நக்கீரா

நக்கீரா

காற்றைக் கரியாக்காதே: நோர்வே நக்கீரா.

oslo-city-bus-norwayகாற்றைக் கரியாக்காதே- (குறியீட்டு படிமக்கவிதை)

பெருமூச்சு விட்டபடி
பேருந்து ஊருந்தும்.
ஊரெங்கும் உள்ளுந்தும்.
எம்மைச் சுமந்த கூலிக்காக
எம் உயிர்மூச்சை
ஊதியம் கேட்கும்.

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

தரிப்பு நிலையமொன்றில்
தலைசுற்றிய
தலையில் சுற்றிய
ஒரு ஈராக்கியத்தாய்
ஆணாதிக்க மதத்தின்
அடிமையாய் ஏறினாள்.
அம்மா என்றழைத்தபடி
பாலர் பாடசாலை ஒன்றே
அவளில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் தன்மொழியிலும்
ஓட்டுணரோ நோர்வேயின் மொழியிலும்
ஏதோ புரிந்தும் புரியாததுமாய்
தலையை
அங்குமிங்கும் ஆட்டிவிட்டு
ஓட்டுணர் ஓடினார்
ஓடாத இடம் தேடி

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

அடுத்த தரிப்பில்
இன்னொருத்தி தலையில் கூடாரத்துடன்…
பயணிகள்
மூக்குகளை பொத்திக் கொண்டார்கள்
குசினியையே
கூடாரத்துள் கூட்டி வந்திருக்கிறாள்

கண்மட்டும் தெரியுமாறு
ஒருகாப்பிலிப் பெண்
வெளியில் மூன்று
வண்டிக்குள் ஒன்று
அவள் வண்டிக்குள்ளும் ஒன்று.

உலகம்
பாரம் தாங்காது
உருண்டு கொண்டே இருக்கிறது.

அருகிருக்க வெறுக்கும்
கறுப்பனென்னருகில்
அழகான ஒருத்தி.
நிரம்பிவிட்டது என்மனம்போல் பேருந்தும்
இருக்கை சொர்க்கமானது எனக்கு.

திரும்பிப்பார்க்கிறேன்
இசைகேட்கும் சாட்டில்
காதுகளை அடைத்து
செவிப்புலனைக் காவு கொடுத்திருந்தது
செவிட்டுச்சமூகம்
இவர்களிடமா?
எம்மக்களைக் காப்பாற்று என்று
கேட்டோம்.
கேட்குமிடமறிந்து கேட்காததால்
வந்த வினை
நந்திக்கடலில் முடிந்ததே

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பட்டையும்
சொட்டையுமாய்
நாறல்பாக்குப் போட்டு
நாறடித்துக் கொண்டிருந்தான்,
பிரம்மமறிய வேண்டிய ஆனால்
பிரபஞ்சமேயறியாத பிராமணி

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

உள்ளேயும் மொட்டை
வெளியேயும் மொட்டையாய்
ஒரு ஆமுத்துறு
ஆத்திரப்படுகிறான்
மதகுருமாருக்கு இடமெங்கே?
மதம்
மதம் பிடித்து நிற்கிறது

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பூச்சடித்த சப்பறமாய்
ஒரு வெள்ளைக்காரக்கிழவி
ஏறிக்கொள்கிறாள்
உலக வரைபடத்தின்
எல்லைக்கோடுகள் அவள் முகத்தில்.
எழும்பி இடம்கொடுத்தேன்
முறைத்தபடி கேட்டாள்
”வயது போய்விட்டது என்று எண்ணுகிறாயா?
நான் சமாளிப்பேன்”

அந்திமகாலம் வரையப்பட்ட
முந்தியவயது பெண்டிர்க்கு –
தாரமாகத் துடிக்கும் தாரகைக்கு –
என்மரியாதை மானக்கேடுதான்.

அடங்கி அமரமுன்
ஆமுத்துறு பாய்ந்து கொண்டான்
என்னிருக்கையில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

வேதமறியா பாதிரி
பாதி வேதம்கொண்டு
ஊதிஊதி ஓதுகிறான்
பேருந்தில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

காதலர்கள் கைகளை
இறுகப்பற்றியபடி
இருக்கையிலும்
வெளியே நடக்கையிலும்…
கையை விட்டால்
ஓடிவிடுவார்களோ?
சந்தேகத்தில் காதலும் குடும்பமும்.

நெரிசல்
சனநெரிசல்
மனநெரிசல்
காற்றெடுக்கும் கரியமிலவாயு
கண்களை உருட்டியது
யன்னலை திறந்து
பார்வையை எறிந்தேன்
கண்டகாட்சி வெருட்டியது

வானத்தைப் பழுக்கவைக்க
படுத்திருந்து
சுருட்டடித்துக் கொண்டிருந்தன
தொழிற்சாலைகள்
ஓசோன் ஓட்டையூடு
சுருட்டைப் பிடித்துத்தான்
யமன்
பூமிக்கு வருவானோ?

