தவகையில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி 13வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12வது தலைவராக இருந்த அண்ணாமலைக்கு பாரதிய ஜனதா கட்சியில் தேசிய மட்டத்திலான பதவி கிடைக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினூடாக இரு தடவைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அத்துடன் அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் தொழிற்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். எப்படியாயினும் வருமானத்திற்கு மீறி சொத்துக் குவித்த வழக்கு, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சர்ச்சை மற்றும் ஓடியோ றிலீஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நயினார் நாகேந்திரன் எதிர்கொண்டுள்ளார். தற்போது சர்ச்சைகளின் நாயகன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தப் போகிறார்.

 

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் சிலை அகற்றல் !

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கார் சிலை அகற்றல் !

“வேற்றுமையில் ஒற்றுமை “ என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பை வடித்த சிற்பி அம்பேத்கார். அம்பேத்கார் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகவும் பெரும் பங்களிப்பைச் செய்த தலைவர். ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் தலித் மக்களின் வழிகாட்டியாக விளங்கியவர். இந்தியாவின் முதாலவது சட்ட அமைச்சரும் இவரேயாவார். இந்தியா முழுவதும் மக்கள் அம்பேத்கார் சிலைகளை நிறுவியுள்ளார்கள்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பதோஹி என்ற கிராமத்தில் அம்பேத்காருக்கு 4 அடியில் அக்கிராம மக்கள் சிலையை நிறுவியுள்ளார்கள். இச்சிலையானது முறையான அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அளித்த புகாரையடுத்து பொலிஸார் சிலையை அகற்றியுள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் சிறுபான்மை இனமக்களும், தலித்துக்களும் மற்றும் சிறுபான்மை மதங்களும் இன்ன பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்பேத்கார் சிலை அகற்றியதை கண்டித்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராமே கொந்தளித்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாகவே யாழ் கொக்குவிலில் அம்பேக்கர் மற்றும் பெரியாருக்கு சிலை எழுப்பப் போவதாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக் குரல்கொடுத்து வருகின்ற அருண் சித்தார்த் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.