செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட வேண்டும் – சிவநேசதுரை சந்திரகாந்தன்

தமிழ் மக்களின் போராட்ட காலங்களில் தமிழ் – முஸ்லிம் உறவில் சில கசப்பான நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கலாம் இதனை நாம் மறந்து விட வேண்டும் .இரண்டு இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே எமது உரிமைகளையும்; கௌரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஏற்பாட்டில் அல் – சிராஜ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நூலக வாரம் மற்றும் புத்தகக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். ஆவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களிடையே ஒற்றுமையை பலப்படுத்துவதன் மூலமே அம்மாகாணத்தில் ஓர் நிலையான அரசியல் ஸ்த்திரத்தினை ஏற்படுத்த முடியும்.”

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும். அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் . நிலையானதும் நீண்ட காலத்திற்குமான அபிவிருத்தி என்று நோக்குகின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை . காரணம் தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் உண்டு.

எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேண முடியும் “என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மத்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாää மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர மீராலெப்பை துல்ஹார் நஹீம் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்

சனத்தொகை கணக்கெடுப்பு 2011 இல் மேற்கொள்ள ஏற்பாடு

நாடு முழுவதுமான சனத்தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்படவுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் சனத்தொகை கணக்கெடுப்பு 1981 ஆம் ஆண்டு முதல் முதலில் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களத்தின் முக்கியஸ்தரான சுரஜ்ஜன வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.

சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவையான வரைபடத்தையும் வீட்டு விபரங்களையும் சேகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பிலான அறிவுரை செயல்திட்டம் 11 மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளதுடன் குறுகிய காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனோகணேசனின் வாகனத் தொடரணி மீது கடும் தாக்குதல்

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் எம்.பி.யின் வாகனத் தொடரணி மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பசறை மடுல்சீமை பகுதியில் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததுடன் வாகனங்கள் பலவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
மடுல்சீமைபசறை வீதியில் பல்உல்ல தோட்டத்திற்குச் சமீபமாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்தக் கடும் தாக்குதலிலிருந்து மனோ கணேசன் எம்.பி.மயிரிழையில் தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவர்களே தங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்த மனோகணேசன், இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசன் தீவிரமாக இறங்கியுள்ளார். அங்கு மக்களின் செல்வாக்கு எமது கட்சியினருக்கு அதிகரித்து வருகிறது. நடைபெறும் கூட்டங்களில் மிகப் பெருமளவில் மக்கள் திரண்டு அமோக ஆதரவு வழங்குகின்றனர்.

இது போன்றதொரு கூட்டம் மடுல்சீமை கல்உல்ல தோட்டத்தில் நடைபெற்றது. அங்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த இடத்தை நோக்கி பிரசார வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது. மனோகணேசனும் அந்த வாகனத்தொடரணியில் வந்து கொண்டிருந்தார். இவ்வேளையில் மடுல்சீமைபசறை வீதியில் வாகனத்தொடரணி சென்று கொண்டிருந்தபோது ஒரு கோஷ்டி வாகனத்தொடரணியை வழிமறித்தது. அவர்கள் கைகளில் பொல்லுகள், தடிகள், கற்கள் இருந்ததால் வாகனங்களை நிறுத்தாது செல்ல முற்பட்ட போது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடரணியில் சென்ற பஸ் ஒன்றும் வேறு வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டன. வாகனங்களின் கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டன. கடுமையான கல்வீச்சாலும் தாக்குதலாலும் வாகனங்களில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். சில வாகனங்களின் பக்கவாட்டில் ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன், வேட்பாளர்களின் கட்டவுட்களும் பதாகைகளுமிருந்தன. அவையும் கிழித்தெறியப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் முன்னணியின் மூன்று தொண்டர்கள் படுகாயமடைந்துள்ளனர். மனோகணேசனின் வாகனமும் பலத்த கல் வீச்சுக்கிலக்கானது எனினும் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக வேறு இடத்திற்கு அழைத்து சென்றதால் அவர் காயமின்றித் தப்பினார். படுகாயமடைந்தவர்கள் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்தனர். தாக்குதல் நடத்தியபோது மலையக அமைச் சர் ஒருவரை “வாழ்க, வாழ்க’ என்று கோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனோகணேசன் எம்.பி.கூறுகையில்;

