ஒரே மேடையில் ஐந்து நூல்கள் அறிமுகம் – புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது! : வி. ரி. இளங்கோவன் & கலையரசன்

Book_Launchடென்மார்க் நாட்டில் ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.

டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வெஜன் நகரில் கடந்த ஞாயிறு (10 – 10 – 2010) சிறப்புற நடைபெற்றது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.

Ilankovan_V_Tபுத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.

நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.

குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை – இணையத்தள ஆசிரியர் சத்தியதாஸ் (கரவைதாசன்) அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்.

 BookReviewPanel

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் – சில குறிப்புகள் : கலையரசன்

அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.

கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

Dark_Europeஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *