எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ். மேயர் வேட்பாளராக ஆனந்த சங்கரி போட்டி

TULF Leader Anandasangaree Vஜனநாயக தமிழர் தேசிய கூட்டணி யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உதய சூரியன் சின்னத்திலும் வவுனியாவில் நங்கூரம் சின்னத்திலும் தேர்தலில் குதிக்கும் இந்தக் கூட்டணி, இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக தமிழர் தேசிய கூட்டணியின் யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளராக வீ. ஆனந்த சங்கரி நிறுத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

த.வி. கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபாஅணி) ஆகிய மூன்று கட்சிகளும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

ஊ.ந.நி.சபை: ஜனாதிபதியிடம் ஒரு கோடி ரூபா கையளிப்பு

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களினதும் நலன்புரி நிலையங்களிலுள்ளோரினதும் நலன்களை கவனிக்கவென ஊழியர் நம்பிக்கை நிதிய சபை 100 இலட்சம் ரூபாவினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கே. எம். ஏ. கொடவத்த இந்நிதியை நேற்று (23) அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மாத்திரம் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 102 கிளைகளில் 2700 பேர் சேவைபுரிந்தனர். தற்போது இடம்பெயர்ந்திருக்கும் இவர்களதும் ஏனைய சிவிலியன் களதும் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கா கவே இந்நிதி நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொதுமுகாமையாளர் மங்கல குணரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் திஸ்ஸ குட்டியாரச்சி உள்ளிட்ட பல அதிகாரிகளும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

சட்ட விரோத மது உற்பத்தியை தடுக்க 100 வீத முற்றுகை

ranjith_siyambalapitiya.jpgநாட்டில் மதுபானத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அரச வருவாய்த் துறை மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறக்குமதிக்கான வரியை அதிகரித்துள்ளதுடன், சட்ட விரோத உற்பத்திகளைத் தடுப்பதற்காக 100 வீதம் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரம், உல்லாச விடுதிகளைத் தவிர, வேறு எவருக்கும் மதுபான விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைக் கூறுகையில், குறுக்குக் கேள்வியொன்றை எழுப்பிய ஜே. வி. பி. உறுப்பினர் விமல் ரத்நாயக்க, ‘அமைச்சர், அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று கூறினாலும், புதிதாக வழங்கப்பட்டுள்ளனவே’ என்றார். இதன் போது அவ்வாறு இருப்பின் விபரங்களைச் சமர்ப்பித்தால், ஒரே நாளில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதற்கமைய நாளைய தினம் தம்மிடம் உள்ள முழு விபரங்களையும் சபையில் சமர்ப்பிப்பதாக விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சண்டே லீடரில் வெளியிடப்பட்டது பொய்யானதென நிரூபிப்போம் – பாதுகாப்பு செயலரின் சட்டத்தரணி தெரிவிப்பு

விமானப் படைக்கென கொள்வனவு செய்யப்பட்ட மிக்ரக விமானத்தில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதென்பதனால் அதனை மக்கள் முன்னிலையில் நிரூபிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தயாராக விருப்பதாக அவர் சார்பில் நேற்று (23) நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யு.எம். அலிசப்றி கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட சேவைகளை பாராட்டும் அதேவேளை, எவ்வாறான முறையில் மன்னிப்புக்கோர வேண்டுமோ அந்த முறையில் மன்னிப்புக்கோர தாம் தயாரெனவும் சண்டேலீடர் பத்திரிகை நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் நேற்றுக் கூறியதை நிராகரித்துக் கூறும் போதே கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக ஆஜரான சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.

சண்டேலீடர் பத்திரிகையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதெனக் கூறி சண்டேலீடர் நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாவை நட்டஈடாகப் பெற்றுத்தருமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவான் மொஹமட் மக்கி நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே சண்டேலீடர் நிறுவனம் மன்னிப்புக்கோர தயாராகவிருப்பதாக கூறிய கருத்தை நிராகரிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சண்டேலீடர் நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சுனில் லங்காதிலக்க, வழக்கின் முதல் முறைப்பாட்டாளர் உயிரிழந்தமையால் இந்த வழக்கை வாபஸ் பெற சண்டேலீடர் நிறுவனம் விரும்புவதாக தெரிவித்தார்.

சண்டேலீடர் நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத்தைச் சார்ந்த லால் விக்கிரமதுங்க மற்றும் ஊடகவியலாளர் ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்கிஸ்சை மேலதிக மாவட்ட நீதவான் மெக்கி மொஹமட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு அவதூறு ஏற்படுத்தாத வகையில் செயற்படுமாறு தெரிவித்தே ஜூலை 09 ஆம் திகதி மேற்படி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக மாவட்ட நீதவான் நேற்று மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்

பாகிஸ்தானில் தாலிபான் தலைவர் கொலை

zainuddin.jpgபாகிஸ் தானிய தாலிபன் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் எதிர்ப்பாளரான குவாரி சைனுதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலரால் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்களை கொல்லும் தற்கொலை குண்டு தாக்கு தல்களை பயன்படுத்தும் பைதுல்லா மெஹ்சூத் இன் தாக்குதல் நடைமுறைகளை இவர் கண்டித்திருந்தார். இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு புறம்பானவை என்று அவர் கூறியிருந்தார்.

