செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐ.நா வின் கொழும்புக்கிளை போலியான தகவல்களை வெளியிட்டுள்ளது.

un-logo.jpgஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இராணுவத்தினருக்கும்  புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது 2863 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளை ஜெனீவாவில் உள்ள தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும்  இந்தப் புள்ளி விபரங்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பொய்யான அறிக்கையின் பிரதியொன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக் கிளையில் தயாரிக்கப்பட்டதென ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ்

minister.jpgபல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்களுக்கு ஒதுங்கக் கூரையும் உண்ண உணவும் மட் டும் போதாது என்றும் அம்மக்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நடத்தப்படல் வேண்டும் என்பதே எமது அரசின் கொள்கையாகும் என்றும் இதனையே தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அரச பணிப்பாளர்களை நேற்று சந்தித்து கலந்து ரையாடிய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கப் பிரதி நிதி என்ற வகையிலும் வட மாகாணத்தின் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் தான் இங்கு வருகை தந்து இப்பகுதியின் தற்போதைய பாரிய நெருக்கடிமிக்கப் பிரச்சினையான இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களின் பிரச்சி னைகளுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அரச பணியாளர்கள் தங்களை வெறுமனே அரச பணியாளர்களாக மட்டும் கொள் ளாது தமிழ் பேசும் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாகவும் கருதி இயன்றவரை நேர்மையான முறை யில் உணர்வு பூர்வமாக தங்களது பணிகளை மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எந்த வகையிலும் எந்த இடத்திலும் துர்ப்பிரயோகங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய வரையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களுக்கான பணி களை உரிய முறையில் முன்னெடுப்பதை தலையாய பணியாகக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்து வரும் பொது மக்களை வருடக் கணக்கில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தளவிற்கு விரைவில் அம்மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியுமோ அந்தள விற்கு விரைவாக அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடிய மர்த்தும்வரை அம்மக்களை நல்ல முறையில் பராமரித்து பாதுகாப்பது நமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.

யாழ். நலன்புரி நிலைய மாணவருக்கு இந்தியா உதவும்

160309.jpgவன்னியில் இருந்து யாழ். மாவட்டத்துக்கு வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் யாழ். அரச அதிபருக்கு அறிவித்துள்ளனர்.

மாணவர்களுக்குத் தேவையான கொப்பிகள் மற்றும் உபகரணங்களை இணங்கண்டு அது குறித்து தெரியப்படுத்துமாறு இந்தியத் தூதரகம் யாழ். செயலகத்தைக் கேட்டுள்ளது. தேவை குறித்த யாழ். செயலகத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்தியத் தூதரகம் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து வந்தவர்களில் இதுவரை 40 பேர் மரணம்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு கடந்த ஒரு மாதத்தில் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டோரில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெப்ரவரி 11 தொடக்கம் மார்ச் 14 வரை முல்லைத்தீவிலிருந்து கப்பலில் திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்ட 3,635 பேரிலேயே மார்ச் 20 ஆம் திகதி எடுக்கப்பட்ட புள்ளிவிபரப்படி 40 பேர் உயிரிழந்தனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 31. 1735 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருமலை ஆஸ்பத்திரியில் 31 பேர் மரணமானார்கள்.

கண்டியில் 7 பேரும் கொழும்பில் 2 பேரும் உயிரிழந்தனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் தற்போது 431 பேர் தங்கியுள்ளனர்.

ஏனைய ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு;

கண்டி115, கொழும்பு 63, மஹரகம 01, சிகிச்சை முடிந்து கொழும்பிலிருந்து 15 பேரும் கண்டியிலிருந்து 57 பேரும் மீண்டும் திருமலை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிவரப்பட்டனர். பொலநறுவை ஆஸ்பத்திரிக்கு 121 பேரும் கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு 80 பேரும் தம்பலகமம் ஆஸ்பத்திரிக்கு 75 பேரும் அனுப்பப்பட்டனர். 1893 பேர் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் நலன்புரி முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். மன்னார் ஆஸ்பத்திரிக்கும் 908 பேர் அனுப்பப்பட்டனர்.

கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு

ltte-sm.jpgபுதுக் குடியிருப்புக்கு கிழக்கே புலிகளால் கைவிடப்பட்ட நிலையிலுள்ள கடற்புலி முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ள பாதுகாப்புப் படையினர் அதிலிருந்து சிறிய ரக நீர்மூழ்கி உட்பட அதி நவீன உபகரணங்கள் பலவற்றையும் மீட்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புதுக்குடியிருப்பில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களை முற்றாக விடுவிக்கும் நோக்கில் முன்னேறிவரும் இராணுவத்தின் படைப் பிரிவுகள் இதனை கைப்பற்றியுள்ளன.

ஒருவர் மாத்திரம் செல்லக் கூடிய வகையில் இச் சிறிய ரக நீர் மூழ்கி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள படகுகள் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை, இரணைப் பாலை தென் பகுதியிலிருந்து அதி நவீன தொலைத் தொடர்பு கருவிகள், செய்மதி டிஸ் அன்டனாக்கள், தகவல் பரிமாற்ற கருவிகள் பலவற்றையும் படையினர் கண்டெடுத்துள்ளனர். சிறிய ரக நீர் மூழ்கியை வைக்கோல்களால் மறைத்த நிலையில் புலிகள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

அதேவேளை, பல முனைகள் ஊடாக முன்னேறிவரும் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. 