காலச்சக்கரம் காற்றின்றி
வெடித்துச்சிதற
ஞாலச்சக்கரம் பிரளத்தொடங்கியது
உச்சி மலையில் இருந்து
பாதாளத்துள்

உலகம்
சிதறத்தொடங்கியது
காற்றைக் கணக்கெடுக்காததால்
கரியாய் போன காற்றால்
காலனின் கையில்
கலண்டர் முடிந்தது.

உலகெங்கும் பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தில் கெலிக்கொப்டரில் வந்து கொள்ளை.

G4S_Logoசுவீடன் நாட்டில் கெலிக்கொப்டரில் 3 அல்லது 4பேர் அடங்கிய கொள்ளைக் கூட்டத்தினர் 100மில்லியன் சுவீடன் குரோன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 23.09.2009 ஜி4எஸ் எனும் பாதுகாப்பாளர்கள் (Security) நிலையத்தில் இக்கொள்ளை துரிதமாக நடந்தேறியுள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்புத்தான் வங்கிப் பணங்களை பாதுகாப்புடன், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்ட செல்லும். இந்த ஜி4எஸ் எனும் பாதுகாப்பு அமைப்பு உலகிலே மிகப்பெரிய பாதுகாப்பாளர் சேவையை உலகெங்கும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைக் கிணறுகளுக்குக் கூட இவர்களே பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.

சுவீடனிலுள்ள ஸ்ரொக்கோம் எனும் இடத்தில் உள்ள பொலிஸ் கெலிக்கொப்டருக்கு அருகில் வெடிகுண்டுபோல் தயாரிக்கப்பட்ட சிவம்பு மின்னிபொருத்திய பார்சல் ஒன்றை வைத்துவிட்டு கொள்ளையர் தம்கொள்ளை நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். களவாடப்பட்ட கெலிக்கொப்டரில் சென்ற கொள்ளையர்கள் நெருப்புப் பற்றாதவாறு திடமாகப் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜி4எஸ் கட்டிடத்தின் மேல் கெலிக்கொப்டரில் கொண்டு வரப்பட்ட பெரிய பாரமான சுத்தியல் போன்ற கூரான ஒரு இரும்புக் குற்றியை கூரையினூடாகப் போட்டு கொள்ளையர்கள் உள்ளே இறங்கினர். அதே வேளை கெலிக்கொப்டரானது மாடியில் நிறுத்த வசதியிருந்தும் நிறுத்தப்படாமல் பறப்பில் சமநிலையில் நின்று கொண்டிருந்தது. இதில் இருந்து நாம் அறிவது என்ன வென்றால் கெலிக்கொப்டரை நிறுத்தினால் அதை திரும்ப இயக்கி எழும்ப நேரம் எடுக்கும் என்பதால் அதை பறப்பிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். இதை பல நிமிடங்கள் பறப்பில் சமநிலையில் வைத்திருப்பதற்கு விமான ஒட்டியானவன் குறைந்தது 100 மணித்தியாலங்களாவது பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

எடுத்த பணத்துடன் வடக்குநோக்கிப் பறந்த கெலிக்கொப்டரானது கொள்ளை நடந்த இடத்துக்கு தெற்கே 3 மைல்களுக்கப்பால் கைவிடப்பட்டுள்ளது. பொலிஸின் அனுபவப்படி கொள்ளையர்கள் பணத்தையும் கொள்ளையர்களையும் வடக்கே விட்டுவிட்டு விமான ஓட்டிமட்டும் விமானத்தை தெற்கில் கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

கொள்ளைச்செய்தி கேட்டு தமது கெலிக்கொப்டரை எடுக்க வந்தபோது குண்டுப்பார்சல் சிவப்புச் சமிக்ஞையுடன் கண்ணடித்துக் கொண்டு இருந்தது. உடன் வெடிகுண்டு விற்பனர்கள் அழைக்கப்பட்டு அந்தப்பார்சல் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்டது வெறும் புஸ்வாணம் தான். இந்த நேரத்துக்குள் கொள்ளை நாடகம் முற்றாக நிறைவேயிருந்தது.

இக்கொள்ளை காரணமாக சுவீடனில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளியல் விற்பனர்கள் கூறுகிறார்கள்.

