அரச சேவை புரிவோர் திருப்தி காணும் வகையில் அரச நிருவாக சேவையில் பல திருத்தங்களை மேற்கொள்ள விருப்பதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரி வித்தார். இதன் பொருட்டு கடந்த காலத்தில் நிருவாகத்துறையில் ஏற்பட்டு வந்த பல்வேறுபட்ட குளறுபடிகள் அனைத்தும் களைந்தெறியப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கண்டி உடரட்ட கலைக் கூட மண்டபத்தில் கிராம சேவையாளர் நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மத்திய பிரதேசத்திற்கு சேவை புரியும் பொருட்டு புதிதாக 134 பேருக்கு கிராம சேவையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது:-மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய வகையில் குழுக்களை நியமித்து அவர்களுக்கிடையில் ஒரு வகை தொடர்புகளை ஏற்படுத்தவும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.
கிராம சேவையாளர்களுக்கு நாம் அவர்களினது சேவைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமிடத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அமைச்சு செய்து கொடுத்துள்ளது. இந்த வகையில் இந்த கிராம சேவையாளர்களை நாம் அவதானிப்போம்.