மோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின்போதே தேர்தல் ஆணையாளர் மோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் அப் பகுதிகளுக்கு பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கூறியதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.
நீதியானதும் நேர்மையானதுமான முறையிலும் வாக்காளர்கள் சுமுகமாக வாக்களிக்கும் வகையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் இச் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான வாகன மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், பணியாளர்கள் என்பன குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.