எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சீனி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலை – அமைச்சர் பந்துல குணவர்தன

bandula_gunawardena.jpgசீனி மற்றும் பருப்பு உட்பட முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படவுள்ளதாக வர்த்தக, சந்தை  அபிவிருத்தி, கூட்டுறவு, மற்றும் பாவனையாளர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

புது வருட உற்சவ காலத்தில் மோசடி வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்படுகின்றன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 2003 இலக்கம் 9-20/5 ஷரத்துக்கு அமைய கட்டுப்பாட்டு விலைகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன்படி வெள்ளைச் சீனி ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 73 ரூபா, சகல விதமான பருப்பு வகைகளுக்கும் ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை 175 ரூபா, பட்டானா பருப்பு ஒரு கிலோவுக்கான அதிகூடிய விலை ரூபா 98.50, என புதிய வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ 70 ரூபா,  பச்சை மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ 60 ரூபா,  பால்மா ஒரு கிலோ 637 ரூபா,  400 கிறாம் பால்மா 260 ரூபா,  கோழி இறைச்சி ஒரு கிலோ 320 ரூபா,  50 கிலோ சிமெந்தி பேக் ஒன்று 785 ரூபா, எனவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் பற்றி 0112399146 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கோ பொது மக்கள் அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் நிவாரண கிராமத்துக்கு அனுப்பி வைப்பு

srilanka_idp.jpgபுதுமாத்தளன் பாதுகாப்பு வலையத்திலிருந்து அரசாங் கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ஸ் தெரிவித்தார். இதற்காக, பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களை ஏற்படுத்துவதில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளையும் மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அரசாங்க அதிபர், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் கூறினார். சுமார் 5000 பேர் தங்கவைக்கக் கூடிய பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில், தற்போது சுமார் 600-700 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். இங்கு புதிதாக இடம்பெயர்ந்து வருவோரைத் தங்க வைப்பதற்கு ஒத்துழைப்புகளை நல்குவதாக அவர்கள் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரத்தில் உள்ள நலன்புரி நிலையங்களிலிருந்து 1500 பேர் எதிர்வரும் சனிக்கிழமை 11ம் திகதி செட்டிக்குளம்- கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசாங்க அதிபர் திருமதி. சாள்ர்ஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் வவுனியாவில் வெற்றிடம் ஏற்படும் நலன்புரி நிலையங்களில், புதிதாக இடம்பெயர்ந்து வருவோர் தங்க வைக்கப்படுவர். தவிரவும், புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொதுமக்கள் வெளியேறி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், புதிதாக நலன்புரி நிலையங்களை ஏற்படுத்தவும் வீடுகளை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த இடங்களுக்கு அவர் நேரடியாக விஜயம் செய்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களை உள்வாங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்துவரும் சில தினங்களில் கடும் இடி, மின்னல் தாக்கம்

lighting.jpgநாட்டில் சமீப தினங்களாக ஏற்பட்டுள்ள இடி, மின்னல் அபாயம் அடுத்து வரும் சில தினங்களில் மிக மோசமாகத் தீவிரமடையும் என்றும், பொதுமக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிச் சுழற்சியின் படி சூரியன் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிப்பதன் காரணமாகவே இடி, மின்னலுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்திருப்பதாக வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

சூரியன் கடந்த 6ம் திகதி முதல் இலங்கைக்கு நேர் உச்சத்தில் இருக்கிறது. எதிர்வரும் 16ம் திகதி வரை சூரியன் இவ்வாறு உச்சம் கொடுக்கும். இதனடிப்படையில், சூரியன் இன்று நண்பகல் 12.12 மணிக்கு அட்டாளைச்சேனை, கட்டான, கண்டி, கேகாலை ஆகிய நகர்களுக்கு நேர் உச்சத்தில் சஞ்சரிக்கும் எனவும் அவர் கூறினார்.

வருடா வருடம் ஏப்ரல் மாதம் சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுப்பது தெரிந்ததே. ஆகவே, இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் விசேட கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

வவுனியா முகாம்களில் உள்ளவர்கள் குறித்து ஐ நா கவலை

neel.jpgஇலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறி தற்போது வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் நிலை குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கானா ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள முகாம்களுக்கு விஜயம் செய்துவிட்டு வந்த பிறகே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அங்கு குறைந்த நிலப்பரப்பில் பலர் தங்க வைக்கப்பட்டிருப்பது அங்குள்ள மக்களிடையே ஒரு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும் அரசு அங்குள்ள மக்களுக்கு உணவு வசதிகளையும், மாணவர்களுக்கு பாடசாலை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் எனினும் மேலும் வசதிகள் அங்கு தேவைப்படுகின்றன என்றும் நீல் பூன் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போவதாக ரணில் தெரிவிப்பு

ranil-wickramasinghe.jpgதவறானவர்களின் கைகளுக்கு நிறைவேற்று அதிகாரம் போனதால் நாடு சர்வாதிகாரத்தின் பக்கம் சென்றுகொண்டிருப்பதாக விசனம் தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்ததும் முதற்பணியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கக்கூடிய அதிகாரமுறை கொண்டுவரப்படுமெனத் தெரிவித்தார். நல்ல நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுறை இன்று தவறானவர்களின் கைகளுக்குள் சிக்கி ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

