உள்ளூராட்சி மன்றங்கள் விஷேட ஏற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட மூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் ஆரம்ப நிகழ்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவுற்றதும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி. சில்வா சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இச்சட்ட மூலங்களை சபையில் சமர்ப்பித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் படி மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம், 1987ம் ஆண்டில் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் என்பன திருத்தப்படவிருக்கின்றன. இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் தேர்தல்கள் கட்டளைச் சட்டமும் திருத்தப்படவிருக்கின்றன.
இச் சட்டத் திருத்தத்தின் கீழ் தேசிய எல்லை நிர்ணயக் குழுவொன்று அமைச் சரால் தாபிக்கப்படும். இக்குழு ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அத்தோடு தேசிய குழுவுக்கு துணை புரியும் வகையில் அமைச்சர் மாவட்ட மட்ட எல்லை நிர்ணய குழுக்களை நியமிக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார்.
புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும்.
இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும்.
இத்திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகள் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றப் பிரதேசத்திலும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் நிலையத்திலேயே எண்ணப்படும்.