எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பாக்தாத் வட்டகையில் பாதுகாப்பு படைகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன

iraq.jpgஇராக்கின் ஃபதில் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதில் குறைந்தது மூவராவது உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஃபதில் மாவட்டத்துக்குச் செல்லும் சகல பிரதான பாதைகள் அனைத்தையும் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு படைகள் கைப்பற்றிக் கட்டுப்படுத்தியுள்ளன.

சுனி பிரிவு போராளிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைகளை அமெரிக்க வீரர்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இராக்கிய துருப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் இராக்கிய மற்றும் அமெரிக்க போர்வீரர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுனி பிரிவு தலைவரின் ஆதரவாளர்களுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துக்கிளம்பின. இராக்கிய போர்வீரர்கள் ஐவர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சுனி பிரிவு மனிதர் அல்கைதாவுடன் முன்னர் இயங்கிவந்த எழுச்சி இயக்கம் என்ற குழுவைச் சேர்ந்தவர். பின்னர் அதிலிருந்து அவர் கட்சித் தாவியிருந்தார் என்று கூறப்படுகிறது.

“மூன்று மாத காலங்களுக்குள் பால் உற்பத்தி 23 வீத வளர்ச்சி”

இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் பால் உற்பத்தியில் 23 வீதம் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையினால் பால் உற்பத்தி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசார நடவடிக்கையின் பயனாகவே இந்த இலக்கை அடையக் கூடியதாகவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு வருடங்களுக்குள் 150 பால் விற்பனை நிலையங்களை திறப்பதனை சவாலாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே சவாலை வெற்றி கண்டுவிட்டோம். இது பால் உற்பத்தியாளர்களதும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதுமான பெரும் வெற்றியாகும் என்றும் சபையின் தலைவர் கூறினார். ஹுனுபிட்டியவில் கடந்த 24ம் திகதி 150 வது பால் விற்பனை நிலையம் திறந்த வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கம் பஹா மாவட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி மாத்திரம் 09 பால்விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை ஊடாக 500 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நடவடிக்கை

karuna1.jpgஅமைச்சர் பதியேற்று பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகணத்திலுள்ள 500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிழக்கு மாகாணசபையுடாக பட்டதாரி நியமனம் வழங்குவதற்க்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் மக்களின் அவலங்கள் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்குகின்ற அவலநிலை குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் து.வரதராஜா அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பாதுகாப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன் போன்ற கிராமத்தில் அதாவது 25 சதுர பரப்பளவில் கிட்டத்தட்ட 300,000 மக்கள் செறிவாக வசித்து வருகின்றனர். மக்கள் வசித்துவரும் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 750M-2 ஓட் தூரத்திலே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் எறிகணை, பல்குழல், தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, பொஸ்பரஸ்குண்டு என்பன மக்கள் மீது செறிவாக வீசப்பட்டு வருகின்றமையால் நாள்தோறும் சராசரியாக 30-50 வரையான மக்கள் இறந்தும் 75-150 வரையான மக்கள் காயமடைந்தும் வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 523 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சுகாதாரம்

2008 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டுக்குரிய மருந்துப்பொருட்கள், 2009 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக்கான மருந்துப்பொருட்கள் ஆகியவை எமக்கு வவுனியாவில் கிடைக்கப்பெற்றும் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததன் காரணமாகவும் ஏ9 பாதை மூடப்பட்டதன் காரணமாகவும் இந்த மருந்துப்பொருட்கள் எமது மாவட்டத்திற்கு வந்துசேரவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பல் மூலம் திருகோணமலை ஊடாக இங்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருந்தும் அனுப்பிவைக்கப்படவில்லை. பலமுறை தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் மருந்துகள் கோரப்பட்டும் மூன்று தடவைகள் சொற்ப மருந்துகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய மருந்துகளான மயக்க மருந்துகள், இரத்தப்பை, கிருமிகொல்லி மருந்துகள் (Oral, Antibiotic) சிறுவர்களிற்கான சிறப் வகை மருந்துகள், ஜீவனி போன்றன முற்றாக முடிந்துள்ளன.

