எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆனந்த குமார சுவாமி நிவாரண கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்

_mullai_.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்கென வவுனியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிவாரணக் கிராமமான ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 849 குடும்பங்களைச் சேர்ந்த 3215 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். இக்கிராமத்துக்கு நேற்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி துரிதமாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

வவுனியாவுக்கு இதுவரை 40 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளதோடு அவர்கள் தாங்களாகவே சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நடவடிக்கை புதன் கிழமைக்கு முன் பூர்த்தி செய்யப்பட உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் புதன்கிழமை முதல் தாங்களாகவே சமைக்க உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா வந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் அதிகளவான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்கள் என நாம் அறிகின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களில் மட்டும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை நான் சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்ட தூரம் நடைபவனியாக வந்து இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த உயர்மட்ட மகாநாட்டில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம், தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆனந்த குமார சுவாமி கிராமத்தில் உள்ள சில நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க தேவையேற்படின் அவர்களை மன்னார் வைத்திய சாலைக்கு உடன் அனுப்பு வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை அங்கவீனமுற்ற வர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என்பனவற்றை யும் அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மக்களுக்கு இதன்போது குடிநீர் வசதி அளிப்பதற்கென 2 பவுசர்கள் வழங்க அரச சார்பற்ற நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது நிவாரணக் கிராமம் அமைப் பதற்கான பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதோடு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் அரசினதும் நோக்கம் – அமைச்சர் டளஸ்

நாட்டினதும் மக்களினதும் தேவைக் கேற்ப புதியதொரு நாட்டை கட்டியெழு ப்புவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

கடந்த காலத்தையும் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளையும் பற்றி பேசிக் காலத்தை கழிப்பதைவிட சிறந்ததொரு எதிர்காலத்திற்காக திட்டமிடுவது காலத் தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. அலரி மாளிகையிலிருந்தவாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்மதி ஊடாக இணையத் தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு மேலும் உரையாற்றுகையில் :- வீணான செலவுகளை தவிர்த்து இந்த இணையத் தளத்தின் ஊடாக எமது சகல பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம். எங்களது சகலவிதமான புதிய திட்டங்களையும் எமது ஆதரவாளர்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகள், பொருளாதார அபிவிருத்தி திட்டம், அரசியல் மேம்பாடு என்ற பல வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.

தெற்கில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் பொதுமக்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன

l-yaappa-abayawardana-01.jpgபுலிகள் தமது வசமிருக்கும் சிறிய பிரதேசத்தையும் எதிர்வரும் நாட்களில் இழக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்கள் தெற்கில் தாக்குதலை நடத்தலாமென ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார். இந் நிலையில் உயிர் இழப்பையும் சொத்துகள் சேதமடைவதையும் தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் குறித்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் சனிக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போது புலிகளிடமுள்ள சிறியளவு பகுதியையும் எதிர்வரும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விரக்தியடைந்த புலிகள் தெற்கில் அழிவையேற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தலாம். எனவே பஸ்கள் மற்றும் பொது இடங்களில் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் காணப்படின் உடனடியாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அறிவிப்பதுடன் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

ஈழத்தமிழருக்காக தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

kothamangalam-balasundharam.jpgஈழத் தமிழர்களை காக்கக்கோரி மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.

கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.  இன்று (22.03.09) மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டலுக்கு மிரட்டல்

மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று கோவை ஓட்டல் ஒன்றிற்கு இ மெயில் மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றிற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அல் குவைதா இயக்கத்தின் பெயரில் வந்த இந்த மிரட்டல் இமெயிலில், மும்பை தாஜ் ஓட்டல் பாணியில் தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.எஸ்.பி.வாஸ் குணவர்தனவின் வழி நடத்தலில் வர்ஷாவின் கொலை விசாரணை நடைபெறுகிறது

Regie_Varsaதிரு கோணமலை மாணவி வர்ஷாவின் கொலை தொடர்பான விசாரணைகள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்த்தனவின் வழி நடத்தலில், மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை பொலிஸ் தலைமைக்காரியாலய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார்.  இலங்கைப் பொலிஸ் சேவையின் 145 ஆவது வருட நிறைவைக்குறிக்கும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிறுமியின் கொலை இடம்பெற்று முப்பத்தாறு மணித்தியாலங்களுக்குள், சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வாஸ் குணவர்தனவின் தலைமையில் பொலிஸ் குழு எடுத்த தீவிர நடவடிக்கையினால் இது சாத்தியமாயிற்று என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

“வணங்கா மண்’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் – கடற்படை எச்சரிக்கை

Vanni_Missionவன்னிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் வரும் “வணங்கா மண்’ என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமென இலங்கை கடற்படை எச்சரித்துள்ளது.

வன்னியில் படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் வழங்கும் சுமார் 2 ஆயிரம் மெற்றிக்தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்களுடன் “வணங்காமண்’ என்ற கப்பல் எதிர்வரும் 26 ஆம் திகதி பிரிட்டனிலிருந்து இலங்கையை நோக்கி புறப்படவுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கொடியுடன் இந்த கப்பல் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானோர் வன்னி மக்களுக்கென்ற பேரில் இந்த உணவுப்பொருட்களை விடுதலைப்புலிகளுக்கு கொண்டுவரமுற்படுவதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  அத்துடன் இந்த கப்பலானது இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தால் அதன் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் எதிர்ப்பையும் மீறி “வணங்காமண்’ என்ற அந்த கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டு செல்ல பிரிட்டனைச் சேர்ந்த தமிழமைப்பு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இதேநேரம், அந்த கப்பலின் உரிமையாளர் குறித்த விபரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வினோ நோகராதலிங்கத்தின் கூற்று தொடர்பில் த.தே.கூ அதிருப்தி

thangeswary.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்  அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். வினோநோகராதலிங்கத்தின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வாழும் வன்னிப் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பானதும், அமைதியானதுமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக வினோநோகராதலிங்கம் தெரிவித்திருந்தார். மேலும் மக்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் பூரண கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இதுவரை எவ்வித கருத்து வேறுபாடுகளோ பிரிவினைகளோ ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இந்த நிலை தொடரவேண்டுமென்பதே அனைவரதும் விருப்பமாகும். அது தொடருமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார்.