கிருலப்பனையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மேல்மாகாணசபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; நாட்டு மக்களின் இறைமையை வாக்குரிமையின் மூலமே பாதுகாக்க முடியும். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் இல்லாதொழிக்கும் பயங்கரமான திசையில் சென்று கொண்டிருக்கின்றார், ஜனநாயகத்தை ஒழிப்பதற்கான ஆயுதமாக அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை பயன்படுத்துவதில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நிறைவேற்றதிகாரத்தை உருவாக்கியதற்கான பிரதான காரணம் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கேயாகும். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்குப்பின்னர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவுசெய்யப்பட்டார். நீண்டகால யுத்தத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பதில் அவர் கூடுதல் ஆர்வம் காட்டிவந்தார். அதேசமயம் நிறைவேற்றதிகாரத்தின் மற்றொரு முகத்தை அவர் வடமேல் மாகாணசபைத் தேர்தலின்போது காண்பித்தார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை எம்மால் அன்று பாதுகாக்க முடிந்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மூலமாக 17 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்துக்கு உடன்பட வைத்து அரசியமைப்புப் பேரவையை உருவாக்க முடிந்தது.  அரசியலமைப்பு பேரவைக்கு நியமனங்களைச் செய்வதற்கான பெருமுயற்சிகளை நான் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றதிகாரத்தின் பிடிக்குள் சிக்கி எனது ஆட்சிபறிபோகும் நிலை ஏற்பட்டது.

திருமதி குமாரதுங்கவுக்கு பின்னர் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானார்.அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையிலுள்ள சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதில் மும்முரமாக செயற்பட்டுவருகின்றார். எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ஏப்ரல் 25 இல் ஐக்கியதேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மேல்மாகாண மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ரணில் விக்கிரமிங்க தெரிவித்தார்.

விமானப்படை விமானத்தில் யாழ். பயணிகள் விமான சேவை- அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு

யாழ். குடாவிற்கான பயணிகள் போக்குவரத்தில் தற் போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவ டிக்கை காரணமாக இலங்கை விமானப் படையினரின் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட் டுள்ளது.

தற்போது யாழ். பயணிகள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப் படை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி மேற்கொண்ட நடவடிக்கையினை அடு த்து இலங்கை விமானப் படை போக்குவரத்து விமா னத்தினூடாகப் பயணிகள் விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் – கொழும்பு பயணிகள் விமான சேவைக்கு ஒரு வழிக் கட்டணமாக நாலாயிரத்து நானூறு ரூபா (4400/-) அறவிடப்படும் என்பதுடன், ஏனைய செலவுகளைக் கருத்திக்கொண்டு ஐநூறு ரூபா (500/-) கட்டணமுமாக மொத்தம் நாலாயிரத்து தொளாயிரம் ரூபா (4900/-) அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விமானப் படை விமானங்கள் ஊடாக யாழ். – கொழும்பு விமான சேவைப் பதிவுகளை இல. 61 இசிப்பத்தான மாவத்தை, கொழும்பு – 5 இல் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சு பணிமனையில் மேற்கொள்ள முடியும். மேலும் 0112-584322 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி கண்காணிப்பில் பொதுமக்களின் போக்குவரத்து நன்மை கருதி மட்டுமே இவ் விமான சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதால் எதுவித மோசடி நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் தமது பிரயாணப் பதிவுகளை எவ்வித மேலதிக செலவுகளுமின்றி பொதுமக்கள் நேரடியாகவே மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை ஊடான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள இதேவேளை, ஏ-9 தரைப்பாதை பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்படும் வரை சீரானதொரு பயணிகள் கப்பல் சேவையினைக் கடற்படையினரின் அனுசரணையு டன் திருமலை – யாழ்ப்பாணத்திற்கிடையில் ஆரம்பித்து நடாத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இ.போ.ச. ஊழியர்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம். கடமைக்கு திரும்பாவிடின் கடும் நடவடிக்கை

dalas_alahapperuma.jpgவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இ.போ. ச. ஊழியர்களுக்கு மீண்டும் கடமைக்குத் திரும்புவதற்கு மூன்றுநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். குறித்த காலக்கெடுவுக்குள் கடமைக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஐந்தாம் திகதி முதல் தென்மாகாணத்தில் உள்ள 7 டிப்போக்களிலும் ஊவா மாகாணத்தில் உள்ள இரு டிப்போக்களிலும் பணிபுரியும் இ.போ.ச. ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வாழ்க்கைச் செலவுக்கொடுப்பனவு 3500 ரூபாவும் பண்டிகை நிலுவைப் பணம் 2 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கோரி சில ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

