வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இ.போ. ச. ஊழியர்களுக்கு மீண்டும் கடமைக்குத் திரும்புவதற்கு மூன்றுநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். குறித்த காலக்கெடுவுக்குள் கடமைக்குத் திரும்பாத ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஐந்தாம் திகதி முதல் தென்மாகாணத்தில் உள்ள 7 டிப்போக்களிலும் ஊவா மாகாணத்தில் உள்ள இரு டிப்போக்களிலும் பணிபுரியும் இ.போ.ச. ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வாழ்க்கைச் செலவுக்கொடுப்பனவு 3500 ரூபாவும் பண்டிகை நிலுவைப் பணம் 2 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு கோரி சில ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
முன்னறிவித்தல் எதுவுமின்றியே இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமான தொழிற்சங்க நடவடிக்கையாகும். சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் 3500 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் 2 ஆயிரம் ரூபா நிலுவைப் பணமும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (8) சகல இ. போ. ச. ஊழியர்களுக்கும் மாதாந்தம் சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேளை, பகிஷ்கரிப்பின் பின்னணியில் சதிநோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத முதல் இரு வாரங்களிலே இ. போ. சவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதனை தடுக்கவே சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு நாம் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.