நோர்வே தேர்தல் – நோர்வே நக்கீரா

தேர்தல் 2009 நோர்வேயில் களமாடி 15.09.2009 முடித்திருக்கிறது. இடது, வலது, நடு, சிவப்பு, நீலம், பச்சை, என மக்களைப் பங்குபோட்டுப் பங்குபிரித்து ஜனநாயகமான சனநாயகம் பதில் தந்திருக்கிறது. நாம் எவ்வளவுதான் புலம்பெயர் நிலத்தில் புதைந்தாலும் நாம் பாலர்களாய் தவழ்ந்தபோது நக்கித்தின்ற மண் எமது உடம்பில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சிந்தனை சிறகடிக்க என்நாட்டிலும் இப்படிச் சுதந்திரமாய் மக்கள் வாக்களிக்கும் நிலைவராதா என்ற ஏக்கம் எம் உணர்வுகளை எடைபோடத்தான் செய்கிறது.

norway partiesகட்சிகள்

றோசா பூ: தொழில்கட்சி
நீலத்துண்டு: வலதுசாரிகள்
பச்சை இலை: மத்தியகட்சி
SV: சோசலிச இடதுசாரிகள்
Fr:(அப்பிள்): முன்னேற்றக்கட்சி
Krf: கிறீஸ்தவக்கட்சி
V: இடதுகட்சி

நோர்வேயில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வன்ஸ்திர என்று அழைப்பப்படும் இடக்கட்சி (இடக்கட்சி என்பதற்காக இவர்கள் இடதுசாரிகளாக இருப்பார்கள் என்று எண்ணினால் தவறானது) இம்முறை தேர்தல் தடைவரப்புக்குக் தட்டத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் என்றும் வலதுசாரிகளுடனேதான் கூட்டமைப்பார்கள். தேர்தல் தோல்வியை கருத்திற் கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து லாஸ் ஸ்பூண்கொய்ம் பதவி விலகியுள்ளார்.

பலகாலமாக நோர்வேயில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நாட்டை நல்ல நிலைக்கு முன்னேற்றிய தொழிலாளர் கட்சி சுமார் 35.4 வீதமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 2.7 வீதம் அமோகமான வாக்குக்களைப் பெற்றுள்ளார்கள். ஆளுங்கட்சியில் தொடர்ந்திருக்கும் கட்சிகள் அடுத்தடுத்து வெல்வது கடினம். இந்த உலகம் முழுவதும் ஆடிப்போன பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாய் வென்று, தேர்தலிலும் தம்வெற்றியை நிலைநாட்டிய தொழிலாளர் கட்சிக்கு எம்வாழ்த்துகள்கள். இம்முறை இவர்கள் முக்கியமாக முன்வைத்த விடயங்கள் பாடசாலை, படிப்பு, தொழில் வாய்ப்பு என்பனவாம். ஒவ்வொரு முறையும் தொழிற்கட்சி கூட்டமைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

தொழிலாளர் கட்சியை அடுத்துப் பெரியகட்சியாக வளர்ந்துள்ள முன்னேற்றக்கட்சி (Frp) 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெருங்கட்சியானாலும் எதிர்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பார்களா என்பது கேள்விதான். அவர்கள் நேராகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்களை எதிர்ப்பவர்கள். ஏறக்குறைய துவேசத்தை வளர்ப்பவர்கள் எனலாம். எமது நாட்டைப்போல் வாக்குகளைப் பெறுவதற்காக துவேசத்தை வளர்த்துவிட்டு நாடு என்னவாகி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இந்த வாய்பேச்சு வீரர்கள் அனைவரையும் கூட்டமைப்பாக இயங்க அழைத்தாலும் எந்தக்கட்சியும் இவர்களுடன் இணைய விரும்புவதில்லை. அதற்கு வெளிநாட்டவர்கள் கொள்கையல்ல காரணம். இவர்களிடம் நிரந்தரமான உறுதியான எந்தக் கொள்கையையும் காணவியலாது. அன்று சொன்னோம் உங்களுக்கு இப்பதான் தெரிகிறதா என்று அடிக்கடி கேட்பார்கள். இலகுவாக எதையும் பொறுப்பிலில்லாதபோது பொறுப்பற்றுச் சொல்லலாம். இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவர்களுடன் எந்தகட்சியும் இணைந்து அரசமைக்கவோ எதிர்கட்சியமைக்கவோ விரும்புவதில்லை.

உதாரணமாக; தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தவேளை கட்சித் தலைவர்களின் உரையையும் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியின் தலைவி சீவ் என்பவர் மேடையில் அறைகூவல் விடுத்தார்; நாம் ஏனைய வலதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க விரும்புகிறோம், இடது கட்சியையும் சேர்த்துத்துத்தான் என்றார். அவவே தன்பழைய தலைவரான கார்ல் ஈ காகனை அழைத்துப் பேசுமாறு கேட்டபோது அவர் இடதுகட்சி வேண்டாம் என்று பேசினார். கட்சித்தலைவி வாய்மூடமுன்னரே மறுதலிப்பு. இப்படியான ஒருகட்சி இம்முறை 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் நோர்வேயின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதுதான். இவர்களிடம் வெளிநாட்டவர் எதிர்ப்பு என்பதே முன்னுரிமையாக்கப்படும். இவர்கள் கருதும் வெளிநாட்டவர்கள் நிறமனிதர்கள் அதாவது கறுப்பு, மண்ணிநிறங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பழைய தலைவர் கார்ல் தங்குவதே ஸ்பானியாவில்தான். அவருக்கு அங்கே வீடு உண்டென்றும், நோர்வேயை விட அதிகமாக அங்கேதான் தங்குவார் என்றும் அறியப்படுகிறது. இக்கட்சி எவ்வளவுக்கெவ்வளவு நோர்வேயின் சேமிப்புப் பணத்தை எடுத்து தூதாரித்தனம் செய்ய முடியுமோ அதற்கான வரவுசெலவுத் திட்டத்தையே இவர்கள் முன்மொழிவார்கள். அடிப்படை உணவு விலையை விட சிகரெட், வைன், மது போன்றவற்றின் விலையை குறை என்பார்கள்.

