எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

லங்காபுத்ர அபி. வங்கியின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ இவ்வங்கியினை திறந்து வைத்தார்.

இவ்வங்கியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழாவில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வங்கியின் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கை யினை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு உதயத்தின் மூலம் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் திறக்கப்பட்ட முதலாவது லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் கிளை இதுவென்பது குறிப்பிட த்தக்கது

மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் புதிய தகவல் – அவரின் டாக்டர் மீதான சந்தேகம் அதிகரிப்பு

maical-jak.jpgமைக்கல் ஜாக்சனின் திடீர் மரணத்திற்கு அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முரே கொடுத்த மயக்க மருந்தே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்சின் ஹோல்ம்பி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவருடன் இருந்தவர் அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்.

ஜாக்சன் மரணம் அடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், “புரபோபல்’ அல்லது “டிப்ரீவன்’ என அழைக்கப்படும் மயக்கம் தரும் மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதுவே ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது.  ஜாக்சனின் உயிரை பறிக்கக் கூடிய மருந்துகள் எதையும் என் கட்சிக்காரர் பரிந்துரை செய்யவில்லை என இதற்கு பதிலளிக்கும் டாக்டர் முரேயின் வக்கீல் எட் செர்னோப் கூறியிருக்கின்றார்.

ஜாக்சன் மரணமடைந்த போது,  டாக்டர் முரேதான் அங்கு இருந்துள்ளார். அதனால், அவரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளால் டாக்டர் முரே வேதனை அடைந்துள்ளார். 24 மணி நேரமும் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரால் தன் டாக்டர் பணியை தொடர முடியவில்லை. எங்கு சென்றாலும்,  அவருக்கு பல வகையிலும் தொந்தரவுகள் உருவாவதால்,  அவரால் நிம்மதியாக டாக்டர் பணியாற்ற முடியவில்லை என்று எட் செர்னோப் மேலும் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மரணம் தொடர்பாக டாக்டர் முரேயிடம்,  போலீசார் இதுவரை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். மூன்றாவது விசாரணை கடந்த 24ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால்,  திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஹஸ்டனில் உள்ள அவரின் மருத்துவமனை அலுவலகம் மற்றும் மருந்துகளை தேக்கி வைக்கும் பிரிவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

காலி, வெலிவத்தயில் இளைஞன் சுட்டுக்கொலை

காலி, வெலிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளை ஞரொருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று (29) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் அதிகாலை புகுந்த ஆயுதக் குழுவொன்று குறித்த நபரை சுட்டும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இறந்தவரின் சடலம் காலி கராபிட்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடி க்கப்படவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும் -செல்வராஜா பத்மநாதன்

selvarasa_pathmanathan.jpgஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். “தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.

“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை பஹ்ரைன் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து!

agreement.pngஇலங் கைக்கும் பஹ்ரைனுக்குமிடையே வெளியுறவுகள், பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பக் கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு இருதரப்பு உடன்படிக்கைகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையே வெளியுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சுக்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.

 இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதாரம் வர்த்தகம் தொழிநுட்பக் கூட்டுறவு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் பஹ்ரைன் பிரதிப் பிரதமர் செய்க் முஹம்மத் பின் முபாரக் அல் கலீபா அவர்களுக்குமிடையே மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ‘ரயில்பஸ்’ சேவை இன்று ஆரம்பம்.

rail_bus000.jpgஇந்திய உதவியுடன் கிழக்கு மாகாண சபைக்கு நேரடியாக கிடைத்த பஸ் வண்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது “ரயில்பஸ் “வண்டி இன்று மாலை உத்தியோக பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிகள் மூலம் 5 ரயில்பஸ் வண்டிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ் வண்டிகளைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட முதலாவது ரயில்பஸ் இன்று மாலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ,மத்திய போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ,தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ,மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள் ,மத பிரமுகர்கள் உட்பட சகலரும் தீவிர சோதனையின் பின்னரே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயில்பஸ் வண்டி இன்று மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வாழைச்சேனை வரை வெள்ளோட்டம் விடப்பட்ட போது இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அதில் பயணம் செய்தனர்.