எங்கள் அணியின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரர்களே இக்கட்சியின் மடுல்சீமை பிரதேச சபை உறுப்பினரும் இன்னும் சிலரும் மதுபோதையில் இந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். பதுளை மாவட்டத்திற்கு எமது கட்சியின் வருகையையும் மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவையும் சகித்து கொள்ள முடியாமலேயே இவர்கள் இவ்விதம் நடத்துகொள்கின்றார்கள். நுவரெலியாவைப்போல பதுளை மாவட்டத்திலும் தமிழ் மக்கள் இத்தகைய அராஜக அரசியலுக்கு தகுந்த ஜனநாயக பதிலை மக்கள் வழங்குவார்கள் என்றார்.

வவுனியா நகர சபை தேர்தல் பிரசாரத்தில் டக்ளஸ் மும்முரம் – பொதுமக்களுடனான சந்திப்பிலும் பங்குபற்றினார்

வவுனியா நகர சபைத் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சரின் கட்சியான ஈ.பி.டி.பி தமது வேட்பாளர்கள் ஆறு பேரை நிறுத்தியுள்ளது.

தமது கட்சி வேட்பாளர்களுக்காக அமைச்சர் நேற்று முன்தினம் மாலை சகாயமாதாபுரத்திற்கு விஜயம் செய்து பொதுமக்களுடனான சந்திப்பில் பங்குபற்றினார்.

எங்களுக்கு தேவை உரிமை. அதற்காகவே நாம் அரசுடன் உறவை வைத்துள்ளோம். அவலப்படும் மக்களை கைதூக்கி விடுவதற்காகவே அரசுடன் கைகுலுக்குகின்றோம் என அமைச்சர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.

வரட்சி காலத்தில் தாம்குடிநீர் பெற்றுக்கொள்ளமுடியாமை குறித்து சகாயமாதாபுரம் மக்கள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தபோது நீண்டகாலமாக உள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வவுனியா மாவட்ட அமைப்பாளர் சிவன்சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் நேற்றுக் காலை நகர கலாசார மண்டபத்தில் வவுனியா வர்த்தக பிரமுகர்களை அமைச்சர் சந்தித்தித்தார்.

வவுனியா நகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதியை அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவே ஆளும் கட்சி சபையினை கைப்பற்றினால் கூடுதல் நிதியை பெற்று நகர அபிவிருத்தியையும் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார்

அரச நிருவாக சேவையில் விரைவில் திருத்தங்கள் வரும்

அரச சேவை புரிவோர் திருப்தி காணும் வகையில் அரச நிருவாக சேவையில் பல திருத்தங்களை மேற்கொள்ள விருப்பதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரி வித்தார். இதன் பொருட்டு கடந்த காலத்தில் நிருவாகத்துறையில் ஏற்பட்டு வந்த பல்வேறுபட்ட குளறுபடிகள் அனைத்தும் களைந்தெறியப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கண்டி உடரட்ட கலைக் கூட மண்டபத்தில் கிராம சேவையாளர் நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மத்திய பிரதேசத்திற்கு சேவை புரியும் பொருட்டு புதிதாக 134 பேருக்கு கிராம சேவையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது:-மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய வகையில் குழுக்களை நியமித்து அவர்களுக்கிடையில் ஒரு வகை தொடர்புகளை ஏற்படுத்தவும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

கிராம சேவையாளர்களுக்கு நாம் அவர்களினது சேவைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமிடத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அமைச்சு செய்து கொடுத்துள்ளது. இந்த வகையில் இந்த கிராம சேவையாளர்களை நாம் அவதானிப்போம்.