norway parlimentகட்சிகளின் வாக்குறுதிகள்

தொழிலாளர் கட்சி :- சமமான பாடசாலை அனுமதி, போதியளவு அரச உடைமைகள், தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல், எல்லோருக்கும் வேலைவாய்பு வயோதிபர் பாதுகாப்பு என்பனவாகும்.

சோசலிச இடதுசாரிகள் :- சுற்றம் சூழல்பாதுகாப்பு, சமமானவரி அல்லது சிறுகுறைப்பு, அரசபோக்குவரத்துச் சேவையை முன்னுரிமைப்படுத்தல், நீதியான வேலைவாய்ப்பு, பாடசாலை, சமூகஉதவி, தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல்,

வலதுசாரி கட்சி :- வரிக்குறைப்பு, தனியார் மயமாக்கல், தனியால் முதலீடுகளை ஊக்குவித்தல், அரசஉடமைகளை ஏலத்தில் விடுதல், தனியார் பாடசாலைகளை ஊக்குவித்தல், பெருந்தெருக்கள் அமைத்தல், வீதிப்பராமரிப்பு.

முன்னேற்றக்கட்சி :- அகதிகளைக் குறைத்தல், வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்துதல், முல்லா கிரேக்கார் எனும் குறுடிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதத் தலைவனை நாட்டை விட்டு வெளிறேற்றல், அரச உடமைகளை தனியார் மயமாக்கல், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமாக முதலாளிகளுக்குச் சலுகைகள், மாணவர்களின் படிப்புக்கான வங்கிக்கடனை நிறுத்துதல், பெருந்தெருக்கள், வீதிகள் அமைத்துப் பாதுகாத்தல், மது, சிகரெட்டுகளின் விலையைக் குறைத்தல்.

வலதுசாரிகளின் கண்களில் சுற்றம் சூழல் என்பது ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லையோ. மேலும் 2009 தேர்தலில் துவேசக்கட்சியை விழுத்துவதற்காகவே இடதுசாரிகளுக்குப் பல வெளிநாட்டவர்கள் தமது வோட்டுக்களை இட்டார்கள்.

சோசலிச இடதுசாரிகளின் ஒரு பிரதிநிதிதான் எரிக் சூல்கெய்ம். இவர்தான் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தடிகொடுத்து ஓடியவர். இவர் தன்கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சோசலிச இடதுசாரிகளை புறக்கணிக்குமாறும் கம்யூனிஸ்கட்சிக்கு (கம்யூனிஸ்கட்சி/ Red / RV ) வாக்களிக்குமாறும் ஒரு தமிழ்குழு வேண்டுகோள் விடுத்தது. இது சரிதானா என்பதை அலசிப்பார்ப்பது முக்கியமானது.

இந்த கம்யூனிஸ்கட்சி அதி கூடுதலாக ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார். கடைசி காலங்களில் பல ஆண்டுகளாக அவர்கள் நாமமே பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இக்கட்சிக்கு வாக்களிப்பதூடாக எம்தமிழர்களின் வாக்குகள் பெறுமதியற்று விட்டன. காரணம் இக்கட்சியில் ஒருவர் கூட நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லை. இத்தமிழர்களின் வாக்குகள் மற்றைய இடதுசாரிகளுக்கு விழுந்திருந்தால் குறைந்தபட்சம் வாக்குவீதமாவது இடதுபக்கமுள்ள ஒரு கட்சிக்குக் கூடியிருக்கம் அல்லவா? இன்னும் அரசியலில் நாம் தீர்க்க தரிசனமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.