நாளை முதல் பயணிகள் சேவையில் ஈடுபடவிருக்கும் இவ் ரயில்பஸ் வண்டி தற்போதைக்கு மட்டக்களப்பிற்கும் – வெலிக்கநதைக்குமிடையிலேயே தினமும் ஒரு சேவையில் ஈடுபடும் என நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தரகர்களை நாட வேண்டாம் : வவுனியா பிரதேச செயலாளர்

இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியில் எடுப்பது, அவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவது, கிராம சேவகர்களிடம் அவர்களைப் பதிவு செய்வது, அவர்களுக்கான கடவுச் சீட்டைப் பெறுவது போன்ற செயற்பாடுகளில் இடம்பெயர்ந்தவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என வவுனியா பிரசே செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் தரகர்களின் உதவியை நாடியுள்ளமை தொடர்பாக பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளுக்காகத் தரகர்கள் கிராம சேவை அதிகாரிகளின் இலச்சினை, கையெழுத்து என்பவற்றைப் போலியாகப் பயன்படுத்தியுள்ளதுடன், பிரதேச செயலாளரின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக இலச்சினையையும் தரகர்கள் போலியாகப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது சம்பந்தப்பட்ட கடிதங்களும் பிரதேச செயலகத்திற்குக் கிடைத்திருப்பதாக வவுனியா பிரதேச செலயாளர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறைகளில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிக்கின்ற பொதுமக்களே, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே தரகர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வவுனியா பிரதேச செயலாளர், பொதுமக்கள் தமது தேவைகளுக்காக தத்தமது பிரிவு கிராம சேவகர்களுடன் தொடர்பு கொள்வதுடன், அவசியமானால் கிழமை நாட்களில் கடமை நேரத்தில் பிரதேச செயலாளர் அல்லது உதவி பிரதேச செயலாளரை நாடி தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் அடங்கிய பொதுமக்களுக்கான அறிவித்தல் கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் உட்பட பொதுமக்கள் தொடர்பு கொள்கின்ற அரச பொது அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் ஹம்ஸாவின் வாகனம் மீது தாக்குதல்

india-hamza.jpgசென்னை யிலுள்ள இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதுவர் ஹம்ஸாவின் வாகனம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத இளைஞர் கோஷ்டியொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது

லண்டனிலுள்ள இலங்கை தூதராலயத்திற்கு துணைத் தூதுவராக மாற்றலாகிச் செல்வதையொட்டி தூதுவர் ஹம்ஸா ஆந்திர தொழில் கூட்டமைப்பைச் சார்ந்த ஆந்திர முதலாளிமாருக்கு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இவ்விருந்து சென்னையில், உள்ள ஜிம்கான கிளப்பில் நடைபெற்றது. இதனைக் கேள்வியுற்ற இளைஞர்கள் சிலர் அங்கு சென்று தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்கள்.

அவர்களுக்கு அனுமதி மறுக்கவே, வெளியே வந்த இளைஞர்கள் சத்தமில்லாமல் கலைந்து சென்றனர். பின்னர் விருந்து முடிந்து வெளியே வந்த ஹம்ஸாவின் காரை சூழ்ந்து சுமார் 20 நிமிடங்கள் முற்றுகையிட்டதுடன், அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனை அறிந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஹம்ஸாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதையடுத்து அங்கு சிக்கிக் கொண்ட அவரது காரை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு சிறு பதற்றம் நிலவியது. உடனே,காவல் துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களையும் தேடி வருவதாக தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சு.கவின் 19வது தேசிய மாநாட்டில் தீர்வு யோசனையை வெளியிட திட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு யோசனை அடங்கலாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இந்த மாநாட்டில் நாடுபூராவும் இருந்து சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர். நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும். இந்த திட்டங்கள் இந்த வருட இறுதியிலும் அடுத்த வருட முதற்பகுதியிலும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு முடிவு கண்டுள்ள நிலையில் அடுத்ததாக நாட்டை துரித அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினூடாக நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் அபிவிருத்திக்கென பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2010 வரவு செலவுத் திட்டத்தினூடாக மேலும் பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கவும் அபிவிருத்தி இலக்குகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பலம்வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்படும்.

புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் கொழும்பில் கைது -பாதுகாப்பு அமைச்சு தகவல்

புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நபருடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 தற்கொலை அங்கிகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்கள்,  இரு துப்பாக்கிகள் மற்றும் சில ரவைகள் என்பனவற்றை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தொடர்பான மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.