தாலிபனுக்கு எதிரான தாக்குதல்களை பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் இந்த கொலை நடந்திருக்கிறது.தாலிபன்கள் வலுவாக இருப்பதாக கருதப்படும் தெற்கு வசிரிஸ்தானில் ராணுவம் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்கிற நிலையில், தீவிரவாதிகள் மத்தியில் நிலவக்கூடிய பிளவுகள் வெளியில் தெரியத்துவங்கியிருப்பதாக, செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்

‘வளவை மரபுரிமை – 2009’ – வர்த்தகக் கண்காட்சி 30முதல் ஜூலை4 வரை

தகவல் ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதி செயலகம் உட்பட பல அமைச்சுக்கள் இணைந்து நடாத்தும் “வலவே உறுமய – (வளவை மரபுரிமை) 2009 வர்த்தகக் கண்காட்சி இம் மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தெற்கின் அங்ருணுகொலபெலஸ்ஸ மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அமரர் டி. ஏ. ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்ட “சந்திரிகாவெவ” திட்டத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வாகவே “வலவே உறுமய” கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம் பெறவுள்ளது.

இக் கண்காட்சி நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்றுத் தகவல் ஊடகத்துறை அமைச்சில் இடம் பெற்றது. ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர், கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க கண்காட்சி தொடர்பாக விளக்கமளித்தார்.

‘தேசத்துக்கு மகுடம்’ கண்காட்சியைப் போன்று பாரிய நிகழ்வாக “வலவே உறுமய” கண்காட்சி இடம் பெறவுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு, நிர்மாணம் மற்றும் பொறியியல்துறை, அமைச்சுக்கள் இணைந்து இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுடன் இது நடைபெறவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ் தேர்தல் குறித்து புத்தளம் மக்களிடையே ஆர்வம் இல்லை?

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்திலிருந்து 19 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடையே ஆர்வம் இல்லை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவுகளை ஆடவர்களே எடுப்பார்கள் என்றும் புத்தளம் பகுதியில் இருக்கும் சில மகளிர் கருத்து வெளியிட்டுள்ளனர். யாழ் பகுதியில் இருக்கும் தமிழ் மக்களிடையே கூட இந்தத் தேர்தல் நடத்தப்படுவதில் விருப்பமில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜஃபருல்லா.

தமது உறவினர்கள் வவுனியா மற்றும் இதரப் பகுதிகளில் இருக்கும் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதே தேர்தலுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாதததுக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். எனினும் தேர்தலுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலை – 7 மாதங்களில் சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் ஏழு மாதகாலங்களில் மீள இத்தொழிற்சாலையைக் கட்டியெழுப்புவதுடன், சீமெந்து உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் செல்வநாயகம் தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளது. இவ்விஜயத்தின் போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் நிலைமையை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர்; ஏற்கனவே அங்கிருந்த இயந்திராதிகளை மீள உபயோகிக்க முடியுமாஎன்பதையும் ஆராய்ந்துள்ளார். பயங்கரவாத சூழல் காரணமாகக் கடந்த மூன்று தசாப்த காலங்களாக மேற்படி தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததுடன் அங்குள்ள இயந்திராதிகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு முன்னர் இத்தொழிற்சாலை இயங்கியபோது வருடாந்தம் இங்கு பத்து இலட்சம் மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதுடன் அது நாட்டின் சீமெந்து தேவையில் பெருமளவை ஈடுசெய்துள்ளது.

இத்தொழிற்சாலையை மீள ஆரம்பித்து சீமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிமாவட்டங்களிலிருந்தாயினும் பெற்று தேசிய சீமெந்து உற்பத்தித்துறைக்குப் பங்களிப்புச் செய்வதே நமது நோக்கமெனவும் அமைச்சர் வெல்கம தெரிவித்துள்ளார்

“சட்ட மூலங்களுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும்’

joshepmichel.jpgபாராளு மன்றத்தில் இவ்வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள சிலசட்ட மூலங்களுக்கு தாம் எதிர்ப்புக் தெரிவிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்ற கட்சிகளின் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பொது விமான சேவைகள் தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேபோல் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதிக்கு அதிக அதிகாரங்களுடன் ஒருவரை நியமிப்பது தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், வியாழக்கிழமை மாலை நடைபெறும் அமர்வில் டெங்கு தொற்று தொடர்பான சட்ட மூலத்தை பிற்போடுவது தொடர்பான விவாதம் இவ்வார அமர்வில் இடம்பெறவுள்ளது.

பர்தாவை கண்டித்துப் பேசிய சர்கோசி

பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தாவை அணிவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார். நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், தமது கொள்கை தொடர்பாக அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்திருந்தார்.

பெண்களின் தலையிலிருந்து கால் வரை மூடும் இந்த பர்தாவை அணிவது என்பது பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும், அதனால் பர்தா உடை பிரான்சில் வரவேற்கப்படாது என்றும் அவர் கூறினார். இத்தகைய பர்தாவை பொது இடங்களில் அணிவதற்கு தடை விதிக்கலாமா என்பதை ஆராய்வதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவை அமைப்பதற்கு சர்கோசி தமது ஆதரவை அளித்தார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நாட்டின் அதிபர் ஒருவர் உரை நிகழ்த்தியிருப்பது நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை. இதற்கு எதிரான சட்ட ரீதியிலான தடையானது குறுகிய பெரும்பான்மையுடன் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.