செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முல்லைத்தீவு நோக்கிய நகர்வில் 50,000 படையினர் ஈடுபடுவர்

kili-05.jpgமுல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

புலித் தலைவர் பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டது – கிழக்கு மாகாண முதலமைச்சர்

cm.jpgபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (04)  மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், புலிகளது நிருவாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம். ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கி கொலை செய்த பிரபாகரன் தானும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குண்டு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும்.

கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாய சமூகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இதற்காகவே தான் ஜனாதிபதியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்னேற்றங்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு பாரிய வெற்றியைக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரபு நாடுகளில் 30,000 இலங்கையர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

kkhaliya.jpgஅரபு நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தமது வேலைவாய்ப்பை அந்நாடுகளில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். அரபு நாடுகளிலும் தென்கொரியாவிலும் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற 18 ஆயிரம் இலங்கையர்கள் அவர்களது தொழில் ஒப்பந்தங்களில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அல்லது நீக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 15 நாடுகளின் தொழிலாளர்களில் இலங்கையரும் அடங்குவர். தென்கொரியாவிலும் நிதி நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை அவர்களின் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மட்டுமன்றி உயர்பதவி வகிப்பவர்களும் உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அரபு நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருக்கும் சுமார் 2 இலட்சத்து 38 ஆயிரம் இலங்கையர்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் பேர் ஆண்களாவர். இவர்களில் அநேகமானவர்கள் கட்டிட நிர்மாணத் தொழிற்துறைகளிலேயே தொழில் புரிகின்றனர்.

அவர்களில் சாதாரண தொழிலாளர்கள் மாத்திரமன்றி நில அளவையாளர்கள் , படவரைஞர்கள் மற்றும் பொறியியலாளர்களும் அடங்குவர். பல கட்டிட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது தொழில்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இந்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதென்பது சிரமமானது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அரபு நாடுகள் வேலைவாய்ப்புகான விஸா வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக கட்டார் போன்ற நாடுகளின் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் இத்தாக்கம் ஏற்பட்டுள்ளது.

டியூசன் வகுப்பு குரோதம்- அதிபரை டியூசன் ஆசிரியர் அடித்துக் கொலை

இரத்தினபுரி கிலிமலே சமனல மகா வித்தியாலய அதிபர் (04) பொல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாடசாலையில் வைத்து இடம் பெற்றுள்ளது. பாடசாலையில் சிரமதான வேலையில் ஈடுபட்டிருந்த அதிபரை அங் கிருந்த ஒருவர் பொல்லால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான அதிபர் பாடசாலை காரியாலயத்திற்கு காயத்துடன் சென்று விழுந்து இறந்துள்ளார்.

அதிபரை பொல்லால் தாக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினரென தெரிய வந்திருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது கிலிமலே இந்துருவயை வசிப்பிடமாகக் கொண்ட குணபால பெரேரா (46) என்பவரே இறந்தவராவார்.  டியூசன் வகுப்பு சம்பந்தமாக நீண்டகாலமாக நிலவி வந்த குரோதமே இக்கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துக்கு காரணமான நபர் தறைமறைவாகியுள்ளார். இவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் தினத்தில் நாமும் பட்டாசு கொளுத்தி மகிழ்வோம் – மனோகணேசன்

mano_ganesan.jpgஆயுத போராட்டத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ள தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கு நேர்மையான அதிகார பரவலாக்கல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் தினத்தன்று இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம். அந்த கொண்டாட்டத்தை தலைநகர தமிழர்களின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் கொழும்பு மாநகரில் நானே நேரடியாக நின்று பட்டாசு கொளுத்தி, தெருக்கள் எங்கும் ஊர்வலம் நடத்தி கொண்டாடுவேன். அன்றைய தினமே நேரடி அரசியலிருந்து நான் விடைபெறும் தினமாகவும் அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தொடர்பிலும் இது காரணமாக நாடெங்கும் நடைபெற்றுள்ள கொண்டாட்டங்கள் தொடர்பிலும் தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது; கிளிநொச்சி நகரை இராணுவம் கைப்பற்றியது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் வெற்றியுமல்ல வடக்கிற்கு எதிரான தெற்கின் வெற்றியுமல்ல என்ற ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால், இந்த கருத்துகள் நடைமுறையுடன் பொருந்தவேண்டும். வடக்கிலே இன்று ஒரு போராட்டக்களம் இருக்குமானால் கிழக்கிலே ஒரு அரசியல் போராட்டக்களம் இருக்கின்றது. அதுதான் உங்களது கிழக்கு மாகாணசபையாகும். மாகாணசபை முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வாகாது. இருந்தாலும் அது இன்று அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தமாகும். ஆனால், நீங்கள் இந்த திருத்தம் என்ற சட்டத்தையும் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.

உங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் சொல்வதையும் நீங்கள் கேட்கவில்லை. அமைச்சர் திஸ்ஸவிதாரண தலைமையிலான உங்களது சர்வகட்சி கடையையும் இன்று மூடிவிட்டீர்கள். அரசாங்கம் யுத்த களத்தில் வெற்றிகளை குவிப்பதாக கூறுகின்றது. அது எங்களுக்கும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அரசியல் களத்தில் எதையுமே பார்க்கமுடியவில்லை என்பதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதிலும் இந்த அரைகுறை மாகாணசபை செயற்பாடுகளையும்கூட அரசாங்கத்தின் சில செல்வாக்குமிக்க பிரிவினர் எதிர்க்கின்றார்கள் இது நிலைமையை இன்னமும் மோசமடைய செய்கின்றது.

இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி, மலாய் ஆகிய அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சொந்தமானது என ஜனாதிபதி சொல்கிறார். ஆனால், இன்னொரு பிரிவினர் இந்நாடு பெரும்பான்மை இன, மதத்தவருக்கு மாத்திரமே சொந்தமானது என கூறுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது முழுமையான இராணுவ தீர்விற்கு பிறகு நடைமுறையாகும் என்ற கருத்தை தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த கருத்தை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இதுதான் இன்றைய மறுக்கமுடியாத யதார்த்தமாகும்.

மீளக்குடியேறாதோரின் காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாகர் கோவில் தெற்கு, வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் இதுவரை மீளக் குடியேறாதவர்களின் விபரங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, காணியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அறிவித்துள்ளதாவது;

வலிக்கண்டி மீள்குடியேற்றத் திட்டத்தில் (நாகர்கோவில் தெற்கு) 120 குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு தீர்மாணிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் 72 குடும்பங்கள் குடியேறியுள்ளன. மீதி 48 குடும்பங்களும் இதுவரை குடியேறவில்லை. இவ்வாறு குடியேறாதவர்களை உடனடியாக குடியேறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குடியேறத்தவறுபவர்களின் வீடுகள் சம்பந்தமாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு காணி அபிவிருத்திச் சட்டத்தின் 106 ஆம் பிரிவின் கீழ் இவர்களுக்கான காணி ஒதுக்கீடு இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவிடயமாக, மேலதிக விண்ணப்பங்கள் எவையும் பரிசீலனை செய்யப்படமாட்டாதெனவும் உதவி அரச அதிபர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் விமானப்படை தளங்களுக்கு விஜயம்

dep-sec.jpgபாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தலைமையிலான சிரேஷ்ட உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் மூன்று விமானப் படைத்தளங்களுக்கு விஜயம் செய் துள்ளனர். ஹிங்குரங்கொடை, சீனக்குடா மற்றும் கட்டுநாயக்க ஆகிய விமானப் படைத்தளங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதி காரிகள் படைவீரர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஹிங்குரங்கொடை விமானப்படைத் தளத்தை சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளரை தளத் தளபதி விங் கமாண்டர் டி. கே. வனிகசூரிய வரவேற்றுள்ளார். விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. 24 விமானங்களை பயன்படுத்தும் விமானப் படைவீரர்கள் முன்னிலையில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் வன்னியை விடுவிக்கும் படை நடவடிக் கைகளுக்கு விமானப் படையினர் வழங் கிய உதவி, ஒத்துழைப்புகளுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சீனக் குடா விமானப் படைத் தளத்திற்கு விஜயம் செய்து பாதுகாப்புச் செயலாளரை சீனக்குடா விமானப்படைத் தளத்தின் தளபதி குறூப் கப்டன் விஜித குணரட்ன வரவேற்றுள்ளார். இதேவேளை கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளரை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் தளபதி எயார் கொமொடோர் சி. ஆர். குருசிங்க வரவேற்றுள்ளார். விமானப்படையினர் எம். ஐ. 27 ரக விமானங்களை பயன்படுத்தும் 10ம் இலக்க விமானப் படை வீரர்கள், கிபிர் விமானங்களை பயன்படுத்தும் 10வது இலக்க விமானப் படைவீரர்கள் மற்றும் எப் 7 விமானங்களை பயன்படுத்தும் 5ம் இலக்க விமானப்படை வீரர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னி படை நடவடிக்கைகள் வெற்றி பெற விமானப் படையினரின் மேற்படி பிரிவினர் முழுமையான ஒத்துழைப்புகளுக்கும் தனது பாராட்டுக்களை செய்துள்ளனர்.

காஸா வட பகுதியில் கடும் சமர்; சில பகுதிகள் இஸ்ரேல் வசம்

gaasaa.jpgகாஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.

வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.

விமானப் படைத் தளபதியை தற்கொலை குண்டுதாரி இலக்கு வைத்தாரா?

blast.jpgகடந்த வெள்ளிக்கிழமை விமானப்படை தலைமையகத்தின் முன்பாக இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் விமானப் படைத்தளபதி ஏயார் சீவ் மார்ஷல் றொசான் குணத் திலகவை இலக்கு வைத்தே நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் , சம்பவ நேரம் விமானப் படைத்தளபதி விமானப்படைத்தலைமையகத்துக்கு வரவில்லை எனவும், அவர் தனது தங்குமிடத்துக்குச் சென்று விட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியை படையினர் மீட்ட வெற்றி நாள் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது அதில் விமானப் படைத்தளபதியும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வு முடிந்த பின்னர் விமானப்படைத்தளபதி விமானத் தலைமையகத்துக்கு வருவார் என்று எண்ணி தற்கொலைக்குண்டுதாரி இருந்துள்ளார். ஆனால் , விமானப்படைத்தளபதி ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வுகள் முடிவுற்றதும் நேரடியாகவே தனது இருப்பிடத்துக்கு சென்றுள்ளார். இதனால் அவர் இத்தாக்குதலில் சிக்காமல் தப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல்மாகாணத்தில் சுமுகமான பொலிஸ் கணக்கெடுப்பு

colo-reg.jpgவடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து மேல் மாகாணத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபர்கள் தொடர்பான கணக்கெப்பு நேற்று இடம்பெற்றது.  மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் நேற்றுக் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற இந்த கணக் கெடுப்பில் பெருந்தொகையானோர் பங்குகொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே நேற்றைய கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்தந்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தமது தகவல்களை வழங்கிய துடன் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பும் பலப்படுத் தப்பட்டிருந்தன. கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வந்த மக்கள் எவ்வித தங்கு தடைகளும், தாமதங்களுமின்றி பதிவு செய்ய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.