நோர்வேயில் இடதுசாரிகள் கூடுதலாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், வலதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளுக்கும் தம் வாக்குக்களைப் போடுவார்கள். சுமார் 1 அல்லது 2வீதமான மக்கள் மட்டுமே இடதுசாரிகளா? வலதுசாரிகளா ஆட்சியில் அமர்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம்:- தொழிலாளர் கட்சி 2.7 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதேவேளை சோசலிச இடதுசாரிகள் 2.6 வீதத்தால் குறைந்துள்ளார்கள். ஆக 0.1வீதம் மட்டுமே தம்வாக்குக்களை மாறிப் போட்டிருக்கிறார்கள். இதே போன்றே வலதுசாரிகளிலும் 0.9 வீதமானவர்கள் மட்டும் தம்வாக்குக்களை மாறிப் போட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 0.1 சதவீதமான மக்களே தேர்தல் முடிவகளைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மேலும் துவேசக்கட்சியான முன்னேற்றக் கட்சியின் அபரீதமான முன்றேற்றம் நாட்டை போரொன்றிற்கோ கலவரம் ஒன்றிற்கோ இட்டுச்செல்லும் என எண்ணத் தோன்றுகிறது. இலங்கையில் 70கள் போல் துவேசப்பின்னணி தலைதூக்கும் போது அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தூக்கிய நிலை கண்முன் விரிகிறது. வெளிநாட்டவர்களின் அதிக வரவு இக்கட்சிக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. அதிலும் வெளிநாட்டவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர் வருகை அதிகரிப்பும் துவேசத்தை அதிகரிக்கிறது. ஐரோப்பியர் பார்வைக்கு வெள்ளையர்களாய் இருப்பதால் அவர்களை வெளிநாட்டவர்கள் என்று இக்கட்சி கணிப்பதில்லை. இந்த கிழக்கு ஐரோப்பியரே முக்கியமான பெரிய சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள். இக்கட்சி எதை எடுத்தாலும் கறுப்பு வெளிநாட்டவர்களையே தாக்குவார்கள். முக்கியமாக முஸ்லீம்களே இவர்களின் சத்துருக்கள்.

இக்கட்சியின் வளர்ச்சி எம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்கு நாகரீகத்தில் இருந்து மனிதவதை வரை நாம் முன்னோடிகளே. எமது சுவடுகளைதான் இவர்கள் தொடர்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பெரும்பான்மை வாக்குக்களை ஏன் தொழிற்கட்சி பெற்றது என்றால்; இப்பொருளாதார நெருக்கடியிலும் நாட்டை உடையவிடாது வங்கி வட்டிகளைக் குறைந்து மக்களிடையே பணப்புழக்கத்தை சீர்படுத்தியதும், துவேசக்கட்சியை நிறுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் தொழிற்கட்சி தெரிவுசெய்ததும், வலது பக்கத்தவர்களிடையே நிரந்தமில்லாத கூட்டுத்தலைமை என்பதெல்லாம் தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இத்தொழிற்கட்சி வரி உயர்த்துவது வழக்கம்.

இன்னும் நாலு வருடங்களின் பின்னரும் தேர்தலில் துவேசக்கட்சி இதைவிடப் பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிலவேளை கூட்டமைக்காமலே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வானம் அழுது……….. : நோர்வே நக்கீரா

idp tamils

வானம் அழுது……..

அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.

அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.

அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.

வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.

கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.

இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.

பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.

வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.

எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.

சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.

ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.

புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.

வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.

பொம்மை! : நோர்வே நக்கீரா

பொம்மை

Valentine’s Day Barbie
அங்கமெல்லாம் தங்கம் பூட்டி
சருகைச்சேலைகள் சரசரக்க
அழகு காட்டி
கோவில்சப்பறம்போல்
பெண்டிர் எங்கு போகினம்?

கண்ட நிண்ட கலர்களில்
கோட்டும் சூட்டும்
மாறிச்சாறிப்போட்டுக் கொண்டு
ஜொகிங் ஷூ(ஒடுகாலணி)வும் மாட்டிக்கொண்டு
ஆண்கள் எங்கு போகினம்?

மகிழுந்து காட்ட
மணவறைக்கோ போகினம்?

கமராக்கள் கண்ணடிக்கும்
சந்தையொன்றில்
பிள்ளையென்று சொல்லி
ஒருபொம்மை கொண்டுவந்தார்
தந்தை சிந்தை போலே
ஆடவேண்டும் என்று
பிள்ளையது பொம்மையாய்
என்றுமாக்கப்பட்டது.

வீடியோ எடுக்கவென்றே
பிறந்தநாள் நடக்குது.
காணத இடமெல்லாம்
கண்டு கழித்துப்போகுது.
வடிவான பெண்கண்டால்
நின்று அங்கு மேயுது.

பெற்றோர்கள் கேக்கு வெட்ட
பிள்ளை போஸ் கொடுக்குது.
பிறந்தநாள் பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
இது பிள்ளையா? பொம்மையா?

