மலையக இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய மாகாண அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதற்கென ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தப் போவதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இ. தொ. கா உப தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு மத்திய மாகாண சபையில், கைத்தொழில், விளையாட்டுத்துறை, இளைஞர் மற்றும் மகளிர் விவகாரம், தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார அலுவல்கள், கிராமிய அபிவிருத்தி தமிழ்க் கல்வி அமைச்சர் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கண்டி- பேராதனையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று முன்தினம் கடமைக ளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மாகாண அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கு கண்டி – ரோயல் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இ. தொ. கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள், இந்நாள் மாகாண சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாண சபையில் நான்காவது தடவையாக அமைச்சராகியிருக்கும் இராதாகிருஷ்ணன் இங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதற்தடவையாக அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இ. தொ. கா. என்ன சொல்கிறதோ அதனைக் கட்டாயம் நிறைவேற்றித் தீருவேன்.
இந்திய உதவி தூதுவரிடம் சென்று உதவிகள் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 188 இந்து அறநெறிப் பாடசாலைகளையும் ஒரு கொள்கையின் கீழ் திட்டமிட்டு அபிவிருத்தி செய்வோம். ரம்பொடவிலுள்ள தொண்டமான் கலாசார நிலையத்தினை கவின்கலை நிறுவனமாக மாற்றி, நடனம், சங்கீதம், இசைக் கருவிகளுக்கான பாடநெறிகள் ஆரம்பிப்போம்.
தேசிய பாடசாலை என்பதில் நாம் உடன்பாடில்லை. தேசிய பாடசாலைகளை கொழும்பே நிர்வகிக்கின்றது. மாகாண அமைச்சு நிர்வகிக்க முடியாது. இன்று அதிகார பரவலாக்கலின் கீழ் தேசிய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.