நீர் சுகாதாரம்

தற்போதைய மிகச் சிறிய நிலப்பரப்பில் (கடற்கரை, வயல், சேற்று நிலம்) மிகச் செறிவான மக்கள் வாழ்ந்து வரும் இச்சூழலில் இங்குள்ள மக்கள் தறப்பாளினால் ஆன வீடுகளினை நெருக்கமாக அமைத்து அதற்குள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற்கான போதியளவான மலசலகூடம், போதியளவான நீர்வசதி இல்லாதுள்ளமையால் இங்குள்ள மக்களிற்கு அதிகளவான தொற்று நோய்கள் ஏற்பட ஏதுவாகவுள்ளது. அத்துடன், மலசல கூடங்கள், நீர் வசதிகளினை அதிகளவில் நிறைவேற்றுவதற்கு போதியளவான இடசவதியில்லாதுள்ளதுடன் அவ்வாறான வசதிகளினை ஏற்படுத்துவதற்கு போதியளவான மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளினைப் பெறுவதற்கான அரச சார்பற்ற நிறுவனங்களும் இங்கு இல்லாதுள்ளமையும் பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது.

கற்பவதிகள்

இங்குள்ள கற்பவதிகளிற்கான எந்தவிதமான போஷாக்கான உணவுகளும் (மரக்கறி வகைகள், இறைச்சி, முட்டை, பால், பால்மா வகைகள், பழவகைகள்) என்பன கிடைக்கப் பெறாமையால் இங்குள்ள கற்பவதிகளிற்கு குருதிச் சோகை நோய் பெரும்பாலும் அவதானிக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விரைவில் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் கற்பவதிகள் ஷெல்தாக்குதல் பயணத்தில் பெரும்பாலான நேரம் பதுங்குக் குழிக்குள் அவசரமாக செல்வதனால் அவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவதும் விழுந்து அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. அதனால், கருச்சிதைவும் அதிகம் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு வாரத்திற்கு மட்டும் எறிகணைத் தாக்குதலினால் 20 கற்பவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் 08 கற்பவதிகள் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துள்ளனர். நான்கு சிசுக்கள் கருப்பைக்குள்ளேயே காயமடைந்து இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டனர். அத்துடன், 05 கற்பவதிகள் ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட இறந்த உடல்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

குழந்தைகள்

தினந்தோறும் 20-50 வரையான குழந்தைகள் காயமடைகின்றனர். 10-15 வரையான குழந்தைகள் ஷெல் தாக்குதல்களினால் இறக்கின்றனர். அத்துடன் தினமும் ஒரு குழந்தையாவது நோய்வாய்ப்பட்டு மருந்து பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இறக்கின்றது. கடந்த 26.03.2009 ஆம் திகதி வைத்தியசாலையில் சிறுவர் விடுதிக்கு அண்மையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் விடுதியினை விட்டு ஓடி வீடு சென்று மறுநாளே திரும்பி வந்தனர். மருந்து சீராகக் கொடுக்கப்படாததன் காரணமாக இரு குழந்தைகள் இறந்து விட்டனர்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு போதிய உணவு இல்லாததன் காரணத்தால் பால் கொடுக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். பதிலாக கொடுப்பதற்கு எஸ்.எம்.ஏ. லக்டோஜன் பால்மா வகைகள் இல்லாதுள்ளமையால் பிள்ளைகள் பெரிதும் நலிவுற்றுக் காணப்படுகின்றார்கள். அத்துடன் ஷெல் தாக்குதலில் தாய்மாரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால்மா இல்லை. இதுதவிர குடும்ப அங்கத்தவர்கள் காயமடைவதையும் இறப்பதையும் பார்த்த சிறுவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாப்பான வேறு இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அநாதைகளாக திரிவதும் அவதானிக்கப்படுகின்றது.

உணவு

இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் கச்சேரியால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே தங்கியுள்ளனர். 3 இலட்சம் மக்களுக்குத் தேவைப்படும் அளவிலும் பார்க்க மிகவும் குறைவான அளவிலேயே உணவு அனுப்பப்படுகின்றது. அதிலும் அரிசி ஒரு தடவை மட்டுமே வந்தது. இங்குள்ள மக்களில் 70% மான மக்கள் மரக்கறி உண்டு இரண்டு மாதங்களாகி விட்டது. மூன்று மாதங்களாக சுகாதாரத் திணைக்களத்தினூடாக வந்து சேர வேண்டிய திரிபோசா, சோளன் சோயா மாவும் வரவில்லை.

வன்னியில் 5000 பொதுமக்கள் பலி, 15000 க்கும் மேற்பட்டோர் காயம்: ஸ்ரீகாந்தா பா.உ

srikanthaa.jpgவன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில் 500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதிகளில் கடும் மோதல்; புலிகளின் பாரிய மண்அணை படை வசம்

srilanka_army1.jpgமுல்லைத் தீவு, புதுக்குடியிருப்புப் பகுதிகளில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கரியமுல்லைவாய்க்கால் பகுதியில் புலிகளின் மண்ணனையொன்றைப் படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். புலிகளிடமுள்ள மிகச் சிறிய பகுதியையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் 53, 57, 58ஆம் படைப்பிரிவின் இரண்டாம் தாக்குதல் படையணியுடனான மோதலில் புலிகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணு வத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது புலிகளின் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இதில் மூன்று சடலங்கள் பழுதடைந்திருந்ததாகவும் பேச்சாளர் தெரிவித்தார். இதேநேரம், பல ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூதூர் பிரதேசத்தில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

pisto.jpgதிரு கோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள தங்கநகரில் நேற்றிரவு குடும்பஸ்தரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

செல்லத்துரை நல்லதம்பி ( வயது 52 ) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டிற்கு முன்பாக நின்றிருந்த வேளை அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் வி.முரளிதரன் இன்று மட்டக்களப்பு விஜயம்.

karuna1.jpgதேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு வந்தடைந்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சு பதவியேற்ற பின் மட்டக்களப்புக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவையாகும். இவ் விஜயத்தில் பல்வேறுப்பட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளார்

வன்னியில் காயமடைந்த 512 நோயாளர்கள் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

people-_flee.jpgவன்னியில் இடம்பெற்றுவரும் மிக மோசமான போர் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 512 நோயாளர்கள் நேற்று சனிக்கிழமை கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் வழித்துணையுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நோயாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட “கிரீன் ஓசன் ஓ’ கப்பல் நேற்று இரவு 8.35 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.

புல்மோட்டையை வந்தடைந்த “கிரீன் ஓசன் ஓ’ கப்பலில் இருந்த 512 நோயளர்களையும் 20 செஞ்சிலுவைச் சங்க சர்வதேசப் பணிப்யாளர் 8 படகுகளை வேலைக்கு அமர்த்தி கரைக்கு அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதுவரை செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழு முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் மோதல் நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட 5500க்கு மேற்பட்டோரை கப்பல் மூலம் அழைத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவினரால் அழைத்துவரப்படும் நோயாளர்கள் திருகோணமலை, புல்மோட்டை, கந்தளாய், பதவியா மற்றும் வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டோரில் இறந்தவர் தொகை 46

pullmottaiindiadoctors.jpgபெப்ரவரி 11ஆம் திகதி தொடக்கம் மார்ச் 14 ஆம் திகதி வரை திருகோணமலைக்கு முல்லைத்தீவிலிருந்து கப்பலில் கூட்டிவரப்பட்டு திருகோணமலை, கண்டி, கொழும்பு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று சனிக்கிழமை நண்பகல் 12 மணிவரை 46 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை ஆஸ்பத்திரியில் 32 பேரும் கண்டிபோதனா வைத்தியசாலையில் 09 பேரும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் 05 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக 33 குழந்தைகள் பிறந்துள்ளன. திருகோணமலைக்கு கூட்டி வரப்பட்ட 3,635 முல்லைத்தீவு பொதுமக்களில் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே 3,236 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்விபரம் வருமாறு;

வவுனியா ஆஸ்பத்திரி, நலன்புரிமுகாம்2,019
மன்னார் ஆஸ்பத்திரி908
கொழும்பு தேசிய வைத்தியசாலை61
கண்டி போதனா வைத்தியசாலை 54
மகரகம போதனா வைத்தியசாலை01
பொலநறுவை ஆஸ்பத்திரி 100
கந்தளாய் ஆதார வைத்தியசாலை57
தம்பலகமம் ஆஸ்பத்திரி 35

நேற்று சனிக்கிழமை வரை திருகோணமலை ஆஸ்பத்திரியில் பெப்ரவரி11 தொடக்கம் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.