பொன் பொன்னாய் பரிசுகள்
போட்டியாய் வந்தது.
போட்டுப்பார்த்து பெற்றோரே இரசிக்கினம்
வளர்ந்து பிள்ளை விரும்பிக்கேட்டால்
சீதனம் எனச் சொல்லினம்.
பெற்றோரின் விருப்புப்படி
பேருக்கும் புகழுக்குமாய் வாழுமிந்த பிள்ளைகள்
பிள்ளைகளா? பொம்மைகளா?

எம்மண்ணில் எம்மக்கள்
அகதியாய் அலைகிறார்கள்
பேரன் பேத்தியும் பசியுடனே
படுக்கிறார்கள்
இங்கேயோ!!!
ஆனைமுதல் பூனைமுதல்
சாப்பாட்டுக் கோப்பையிலே விழுகுது
மூக்கு முட்ட திண்ட சனம்
ஊர்க்கதைகள் கதைக்கினம்.

வீட்டுக்குள்
கருமுகில் கூட்டுக்குள்
சிகரெட்டு நட்சத்திரங்கள்.
புகையடித்தே பிள்ளைகளை
பழுக்க வைக்கிறார்கள் பெற்றோர்.
பிஞ்சில் பழுத்த பழங்களோ இவைகள்!!

அப்பருக்கு சிகரெட்டு
பிள்ளைக்கு சிகரெட்பெட்டி

தண்ணியடித்துத் தவழுகிறார்
பிள்ளையுடன் தந்தை.
தந்தையடித்த குடித்த தண்ணீரில்
குளிக்கிறது பிள்ளை
பாட்டி பிள்ளைக்கா? பெற்றோருக்கா? ஊருக்கா?

கொடுத்த பிறசென்ட்டுக்கு சமனனாய்
தின்று சிலர் தீர்த்தனர்.
தம் வண்டியைத் தள்ளிக் கொண்டு
கார்வண்டிக்குள் போயினர்.

பத்து வயதிலேயே பிள்ளை
பட்டம் பெறவேண்டுமாம்- அதனால்
ஐந்துநாளும் பிள்ளை பாடசாலை போகுது
வந்து பின்னேரம் பாட்டுப்படிக்கப் போகுது.
சனியெங்கும் தனியாகத் தமிழ்படிக்கப் போகுது
ஞாயிறு தோறும் டான்ஸ் பழகப்போகுது.
பிள்ளையா? பொம்மையா?
தொல்லையதற்கு இல்லையா?

கல்யாணச் சந்தையிலே
பிள்ளை விலைபோகுது.
ரூபாயில் சீதனம்
பவுண் டொலராய் ஆகுது.
போட்டோவில் பார்த்தே
மாப்பிளைத் தேர்வும் நடக்குது
பொன்னும், பொருளும் பணமும் கொடுத்து
பெண்ணையும் சும்மா தள்ளிவிடும்போது.
இதைவிட மலிவாக
பொம்மை எங்கு வாங்கலாம்?

பிறப்பு முதல் இறப்புவரை
தன் விருப்புவிட்டு
பேருக்கும் புகழுக்கும் ஊருக்குமாய் வாழும்
இத்தியாகிகளை
பிள்ளையென்பதா? பொம்மையென்பதா

கவிமலர்கள் – கொச்சைவழக்குக் கவிதை

‘துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்’. ‘தம்பி வருவான்’ – நோர்வே நக்கீரா

warpoems-pict.gif

துர்ப்பாக்கிய துப்பாக்கிகள்

கண்ணீராலே கருக்கட்டி
கருத்துக்களைச் சப்பித்துப்பி
தலைகீழாய் நின்று துள்ளும்
பத்திரிகைகளில் இரத்தம் சொட்டும்
பேனாக்களை ஏன் சுட்டீர்கள்.

கருத்தில்லாதவன் களத்தில் நின்றால்
கருகிப்போவது கருத்துக்கள் மட்டுமல்ல
உயிர்களுக்கும் உலைவைப்புத்தான்.
ஏட்டறியாதவன் எடுத்த துப்பாக்கியால்
ஏழுலகெங்கும் போர்க்களமாகும்

கருத்தற்றவனே உருக்கெடுப்பான்
கருவின்றிப் பிறந்தவர்களா நீங்கள்?

நீதியின் வாசலைத் திறந்தது குற்றமா?
உண்மையை உலகிற்கு உணர்த்துவது குற்றமா?
ஏழைகள் உடலிலும் வயிறுண்டு என்பது குற்றமா?
ஆழியில் போய் அழிந்து விடும் ஆற்றினை
அள்ளுரைக் கழுவத் திருப்பியது குற்றமா?

பெண்களையும் நாங்கள்; மனிதர்கள் என்றோம்
பாமரமக்களுக்குப் பகுத்தறிவு கொடுத்தோம்
ஆதிக்க வெறியரின் ஆணிவேரை உடைத்தோம்.
மதங்களைக்காட்டி மதங்கொண்டு திரிவோரை
மக்களுக்குக்காட்டினோம்.
அறிவை ஊட்டினோம்.
எது குற்றம்?

