நாட்டில் மதுபானத்தை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அரச வருவாய்த் துறை மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறக்குமதிக்கான வரியை அதிகரித்துள்ளதுடன், சட்ட விரோத உற்பத்திகளைத் தடுப்பதற்காக 100 வீதம் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரம், உல்லாச விடுதிகளைத் தவிர, வேறு எவருக்கும் மதுபான விற்பனைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் சியம்பலாபிட்டிய இதனைக் கூறுகையில், குறுக்குக் கேள்வியொன்றை எழுப்பிய ஜே. வி. பி. உறுப்பினர் விமல் ரத்நாயக்க, ‘அமைச்சர், அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று கூறினாலும், புதிதாக வழங்கப்பட்டுள்ளனவே’ என்றார். இதன் போது அவ்வாறு இருப்பின் விபரங்களைச் சமர்ப்பித்தால், ஒரே நாளில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதற்கமைய நாளைய தினம் தம்மிடம் உள்ள முழு விபரங்களையும் சபையில் சமர்ப்பிப்பதாக விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.