சிலாபம், பள்ளம, மண்டலான பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் சிறுவர்கள் என்று சிலாபம் தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்தில் பத்துப் பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள ஐவரும் நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் சம்பவத்தில் பெரியமுல்லையைச் சேர்ந்த எட்டுப்பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன. இச்சம்பவத்தில் ட்ரக் வண்டியின் சாரதியும், நடத்துனரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் கூறின.
இச் சம்பவத்தில் உயிரிழந்த முஹம்மத் ஈஸான் (வயது 38), பாத்திமா நஸ்மியா (வயது 28), முஹம்மத் அல்தாப் (வயது இரு வருடங்களும் ஆறு மாதங்களும்) பாத்திமா அன்ஜிலா (வயது ஏழு மாதங்கள்) ஆகியோரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட பெரியமுல்லை வாசியொருவர் பாத்திமா பாத்திலா (வயது 50) இவர்களது அயல் வீட்டவர் என்றும் கூறினார். ஆனமடுவ, சங்கட்டிகுளத்தில் திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெரியமுல்லைவாசிகள் பயணம் செய்த வானும், ட்ரக் வண்டியுமே நேற்று மாலை 5.15 மணியளவில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டதாக பள்ளம பொலிஸார் கூறினர்.