சுடுகோல் கொண்டு
நாட்டைச் சுடலையாக்கும்
கொங்கோலர் கொடுமையை சுட்டிக்காட்டினால்
சுடுகோல் ஏன் சுடுகிறது?

பாட்டில் கிடந்த சுடுகோல்களை
தூக்கி நிறுத்திய தூண்கள் நாங்கள்.
எழுத்துக்களாலே எழுந்தவர்கள் நீங்கள்
கைகொடுத்தவன் கைகளை அறுக்கும்
கயமையை நீர் எங்கு கற்றீர்.

எம்பேனாக்கள் முன்னால்
உம் பேய் நாக்கு பொய்யாகும்.
எழுத்துக்களின் எழுச்சியில்
ஏழு உலகும் உயிர்க்கும்.
பேனாவில் நின்றே சேவல்கள் கூவும்
பேனாவின் கூர்மையில் சூரியன் சிவக்கும்
அறியாமை இருள் அன்றே அகலும்.

மண்ணில் வீழ்ந்த எழுத்தாளர் உதிரம்
போனாவூடு புறப்படுமானால்
துப்பாக்கியரே!
பேனாய்போவீர்.
தலைகள் தேடும் பேனாப்போவீர்
நகங்களிடையே நசிங்கிப்போவீர்.

துப்பாக்கிச் சிறைக்குள்ளும்
பேனாக்கள் உயிர்க்கும்.
எம் எழுத்துக்கள் எங்கும் எழுந்து சிரிக்கும்.
மீண்டும் துப்பாக்கிகள் குப்புறக்கிடக்கும்
புதியதொருயுகம் பெருமையுடன் பிறக்கும்.

தம்பி வருவான்

இருண்ட குடிலுக்குள் என்றும்
ஈரமான இரவுகள்
ஈரமான இதயத்தால் ஒழுகும்
கண்ணூடு வெள்ளங்கள்
நேசம் நெஞ்சை நெருட
பாசம் வழியும் கண்களால்

நம்பிக்கை எனும் நூல்திரியில்
நடுங்காது சுடர்விடும் விழிவிளக்குகள்
“தம்பி வருவான்”
விழிச்சுடரை இமைமூடி அணைத்தாலும்
பாசச்சுடர் சுட்ட
இமை அணைய மறுக்கும்.
இரவும் பகலுமாக எரிந்து கொண்டிக்கும்
அகல்விளக்காய் விழிவிளக்குகள்.

தாடைகளுள் பிடிபட்டாலும்
நாக்கு நடக்கிறதே வதந்தி கொண்டு.
தாடைகளில் இல்லாவிடில்.. .. ..
நாடே காடுதான்.

“படிக்க முடியாதாதவன் ஓடிப்போனான்”
“எந்தப் பெட்டையோடையோ.. .. ?
“வங்கிக் கொள்ளையாம்”
“பொலிஸ் தேடுது”
“.. .. .. .. .. .. .. .. .. .. .. ”

கேள்வி கேள்விகளாய் வேள்விகள்..?..?..?
நாக்குகள் வெத்த வெடிகளில்
காதுகள் சிதறின.

நம்பிக்கை மட்டும் கண்வித்திருந்தது
“தம்பி வருவான்”

பேயாடும் நடுநிசியில் நாயோடி வரவேற்கும்
சப்பாத்துச் சத்தங்கள் சருகுக்குள் சத்தம் கேட்கும் வேளை
தாயைத்தேடிக் கன்று “அம்மா.. அம்மா”
தம்பி வந்திட்டான்.. .. தம்பி வந்திட்டான்
அம்மாவின் ஒருசிறங்கை சாதத்துக்காய்
தம்பி வந்தான்

சோற்றுக்குள் சிக்கியது தொண்டை.
விக்கல் தக்கியது தாயின் விம்மலுக்குள்.
தண்ணீர் கொடுத்தாள்; தாய்
கண்ணெனும் உப்புப்பாறையில் எடுத்து.

உரையாடலைக் கேட்க இரவுக்கு நிசப்தம்
காற்றுக்குக் கூடக் காது முளைத்துக் கொள்கிறது.
“ஏன், எங்கே, எதற்கு போனாய்”
“என்ன செய்கிறாய், செய்யப்போகிறாய், என்ன குறை உனக்கு”
கேள்விகள் வளர
காது கேள்வியாகியது?.?. ?

“விடுதலை, போராட்டம், எதிர்காலம், சமூகம், மண், மக்கள்,
அஜாரம், ஆதிக்கம், வெறி, பாசிசம், மார்கிசம், நாகரீகம், உயிர்
ஊழல், தரப்படுத்தல், தமிழ்ஈழம், அரசியல்.. .. ”

தாயின் தமிழ் அகராதியில் இல்லாத சொற்களை
அவள் எங்கே தேடுவாள்
சருகுகள் காற்றில் அகராதிதேட
காலனின் நினைவு அவன் கருத்துள்.

