விமானப் படைக்கென கொள்வனவு செய்யப்பட்ட மிக்ரக விமானத்தில் நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதென்பதனால் அதனை மக்கள் முன்னிலையில் நிரூபிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தயாராக விருப்பதாக அவர் சார்பில் நேற்று (23) நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யு.எம். அலிசப்றி கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட சேவைகளை பாராட்டும் அதேவேளை, எவ்வாறான முறையில் மன்னிப்புக்கோர வேண்டுமோ அந்த முறையில் மன்னிப்புக்கோர தாம் தயாரெனவும் சண்டேலீடர் பத்திரிகை நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் நேற்றுக் கூறியதை நிராகரித்துக் கூறும் போதே கோத்தாபய ராஜபக்ஷ சார்பாக ஆஜரான சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.
சண்டேலீடர் பத்திரிகையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானதெனக் கூறி சண்டேலீடர் நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாவை நட்டஈடாகப் பெற்றுத்தருமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கல்கிஸ்சை மாவட்ட மேலதிக நீதவான் மொஹமட் மக்கி நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே சண்டேலீடர் நிறுவனம் மன்னிப்புக்கோர தயாராகவிருப்பதாக கூறிய கருத்தை நிராகரிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
சண்டேலீடர் நிறுவனம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சுனில் லங்காதிலக்க, வழக்கின் முதல் முறைப்பாட்டாளர் உயிரிழந்தமையால் இந்த வழக்கை வாபஸ் பெற சண்டேலீடர் நிறுவனம் விரும்புவதாக தெரிவித்தார்.
சண்டேலீடர் நிறுவனத்துக்கும் அந்த நிறுவனத்தைச் சார்ந்த லால் விக்கிரமதுங்க மற்றும் ஊடகவியலாளர் ப்ரெட்ரிக்கா ஜேன்ஸ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்கிஸ்சை மேலதிக மாவட்ட நீதவான் மெக்கி மொஹமட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு அவதூறு ஏற்படுத்தாத வகையில் செயற்படுமாறு தெரிவித்தே ஜூலை 09 ஆம் திகதி மேற்படி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக மாவட்ட நீதவான் நேற்று மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்