செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 773 சிவிலியன்கள் வருகை

Wanni_Warபுலிகளின் பிடியிலியிலிருந்து தப்பி 773 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக களமுனையிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்குள்ளேயே மேற்படி தொகையினர் அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புதுமாத்தளனிலிருந்து 112 சிவிலியன்கள் விஸ்வமடு நோக்கி தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வந்த மேற்படி சிவிலியன்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக 60 பேர் பலத்த சூட்டுக் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயங்களுடன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இவர்கள் படையினரைத் தேடி வந்துள்ளனர். படையினர் உடனடியாக வைத்தியர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கிய பின்னர் காயமடைந்த 60 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விஸ்வமடு நோக்கி நேற்று வந்த 112 சிவிலியன்களும் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டவர்களென்றும் மோதல்கள் காரணமாகவே முல்லைத்தீவு நோக்கி சென்றி ருந்ததாகவும் விஸ்வமடுவிலுள்ள படைவீரர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் 661 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வந்துள்ளனர். மேற்படி சிவிலியன்களுள் 621 பேர் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள படையினரிடம் வந்து சேர்ந்துள்ளனர்.

ஏனைய 40 பேரும் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தை வந்தடைந்திருப்பதாகவும் பிரிகேடியர் கூறினார். முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருப்போர் வவுனியாவிலுள்ள நலன்புரி கிராமங்களுக்கும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளோர் அங்கிருக்கும் நலன்புரி கிராமங்களிலும் குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவில் பல்வேறு முனைகளினூடாகவும் முன்னேறி வரும் படையினர் புலிகளை ஒழிப்பதற்காக கடும் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக கூறிய பிரிகேடியர் நேற்று வரை 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

3 மாதங்களின் பின் காலநிலையில் மாற்றம்

climate.jpgஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கம் ஏற்பட்டிருப்பதால் கடும் காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் நிலவிய கடும் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளது.

இக்காலப் பகுதியில் மின்னலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஹமாஸ், பதாஹ் இணக்கப்பாடு: பலஸ்தீனப் பிரதமர் பதவி விலக சம்மதம்

w-n.jpgபலஸ்தீன் ஜனாதிபதி சலாம் பயாத் தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளார். மார்ச் மாத இறுதியில் சலாம் பயாத் ராஜினாமாச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் ஹமாஸ¤ம் பதாவும் நடாத்திய பேச்சுக்கள் வெற்றிபெற்றதையடுத்து பலஸ்தீனப் பிரதமர் பதவியைத் துறக்க முன்வந்தார். காஸாவையும், பலஸ்தீனையும் மீண்டும் ஒன்றாக இணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர இந்தப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெரும்பாலும் பிரதமர் பதவி காஸாவை ஆளும் ஹமாஸ¤க்குச் செல்லவுள்ளது. காஸாவை புனரமைக்க வழங்கப்பட்ட உதவிகள் ஹமாஸிடம் செல்வதை உலக நாடுகள் விரும்பவில்லை.

மேற்குக் கரையை ஆளும் பதாஹ் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸிடம் நிதிகள் செல்வதையே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறான நிலையில் ஹமாஸ், பதாஹ் அமைப் பிடையே இணக்கப்பாடுகள் உண்டானதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

அதேவேளை ஐக்கியப்பட்ட பலஸ்தீன் மீண்டும் உருவானால் தொடர்ந்தும் இஸ்ரேலுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றன.அமெரிக்காவும் ஹமாஸ், பதாஹ்விடையே ஏற்பட்ட ஒற்றுமையை வரவேற்றுள்ளதுடன் மத்தியகிழக்கு பேச்சு வார்த்தை தொடர்வதை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனியாகப் பிரிந்துசென்ற ஹமாஸ் தடையாகச் செயற்பட்டது. தற்போது இது நீங்கும் எனக் கருதப்படுகிறது.

ரீ.எம்.வி.பி. ஆயுதப் பிரிவில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்வதற்கும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரி வித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வ ளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுயதொழில் ஆரம்பிக்க வழிகாட்டவும் கட்சி தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்பிரிவில் இதுவரைக்காலமும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் கூறினார்.

பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் சட்ட திட்டங்கள் – அமைச்சர் சுமேதா

sumeda-jayasena.jpgபெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் பல்வேறு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை இருப்பதே தெரியாது. சில நீதிபதிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட இவ்வாறான சட்டங்கள் இருப்பதனை அறிந்து வைத்திருக்கவில்லை. சட்டங்களின் அடிப்படையில் கணவனால் கூட மனைவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்த முடியாதென பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேன தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:-

பெண்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எமது சமுதாயத்தின் எண்ணத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் நம் நாட்டுப் பெண்களை சக்திமிக்கவர்களாகத் தோற்றுவிக்க முடியும்.

ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகளின்படி பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தவிர ஏனைய பாலியல் துஷ்பிரயோகங்கள் பேரூந்துகளிலேயே இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்கள் இதனைத் தவிர்ப்பதற்காக மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களது நலன்புரி செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் சுமேத ஜி. ஜயசேனவின் 20 வருட கால அரசியல் சேவையைப் பாராட்டி நாட்டின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அவரை விருது வழங்கி கெளரவித்தார். நேற்றைய நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பெண்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆலோசனை குழு – மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

ratha-kirishnan.jpgமலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  இதற்கென ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தப் போவதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இ. தொ. கா உப தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு மத்திய மாகாண சபையில், கைத்தொழில், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் மகளிர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி தமிழ்க் கல்வி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்டி- பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடமைக ளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மாகாண அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கண்டி – ரோயல் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இ. தொ. கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண சபையில் நான்காவது தடவையாக அமைச்சராகியிருக்கும் இராதாகிருஷ்ணன் இங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதற்தடவையாக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இ. தொ. கா. என்ன சொல்கிறதோ அதனைக் கட்டாயம் நிறைவேற்றித் தீருவேன்.

இந்திய உதவி தூதுவரிடம் சென்று உதவிகள் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 188 இந்து அறநெறிப் பாடசாலைகளையும் ஒரு கொள்கையின் கீழ் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வோம். ரம்பொடவிலுள்ள தொண்டமான் கலாசார நிலையத்தினை கவின்கலை நிறுவனமாக மாற்றி, நடனம், சங்கீதம், இசைக் கருவிகளுக்கான பாடநெறிகள் ஆரம்பிப்போம்.

தேசிய பாடசாலை என்பதில் நாம் உடன்பாடில்லை. தேசிய பாடசாலைகளை கொழும்பே நிர்வகிக்கின்றது. மாகாண அமைச்சு நிர்வகிக்க முடியாது. இன்று அதிகார பரவலாக்கலின் கீழ் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.

சிலாபம், பள்ளமயில் கோர விபத்து; ஐவர் பலி; பத்துப் பேர் படுகாயம்

van-accidents-images.jpgசிலாபம், பள்ளம, மண்டலான பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் சிறுவர்கள் என்று சிலாபம் தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் பத்துப் பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள ஐவரும் நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் சம்பவத்தில் பெரியமுல்லையைச் சேர்ந்த எட்டுப்பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன. இச்சம்பவத்தில் ட்ரக் வண்டியின் சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் கூறின.

இச் சம்பவத்தில் உயிரிழந்த முஹம்மத் ஈஸான் (வயது 38), பாத்திமா நஸ்மியா (வயது 28), முஹம்மத் அல்தாப் (வயது இரு வருடங்களும் ஆறு மாதங்களும்) பாத்திமா அன்ஜிலா (வயது ஏழு மாதங்கள்) ஆகியோரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பெரியமுல்லை வாசியொருவர் பாத்திமா பாத்திலா (வயது 50) இவர்களது அயல் வீட்டவர் என்றும் கூறினார். ஆனமடுவ, சங்கட்டிகுளத்தில் திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெரியமுல்லைவாசிகள் பயணம் செய்த வானும், ட்ரக் வண்டியுமே நேற்று மாலை 5.15 மணியளவில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டதாக பள்ளம பொலிஸார் கூறினர்.

முரளிதரனை சார்ந்தோர் தற்போது ஆயுதங்களை கையளிக்க மாட்டார்கள் பேச்சாளர் தெரிவிப்பு

karuna.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கழைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு கழைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.

“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் ,அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்” என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார்.

“அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது.கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லை “என்றும் அவர் குறிப்பிட்டார். 

கண்ணிவெடியகற்றும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் கண்ணிவெடியகற்றும் பணி இதுவரை கண்ணிவெடி அகற்றாமல் இருக்கும் எஞ்சியுள்ள ஒன்பது இடங்களில் அப்பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாக யாழ்ப்பாண செயலகத்தில் இயங்கி வரும் கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டு செயலகம் தெரிவித்துள்ளது.  “ஹலோ ரஸ்ட்’ மிதிவெடி அகற்றும் நிறுவனம் சங்கத்தானை கல்லூரி வீதி, சங்கத்தானை கோவிலடி, நுணாவில் கிழக்கு பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஊர்காவற்றுறை, கரம்பொன், செம்மணிக்குளம், புத்தூர் மேற்கு, சங்கத்தானை ஆகிய இடங்களிலும் மிதிவெடி அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாண்டுக்குள் யாழ்.குடாநாடு கண்ணிவெடியற்ற பிரதேசமாகுமெனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது -பௌவுச்சர்

richard-boucher.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் வழிமுறைகள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வெளியேறுவதற்கு விரும்பும்போதும் அச்சுறுத்தல் சூழல்நிலை காரணமாக அவர்கள் வெளியேறுவது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.