புலிகள் பயன்படுத்திய மற்றுமொரு பாரிய நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு வெள்ளமுள்ளிவாய்க்கால் கடலில் 40 அடி ஆழத்திலிருந்து மீட்பு

5555.jpgபுலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த மற்றுமொரு பாரிய நீர்மூழ்கிக் கப்பலொன்றினை இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியில் வைத்து கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மூன்று பேர் பயணிக்கக் கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்நீர்மூழ்கிக் கப்பல் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் போன்ற தோற்றத்தினையுடைய இந்நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 25 அடி நீளமும் 4 அடி அகலமும் 41/2 அடி உயரத்தையும் கொண்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் கடலுக்குள் 40 அடி ஆழத்தில் இந்நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல்களை இராணுவத்தினர் நடத்தி வரும் அதேநேரம் இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியிலும் தேடுதல்களை நடத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இராணுவத்தின் சுழியோடிகள் வெள்ளை முள்ளி வாய்க்கால் கடற்பரப்புக் கடியில் தேடுதல்களை நடத்தியபோதே இந்நீர்மூழ்கிக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புலிகளின் மேற்படி நீர்மூழ்கிக் கப்பலுக்குள்லிருந்து டீசல் என்ஜிகள், சமநிலை தாங்கி, சுழியோடிகளுக்கான அங்கிகள், தமது இருப்பிடத்தைக் காட்டும் கருவி ஆகியன மீட்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார். இராணுவத்தின் 56 ஆம் படைப் பிரிவு மற்றும் எட்டாம் படையணியினைச் சேர்ந்த சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாகவே புலிகளின் இத்நீர்மூழ்கிக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் புலிகளால் பயன்படுத்தி வந்த பல நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லை, கிளிநொச்சி மாவட்ட உள்ளக வீதி புனரமைப்புக்கு அரசு ரூ. 275 மில். ஒதுக்கீடு

விடுவிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உள்ளக வீதிகளைத் துரிதகதியில் புனரமைக்கவென அரசாங்கம் 275 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவ் வீதிகள் துரித கதியில் புனரமைக்கப்படவுள்ளன. சில வீதிகளைப் புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் நேற்று கூறினர்.

இந் நிதியில் 130 மில்லியன் ரூபா கிளிநொச்சி மாவட்டத்திற்கும், 145 மில்லியன் ரூபா முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்ப டவிருக்கின்றன. இதற்கென அரசாங்கம் 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதி கிளிநொச்சி உள்ளூராட்சி திணைக்களத்திற்கு 50 மில்லியன் ரூபாவாகவும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு 60 மில்லியன் ரூபாவாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவாகவும் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முல்லை மாவட்ட உள்ளக வீதிகளைத் துரிதமாக அபிவிருத்தி செய்யவென 145 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந் நிதியில் 125 மில்லியன் ரூபாவை தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊடாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.இந் நிதி ஊடாக மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய பிரதேசங்களிலிலுள்ள உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்படும் என்றார்.

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்பும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த திணைக்களங்களின் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் அந்தந்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் அம்மாவட்டத்தின் கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டிடம் ஆகிய திணைக்களங்களின் தலைவர்கள் இன்று 20ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், சிவநகர், புதுமுறிப்பு, கோணவில், யூனியன்குளம், மலையாளபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

அதேவேளை இவர்கள் நாளை பளைப் பிரதேச மதிப்பீடுகளைச் செய்யவுள்ளனர். இதேநேரம் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் அம்மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் நாளை மறுதினம் புதன்கிழமை துணுக்களாய் பிரதேசத்திற்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள், அழிவுகள் குறித்து இவர்கள் மதிப்பீட்டின்போது விஷேட கவனம் செலுத்துவர்.

இம்மதிப்பீட்டு நடவடிக்கைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்து அது தொடர்பான அறிக்கை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

மோசடி இடம் பெறும் வாக்கு சாவடிகளை இரத்துச் செய்க – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

election_cast_ballots.jpgமோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின்போதே தேர்தல் ஆணையாளர் மோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் அப் பகுதிகளுக்கு பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கூறியதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

நீதியானதும் நேர்மையானதுமான முறையிலும் வாக்காளர்கள் சுமுகமாக வாக்களிக்கும் வகையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் இச் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான வாகன மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், பணியாளர்கள் என்பன குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு

mahi2222.jpgஆதிவாசி சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், அவர்களது பிரதான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தீர்வு பெற்றுக் கொடுத்தார். மஹியங்கணையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தம்பான ஆதிவாசி மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறிய போது இந் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆதிவாசிகள் அவர்களது சம்பிரதாயப்படி தயாரித்த உணவுகளை ஜனாதிபதிக்கு வழங்கினர். அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு இதுவாகும்.