காஸா மீது தரைமார்க்கமான படையெடுப்பை நேற்று இஸ்ரேல் ஆரம்பித்தது. உலக நாடுகளின் அறிவுரைகளை உதாசீனம் செய்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் காட்டுப்பாட்டில் உள்ள காஸாவை நோக்கி படைகளை நகர்த்தியது. இதனால் இரு தரப்புக்குமிடையே மூர்க்கமான மோதல்கள் வெடித்தன. ஹமாஸின் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலையும், வீதியோரக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள முடியாமல் திணறிய இஸ்ரேல் இராணுவத்துக்கு வான்படைகள் உதவின.
வீதியோரங்களில் நின்ற ஹமாஸ் தற்கொலைப் போராளிகள் மீது விமானங்கள் குண்டு மழை பொழிய யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் ஆட்டிலறிகளுடன் இஸ்ரேல் தரைப்படை காஸாவை நோக்கி நகர்ந்தன. காஸாவின் வடக்குப் பகுதி நோக்கி நகர்ந்த இஸ்ரேல் இராணுவத்தை ஜபாலியா டெல்ட் ஹனூன், டெல்ட் லாஹ்யா என்ற இடங்களில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்தினர். இரு தரப்பாருக்குமிடையே இவ்விடங்களில் கடும் சமர் மூண்டதால் விண்ணைப் பிளக்கும் வெடியோசைகள் கேட்டதாக தப்பியோடிய பொதுமக்கள் தெரிவித்தனர்.
வான் படைகளின் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய இஸ்ரேல் படையினர் காஸாவின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹமாஸின் முக்கியஸ்தர்கள் சுரங்கப் பாதைகளுக்குள் மறைந்திருந்து வான் தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளதாக ஹமாஸின் வானொலியை இடைமறித்துக் கேட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர். மத்திய கிழக்கில் தற்போது மூண்டுள்ள நெருக்கடி பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தாக்குதலை உடனடியாக நிறுத்தி அப்பாவிகளின் உயிர்களைக் காக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் பான்கி மூன் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் அரபு நாடுகள் இது விடயத்தில் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென வேண்டியுள்ளார். அகதிகளாகியுள்ள காஸா மக்களைக் காப்பாற்ற அரபு லீக் நடவடிக்கையெடுப்பது அவசியமென இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன.