முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்குகின்ற அவலநிலை குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் து.வரதராஜா அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
பாதுகாப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன் போன்ற கிராமத்தில் அதாவது 25 சதுர பரப்பளவில் கிட்டத்தட்ட 300,000 மக்கள் செறிவாக வசித்து வருகின்றனர். மக்கள் வசித்துவரும் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 750M-2 ஓட் தூரத்திலே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் எறிகணை, பல்குழல், தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, பொஸ்பரஸ்குண்டு என்பன மக்கள் மீது செறிவாக வீசப்பட்டு வருகின்றமையால் நாள்தோறும் சராசரியாக 30-50 வரையான மக்கள் இறந்தும் 75-150 வரையான மக்கள் காயமடைந்தும் வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 523 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சுகாதாரம்
2008 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டுக்குரிய மருந்துப்பொருட்கள், 2009 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக்கான மருந்துப்பொருட்கள் ஆகியவை எமக்கு வவுனியாவில் கிடைக்கப்பெற்றும் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததன் காரணமாகவும் ஏ9 பாதை மூடப்பட்டதன் காரணமாகவும் இந்த மருந்துப்பொருட்கள் எமது மாவட்டத்திற்கு வந்துசேரவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பல் மூலம் திருகோணமலை ஊடாக இங்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருந்தும் அனுப்பிவைக்கப்படவில்லை. பலமுறை தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் மருந்துகள் கோரப்பட்டும் மூன்று தடவைகள் சொற்ப மருந்துகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய மருந்துகளான மயக்க மருந்துகள், இரத்தப்பை, கிருமிகொல்லி மருந்துகள் (Oral, Antibiotic) சிறுவர்களிற்கான சிறப் வகை மருந்துகள், ஜீவனி போன்றன முற்றாக முடிந்துள்ளன.
நீர் சுகாதாரம்
தற்போதைய மிகச் சிறிய நிலப்பரப்பில் (கடற்கரை, வயல், சேற்று நிலம்) மிகச் செறிவான மக்கள் வாழ்ந்து வரும் இச்சூழலில் இங்குள்ள மக்கள் தறப்பாளினால் ஆன வீடுகளினை நெருக்கமாக அமைத்து அதற்குள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற்கான போதியளவான மலசலகூடம், போதியளவான நீர்வசதி இல்லாதுள்ளமையால் இங்குள்ள மக்களிற்கு அதிகளவான தொற்று நோய்கள் ஏற்பட ஏதுவாகவுள்ளது. அத்துடன், மலசல கூடங்கள், நீர் வசதிகளினை அதிகளவில் நிறைவேற்றுவதற்கு போதியளவான இடசவதியில்லாதுள்ளதுடன் அவ்வாறான வசதிகளினை ஏற்படுத்துவதற்கு போதியளவான மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளினைப் பெறுவதற்கான அரச சார்பற்ற நிறுவனங்களும் இங்கு இல்லாதுள்ளமையும் பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது.
கற்பவதிகள்
இங்குள்ள கற்பவதிகளிற்கான எந்தவிதமான போஷாக்கான உணவுகளும் (மரக்கறி வகைகள், இறைச்சி, முட்டை, பால், பால்மா வகைகள், பழவகைகள்) என்பன கிடைக்கப் பெறாமையால் இங்குள்ள கற்பவதிகளிற்கு குருதிச் சோகை நோய் பெரும்பாலும் அவதானிக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விரைவில் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் கற்பவதிகள் ஷெல்தாக்குதல் பயணத்தில் பெரும்பாலான நேரம் பதுங்குக் குழிக்குள் அவசரமாக செல்வதனால் அவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவதும் விழுந்து அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. அதனால், கருச்சிதைவும் அதிகம் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு வாரத்திற்கு மட்டும் எறிகணைத் தாக்குதலினால் 20 கற்பவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் 08 கற்பவதிகள் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துள்ளனர். நான்கு சிசுக்கள் கருப்பைக்குள்ளேயே காயமடைந்து இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டனர். அத்துடன், 05 கற்பவதிகள் ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட இறந்த உடல்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டன.
குழந்தைகள்
தினந்தோறும் 20-50 வரையான குழந்தைகள் காயமடைகின்றனர். 10-15 வரையான குழந்தைகள் ஷெல் தாக்குதல்களினால் இறக்கின்றனர். அத்துடன் தினமும் ஒரு குழந்தையாவது நோய்வாய்ப்பட்டு மருந்து பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இறக்கின்றது. கடந்த 26.03.2009 ஆம் திகதி வைத்தியசாலையில் சிறுவர் விடுதிக்கு அண்மையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் விடுதியினை விட்டு ஓடி வீடு சென்று மறுநாளே திரும்பி வந்தனர். மருந்து சீராகக் கொடுக்கப்படாததன் காரணமாக இரு குழந்தைகள் இறந்து விட்டனர்.
பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு போதிய உணவு இல்லாததன் காரணத்தால் பால் கொடுக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். பதிலாக கொடுப்பதற்கு எஸ்.எம்.ஏ. லக்டோஜன் பால்மா வகைகள் இல்லாதுள்ளமையால் பிள்ளைகள் பெரிதும் நலிவுற்றுக் காணப்படுகின்றார்கள். அத்துடன் ஷெல் தாக்குதலில் தாய்மாரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால்மா இல்லை. இதுதவிர குடும்ப அங்கத்தவர்கள் காயமடைவதையும் இறப்பதையும் பார்த்த சிறுவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாப்பான வேறு இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அநாதைகளாக திரிவதும் அவதானிக்கப்படுகின்றது.
உணவு
இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் கச்சேரியால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே தங்கியுள்ளனர். 3 இலட்சம் மக்களுக்குத் தேவைப்படும் அளவிலும் பார்க்க மிகவும் குறைவான அளவிலேயே உணவு அனுப்பப்படுகின்றது. அதிலும் அரிசி ஒரு தடவை மட்டுமே வந்தது. இங்குள்ள மக்களில் 70% மான மக்கள் மரக்கறி உண்டு இரண்டு மாதங்களாகி விட்டது. மூன்று மாதங்களாக சுகாதாரத் திணைக்களத்தினூடாக வந்து சேர வேண்டிய திரிபோசா, சோளன் சோயா மாவும் வரவில்லை.