தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்வதற்கும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரி வித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வ ளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுயதொழில் ஆரம்பிக்க வழிகாட்டவும் கட்சி தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுதப்பிரிவில் இதுவரைக்காலமும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் கூறினார்.