ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு யோசனை அடங்கலாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
இந்த மாநாட்டில் நாடுபூராவும் இருந்து சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர். நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும். இந்த திட்டங்கள் இந்த வருட இறுதியிலும் அடுத்த வருட முதற்பகுதியிலும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும்.
பயங்கரவாதத்திற்கு முடிவு கண்டுள்ள நிலையில் அடுத்ததாக நாட்டை துரித அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினூடாக நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
நாட்டின் அபிவிருத்திக்கென பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2010 வரவு செலவுத் திட்டத்தினூடாக மேலும் பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கவும் அபிவிருத்தி இலக்குகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பலம்வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்படும்.