பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் பல்வேறு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை இருப்பதே தெரியாது. சில நீதிபதிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட இவ்வாறான சட்டங்கள் இருப்பதனை அறிந்து வைத்திருக்கவில்லை. சட்டங்களின் அடிப்படையில் கணவனால் கூட மனைவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்த முடியாதென பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேன தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:-
பெண்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எமது சமுதாயத்தின் எண்ணத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நம் நாட்டுப் பெண்களை சக்திமிக்கவர்களாகத் தோற்றுவிக்க முடியும்.
ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகளின்படி பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தவிர ஏனைய பாலியல் துஷ்பிரயோகங்கள் பேரூந்துகளிலேயே இடம்பெறுகின்றன.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்கள் இதனைத் தவிர்ப்பதற்காக மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களது நலன்புரி செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் சுமேத ஜி. ஜயசேனவின் 20 வருட கால அரசியல் சேவையைப் பாராட்டி நாட்டின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அவரை விருது வழங்கி கெளரவித்தார். நேற்றைய நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பெண்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.