எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

முன்னாள் விடுதலைப்புலிகளை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய நால்வர் கைது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையிலீடுபட்டதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைக் கோரி கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு பிரதம நீதிமன்றுக்கு அறிக்கையொன்றை பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

கடவுச்சீட்டுக்களில் போலியான விசாவை ஒட்டியே புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய நீதவான் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றிற்கு அறியத் தரவேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னர் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தற்போது, அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேறுகின்றனர். தண்ணீரூற்று, நீராவியடி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் தங்களது சொந்தக் காணிகளில் குடிமனைகளை அமைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தங்கள் காணிகளில் குடியேறுவதற்காக வருகை தந்த வண்ணமுள்ளனர்.

போர் சூழ்நிலைகளின் போது அக்கிராமங்களிலிருந்து வெளியேறிய மக்களும், விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, வெளியேறிய மக்களுமே இவ்வாறு மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ நூல் வெளியீடும் ஆவணப்பட திரையிடலும்

Yamuna Rajendiranஒக்ரோபர் 24 இல் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்’ என்ற நூலும் ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற ஆவணப்படத் திரையிடலும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள உயிர்மை பதிப்பகத்தின் இந்நூலை ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது இந்நிகழ்வு ரொல்வேர்த் கேர்ள்ஸ் ஸ்கூலில் நடைபெற உள்ளது.

( நிகழ்வு விபரம்: 24 ஒக்ரோபர் 2010 மதியம் 13:00 முதல் 17:00 வரை. Tolworth Girls School Hall, Fullersway North, Tolworth, KT6 7LQ )

‘முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்தடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கின்றது. வரலாற்று நூல்களின் வழி எவரும் வந்தடையும் புரிதலை விடவும் ஈழப்போராட்டம் குறித்துப் பேசும் இந்த நூலில் விவரிக்கப்படும் திரைப்படங்கள் அளிக்கும் என்பதனை நாம் நிச்சயமாகவே சொல்ல வேண்டும்.’ என ஈழ திரைக்கலை ஒன்றியம் இந்நூல் வெளியீடு தொடர்பான தமது பிரசுரத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண குறிஞ்சி தலைமை தாங்குகின்றார். ஆர் புதியவன் யமுனா ராஜேந்திரனின் ‘புத்தனின் பெயரால்: திரைப்பட சாட்சியம்’ நூல் அறிமுகத்தை மேற்கொள்ள மு புஸ்பராஜன் எஸ் வேலு ஆகியோர் நூலை வமர்சனம் செய்கின்றனர்.

ஆர் ஆர் சீனிவாசனின் ‘அண்ணா நூறு: ஒரு வரலாற்றுப் பார்வை’ பற்றி ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியம், ‘இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் காலம் காலமாக எப்போதுமே மக்களாட்சிக்கான போராட்டம் இருந்து வருகிறது. அதில் தமிழகத்தின் திராவிட இயக்கம் உலக சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், மற்றும் திராவிட இயக்கம் வழியாக அறிஞர் அண்ணாவின் அரசியல், மனிதாபிமான சிந்தனைகளை அறிய முற்படுகிறது இந்த 133 நிமிட ஆவணப்படம்” என்று குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்வின் இறுதியில் யமுனா ராஜேந்திரன் தொகுப்புரை வழங்க எஸ் சிறிதரன்நன்றியுரை வழங்குவார்.

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

parliament.jpgஉள்ளூராட்சி மன்றங்கள் விஷேட ஏற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட மூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவுற்றதும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இச்சட்ட மூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் படி மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம், 1987ம் ஆண்டில் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் என்பன திருத்தப்படவிருக்கின்றன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் தேர்தல்கள் கட்டளைச் சட்டமும் திருத்தப்படவிருக்கின்றன.

இச் சட்டத் திருத்தத்தின் கீழ் தேசிய எல்லை நிர்ணயக் குழுவொன்று அமைச் சரால் தாபிக்கப்படும். இக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அத்தோடு தேசிய குழுவுக்கு துணை புரியும் வகையில் அமைச்சர் மாவட்ட மட்ட எல்லை நிர்ணய குழுக்களை நியமிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்திருத்தத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார்.

புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும்.

இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும்.

இத்திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்திலும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் நிலையத்திலேயே எண்ணப்படும்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

den.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் சார்பில் ஆளும்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இக்கேள்விக்கு பதிலளித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தின் 58வது படைப் பிரிவும் இராணுவ பொலிஸ் பிரிவும் இணைந்து மீட்டெடுத்தன. அத்தங்கத்தின் பெறுமதி 490 மில்லியன் ரூபாய் ஆகும். இத்தங்கம் தொடர்பாக நியமிக்கப் பட்டுள்ள சபையினர் சட்டப்படி அவற்றை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றார்.

முகாம்களிலும் சிறுவர் இல்லங்களிலும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.. மதபோதகர் தலைமறைவு!

மன்னார் சிறுவர் இல்லமொன்றில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சிறுவர் இல்லம் நேற்று புதன் கிழமை மூடப்பட்டது.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள ‘என் இரட்சகர்’ என்ற சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் பராமரிக்கப்பட்டு வந்தனர். மதபோதகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது 45) என்பவர் இதனை நடத்தி வந்தார்.  பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக மதபோதகர் அழைத்துச் செல்வதுண்டாம்.  இந்நிலையிலேயே சிறுமிகள் மீதான துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரு சிறுமிகளையும் வைத்தியப் பரிசோதனைகளுக்குட்படுத்துமாறும், குறித்த சிறுவர் இல்லத்தை முடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை நீதவான் இவ்வாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. மதபோதகர் தலைமறைவாகியுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Constantine_Tஇலங்கையில் இருந்து தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன்:

இச்சம்பவம் தொடர்பாக தற்போது இலங்கையில் உள்ள தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன் தகவல் அளிக்கையில் வடமாகாணத்தில் கிறிஸ்தவச் செல்வாக்குள்ள மன்னார் மாவட்டத்தில் எழுந்தமானமாக சில கிறிஸ்தவ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு புகலிடம் வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை துஸ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வறுமையும் சமூகக்கட்டுமானமும் சீரழிந்துள்ள சூழலில் இவ்வாறான தவறான சக்திகள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். வறுமை காரணமாக பல பெற்றோர் இவ்வாறான இல்லங்கள் பற்றிய எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை போலியான இல்லங்களில் ஒப்படைக்கின்றனர் எனத் தெரிவித்தார் ரி கொன்ஸ்ரன்ரைன். தாய் தலைமறைவான நிலையில் இரட்டைகளாகப் பிறந்த குழந்தைகளை வைத்தியசாலையில் இருந்து கிறிஸ்தவ சகோதரிகளால் முறையாகப் பராமரிக்கப்படும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்த காட்சியைத் தான் நேரில் பார்த்ததாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

இடப்பெயர்வுகள் முகாம் வாழ்வுகள் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ரி கொன்ஸ்ரன்ரைன் தற்போதுள்ள வவுனியா முகாமில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் அதகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வயது குறைந்த பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் முகாம்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும்பாலும் முகாம்களில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் சுட்டிக்காட்டினார். மேலும் பல பெண்களுடனான பாலியல் உறவுகளும் முகாம்களில் அதிகரித்துள்ளதாகவும் இவை மிகுந்த சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கட்டுப்படுத்த முகாம்களில் சைவ குருக்களை அழைத்து வந்து மத போதணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை இந்தச் சைவக் குருக்கள் மூலம் உபதேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான முகாம்கள் மூடப்பட்டுள்ள போதும் இறுதி யுத்தம் நடந்த பகுதிகளில் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களைச் சேர்ந்த மக்களும் எப்போதுமே தமக்கு நிரந்தர வாழ்விடத்தையும் நிரந்தர தொழில்வாய்ப்பையும் கொண்டிராத மக்களும் இன்னமும் முகாம்களில் தங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முகாம் வாழ்வுமுறை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ருஹுணு உபவேந்தர் மீது மாணவர் குழு தாக்குதல் – மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை

pro.jpgருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித் மெண்டிஸ் நேற்றுக்காலை பல் கலைக்கழக மாணவர் குழுவொன்றி னால் தாக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பியல் பீடத்தைச் சேர்ந்த இரு மாணவ குழுக்களிடையே நேற்று இடம்பெற்ற மோதலை சீர்செய்வதற்காக உபவேந்தர் அவ்விடத்துக்கு சென்றிருந்த போதே குறித்த மாணவக் குழு உபவேந்தரை தாக்கியுள்ளது.

காயமடைந்த உபவேந்தர் மாத்தறை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் சிரேஷ்ட மாணவ ஆலோசகரான சமன் சந்தன என்பவரும் சில மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக உபவேந்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்குமிடையிலான மாணவ ஒன்றியமும் விஞ்ஞான பீட மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மோதிக் கொண்டதில் ஏழு பட்டதாரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எம். என். ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு

விடு தலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ள அரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள், வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசேகர எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த பதில்களிலேயே இது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. கே.பி. கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் சம்பந்தப்பட்ட அடிப்படை விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை விசாரணைகள் முடிவடையும் வரை கே.பி. பாதுகாப்புத் தரப்பின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கே.பி. அண்மைய தினமொன்றில் வன்னி பிரதேசத்துக்கான விஜயமொன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, அடிப்படை விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை உறுதி செய்து கொள்வதற்கென அவர் வன்னிப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகக் கூறினார்.

”போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை” யாழ். வந்த ஐரோப்பிய பிரதிநிதிகள்

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவுற்றாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என நேற்று புதன் கிழமை  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்தள்ளனர். இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ். அரசாங்க அதிபர் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை யாழ். அரச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் நேரடியாக அவதானித்த வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் குறித்து தமக்கு திருப்தி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான் ஆனால், போர் முடிவுற்ற போதும் மக்களால் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியாத நிலை உள்ளது எனவும், பயங்கவரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் எனபன தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையே இத்றகுக் காரணம் எனவும்,  இந்நிலை நீடிக்குமானால் திட்டமிட்ட- கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் தோன்றா விட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பிரதிநிகளிடம் கலந்துரையாடலின் போது  சுட்டிக்காட்டினர்.