முன்னறிவித்தல் எதுவுமின்றியே இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமான தொழிற்சங்க நடவடிக்கையாகும். சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் 3500 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் 2 ஆயிரம் ரூபா நிலுவைப் பணமும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (8) சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் மாதாந்தம் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேளை, பகிஷ்கரிப்பின் பின்னணியில் சதிநோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத முதல் இரு வாரங்களிலே இ. போ. சவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதனை தடுக்கவே சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு நாம் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

ஸ்ரீ ஜெயவர்தனபுர மாணவனொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. பல்கலைக்கழக மாணவனொருவரை கத்தியால் குத்திக் கொன்றதுடன், மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனுக்கே இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி ஹங்கொடவிலவில் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் மாணவனொருவர் கொல்லப்பட்டார். இந்த மாணவன் கொல்லப்பட்டது தொடர்பான குற்றத்தை பிரதிவாதி நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதுடன், இந்தச் சம்பவத்தில் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியது தொடர்பாகவும் அந்த மாணவன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அங்கு இடம்பெற்ற மோதலில் மாணவனொருவனது உயிரை பறித்ததற்காக 5 வருட ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேல் நீதிமன்றம் விதித்தது.

இதைவிட குற்றவாளிக்கு 50,000 ரூபா அபராதம் விதித்த மேல் நீதிமன்றம், கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக நாலரை இலட்சம் ரூபா வழங்க வேண்டுமெனவும் மற்றொரு மாணவனைப் படுகாயப்படுத்தியதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்த மேல் நீதிமன்றம், 5,000 ரூபா அபராதம் விதித்ததுடன், படுகாயமடைந்த மாணவனுக்கு 50,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.

படையினர் இழப்பு குறித்து தகவல்களை வெளியிடுமாறு திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை

parliament.jpgயுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் வெளிவராதது பாரிய பிரச்சினையாகியிருப்பதாக சுட்டிக் காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி., இது தொடர்பான தகவல்களை வெளியிடுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; யுத்தத்தின் போது உயிரிழக்கும், காணாமல் போகும் படையினர் பற்றிய தகவல்கள் அவர்களது பெற்றோருக்கு கிடைப்பது குறைவடைந்துள்ளது. இது பாரிய பிரச்சினையாகும். எனவே, இதுபற்றி கவனம் செலுத்தி தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறோம்.

பயங்கரவாதம் என்பது ஒரு இடத்தில் இருப்பதில்லை. அடிக்கடி பயங்கரவாதம் தலைதூக்கும். இதை நாம் வரலாற்றிலும் கண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையின் பிரகாரம் முப்படையினரும் தமது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், அதை நீண்ட காலம் பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ள அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

எனவே, அதற்கானதொரு நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினர் பெற்ற வெற்றிகளை தக்க வைக்க முடியாமல் போய்விடும். அது படையினர் உயிர்த் தியாகம் செய்து அவயவங்களை இழந்து பெற்ற வெற்றிகளை குறைத்து மதிப்பிடுவதாக போய் விடும். பயங்கரவாதத்தை அழிப்பதுடன் நின்று விடாது, மக்களின், வாழ்க்கை பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் மீண்டும் பயங்கரவாதம் வளர்ந்து விடும்.

இதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கை ரத்தாகி ஒரு வருடமாகி விட்ட போதிலும் அதைப் பற்றியே பேசப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் நோர்வே தரப்பையும் முதலில் பொதுஜன ஐக்கிய முன்னணியே கொண்டு வந்தது. எவ்வாறிருப்பினும் போர் நிறுத்த உடன்படிக்கையின் வெற்றி என்னவென்பதை கருணாவையும் பிள்ளையானையும் கேட்டால் தெரியும். இந்த உடன்படிக்கை காலத்தில் தான் புலிகள் 2, 3 ஆக பிரிவுகளாக பிளவுபட்டனர். மக்களைக் கேட்டால் இதைச் சொல்வார்கள். அது மட்டுமல்லாது, இந்த உடன்படிக்கையினால் தான் சர்வதேச ரீதியில் இலங்கை மீதிருந்த அபகீர்த்தியையும் குறைக்க முடிந்தது’ என்றார்.

இலங்கை நிலைவரம்; நோர்வே அமைச்சருடன் ஹிலாரி ஆராய்வு

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனால் கார் ஸ்ரோரேயுடன் கலந்துரையாடியுள்ளார்.  அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நெருக்கடி, மனிதாபிமான நிலைவரம், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை  செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நோர்வே அமைச்சருடனான சந்திப்பில் ஏனைய விவகாரங்களுடன் இலங்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக ஹிலாரி கூறியுள்ளார்.

“இலங்கையில் மோலை முடிவுக்கு கொண்டுவர நோர்வே மேற்கொண்டுள்ள அயராத முயற்சிகள் தொடர்பாக நாம் ஆராய்ந்தோம். காலநிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, இலங்கை உட்பட கணிசமான பிராந்திய விவகாரங்கள் தொடர்பான தாக்கங்கள் மற்றும் சவால்கள் குறித்து நாம் ஆராய்ந்தோம்’ என்றும் ஹிலாரி கூறியுள்ளார்.