மேல் மாகாணத்தில் வட – கிழக்கை சேர்ந்தவர்களுக்கு இன்றும் நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு

ranjeth-gunasekara.jpgகொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வடக்குஇ கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைவரும் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பொலிஸ் பதிவிற்குட்படுத்தப் படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து கடந்த 5 வருடங்களுக்குள் மேல் மாகாணத்திற்கு வந்து நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்களே இவ்வாறு இரு தினங்களிலும் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடம், வடக்கு பின்னர் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மேல்மாகாணத்தின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தனித்தனியாக பொலிஸ் பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன்இஅதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் மீண்டும் ஒன்றாக பதிவுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே இன்றும், நாளையும் மீண்டும் பொலிஸ் பதிவு நடைபெறவிருக்கிறது. இவ்விரு தினங்களிலும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த பொலிஸ் பதிவின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு புதிதாக வந்து தங்கியிருப்பவர்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் உரிய ஆவணங்களுடன் வந்து பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், ஏற்கனவே பதிவுக்குட்படுத்தப்பட்டவர்களுக்கும் மீள தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டுமென்றும் ரஞ்சித் குணசேகர கூறினார்.

இதேநேரம், ஏற்கனவே மேல் மாகாணத்தில் பொலிஸாரால் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களிலேயே இம் முறையும் பதிவுகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ வீரச்சாவு

sri_.jpgதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார்.  கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.  .

இதன் ஊடாக ஊடகப் பணியினை திறம்பட செய்து வந்த இவர், அனைத்துலக உடகவியலாளர்களின் அறிமுகங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவியல் மேம்பாட்டுக்கான தகவல்களையும் ஆவணங்களையும் சேகரித்து விடுதலைப் புலிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஆவணப்படுத்தி வந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான இவர், தனது இருபதாண்டு காலத்தில் தாயக விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கான பக்கங்களில் தனது பணியை தனித்தன்மையுடன் சிறப்பாக  செய்து வந்தார். சிவானந்தராஜா சஞ்சீவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆவார் என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தகவல் நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தினால் வீண்செலவை தவிர்த்து, கூடிய பயனைபெற முடியும் – ஜனாதிபதி

upfa-website.jpgதேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என்றாலும் இதற்காக அதிக பணத்தை செலவு செய்து வீண்விரயம் செய்யமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்களுக்காக பாரிய பதாகைகள் சுவரொட்டிகள் என்பவற்றிற்கான நிதியை செலவு செய்வதைத் தவிர்த்து இணையத்தளம் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத் துவதன் மூலம் கூட்டங்களை கூட்டி ஏற்படும் பாரிய அனர்த்தங்கள், ஆபத்துக்களி லிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் www.Sandanaya.lk  என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் நேற்றுக்காலை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அலரி மாளிகையிலிருந்து இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி செய்மதி ஊடாக பி.எம்.ஐ.சி. எச்சில் பிரதான நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்:-

இந்த வருடம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமொழி விருத்திக்கான ஆண்டு என நான் அறிவித்திருந்தேன். அதன் ஒரு கட்டமாகவே இந்த இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உலகிலுள்ள எத்தனையோ நாடுகளும் அதன் தலைவர்களும் தமது சகல தேர்தல் பிரசாரங்களையும் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தியே முன்னெடுக்கின்றனர். இதன் ஒரு அடிப்படையாகவே எமது கட்சியின் பிரசார நடவடிக்கைகளையும் இணை யத்தளம் ஊடாக முன்னெடுக்க தீர்மானித்தோம்.

வடக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னெ டுத்துவரும் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். புலிகளுக்கு எதிராக படையினர் முன்னேறிவரும் அதேசமயம் அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். புலிகள் அத்துடன் நின்று விடாமல் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களை இலக்கு வைத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும். எமது பாதுகாப்பு அமைச்சும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலமே தமது நடவடிக்கையில் வெற்றிகளைக் கண்டுள்ளனர்.

இலங்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கான உலகத்தின் மிகவும் முன்னணி ஊடகமாக எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளம் விளங்குகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மூலம் தகவல்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மார்ச் 25இல் விஷேட பாராளுமன்ற அமர்வு

parliament.jpgநிதி தொடர்பான 5 சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி ஒருநாள் விஷேட பாராளுமன்றக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம்.லொக்குபண்டார தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிதியாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னதாக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிச் சட்டமூலங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருப்பதாக இதன்போது அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி இந்த 5 நிதிச் சட்டமூலங்களையும் ஒரே தினத்தில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதேநேரம், அன்றைய தினம் இந்த நிதிச் சட்டங்கள் மீதான விவாதம் பிற்பகல் ஒரு மணியுடன் முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் மாலை 4 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக ஜே.வி.பி.யின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

வாக்குச்சாவடியில் வாக்கெண்ணுதல் ரத்து: தேர்தல் ஆணையரின் முடிவுக்கு கட்சித் தலைவர்கள் வரவேற்பு

election_ballots.jpgமேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குச்சாவடிகளிலேயே எண்ணுவதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தைக் கைவிடுவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்திருக்கும் முடிவை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா நேற்று சந்திப்பொன்றை நடாத்தினார்.

இச்சந்திப்பின்போது மேல் மாகாண சபைத் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை வாக்குசாவடிகளில் எண்ணுவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் காலநிலையை கருத்திற்கொண்டுதான் இத்தீர்மானத்தை கைவிடுவதற்கு முடிவு செய்ததாக தேர்தல் ஆணையாளர் கூறினார். ஆகவே வழமைபோன்று வாக்குகளை எண்ணும் நிலையங்களிலேயே மேல் மாகாண சபைத் தேர்தலிலும் அளிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து இச்சந்திப்பில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றனர். இராஜகிரியிலுள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சந்திப்பில் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பெப்ரல் மற்றும் சி.எம். ஈ. வி. தேர்தல் கண்காணிப்பு நிலையங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.