கருநிழலாய் கலைக்கும் காலன் கைவிடுவது இரவில் மட்டும்தானே
நாய்களின் செய்தியால் நகரத்தொடங்கினான்

“இனி எப்படா வருவாய்”
“தமிழ்ஈழத்தோடை”
“அது என்ன தமிழ்ஈழம்.. என்ன சாதி பெட்டை”
“பெட்டையோ”?
“யாரெண்டாலும் நல்லவளா, குடும்பப்பாங்காய் கொண்டுவா”
அவனை இருள் விழுங்கியது.

இருள் அகற்றும் அகல்விளக்குடன்
விடியும் வரை காத்திருக்கும் விதவைத்தாய்
“தம்பி வருவான்”
காத்திருப்பு தொடர்கிறது.

ஓமந்தையின் ஒரு கொட்டிலில் ஒரு வெடிச்சத்தம்.
நிசப்த்தத்துள் ஒரங்க நாடகம் நிறைவேறியது
நாடகம் “ஒர் உயிரின் நிசப்தமானது”.
தமிழ்ஈழம் தரையில்.
ஈழத்தரையில் விதைக்கப்பட்டான்
முளைக்கவில்லை.
எதிரி வென்றுவிட்டான் தோழனாக.

காதில் விழுந்த வெடிச்சத்தம்
தாயின் நெஞ்சைச் சேராது.
நம்பிக்கை.. ..
நம்பிக்கை தானே வாழ்க்கை.
“தம்பி வருவான்”
என்ற நம்பிக்கை இன்றும் அவளுக்கு.

முப்பது வருடங்கள் முடிந்தும்
தமிழ்ஈழத்துடன் “தம்பி வருவான்” என்ற நம்பிக்கையுடன்
மூச்சுவிடுகிறாள் அந்த முதிர்ந்த தாய்.

நோர்வேயின் ஆயுதச் சந்தையும் சமாதானச் சதுராட்டமும்: நக்கீரா

Pigeon_&_Peaceஇக்கட்டுரை டிசம்பர் மாதம் காசாவினுள் இஸ்ரேலியப் படைகளின் பிரவேசத்தின் போது எழுதப்பட்டது. இந்த பிரவேசத்தின் போது பாவிக்கப்பட்ட ராக்கேட்டுக்களின் லேசர் கயிடட் ராக்கெட்டுக்கள் (Laser guided Heads for the rocket) நோர்வேயிலேயே தயாரிக்கப்பட்டவைகளாகும்.

._._._._._._.

500 ஆண்டுகளுக்கு மேல் உதிரத்திலும், மரபணுக்களிலும், உயிரணுக்களிலும், வெள்ளையரை உயர்ந்தவன் என்று ஏற்று, அடிமை வாழ்வை மனதார மணந்துகொண்ட, ஏமாற்றப்படவே பிறந்த இனமாகி, பின் தன்னைத் தானே ஏமாற்றும் பண்பில் பழகிப்போன என்தமிழினத்தை நொந்துகொண்டு, ஏமாற்றங்களை, எமக்கு இழைக்கப்பட்ட வஞ்சக, துரோக நினைவுளைச் சுமந்து கொண்டு இதை எழுதத் தொடங்குகின்றேன்.

பலமுள்ளதும், வலுவுள்ளதும், ஆதிக்கவெறியும், அதிகாரவலுவும் உள்ள இனம்தான் வாழ்வது என்ற மிருகங்களின் வாழ்வியலை நியமப்படுத்தும் முகமாக நடந்து கொண்ட நோர்வேயின் முகத்திரையை கிழித்து, பின்புல நிகழ்வுகளை, நிதர்சனங்களை வெளிச்சத்தில் காட்ட வேண்டிய கடமையும் கடைப்பாடும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு உண்டு.

அணுக்குண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கப்படும் பாரநீர் அதனுடைய இரசாயனக் குறியீடு எச்2ஓ2 நோர்வேயின் வடபகுதியில்தான் உள்ளது. இதை தன்வசப்படுத்துவதற்காகவே கிட்லர் இரண்டாம் உலகயுத்தத்தில் நோர்வேயை தனது கைக்குள் கொண்டுவந்தான். உயரமும், மஞ்சள் தலைமுடியும், நீலக்கண்களுமுடைய யேர்மனியர் நோர்வேயிலும் வாழ்கிறார்கள் என்று பறைசாற்றி உயர்சாதியில் இவர்களையும் சேர்த்துக்கொண்டான். ஆனால் கிட்லரோ இதற்கு முற்றிலும் முரணான உருவ அமைப்பைக் கொண்டவன். தன்னைத்தானே வெறுத்ததால் தான் தற்கொலை செய்து கொண்டானோ என்னவோ?

இந்தப் பாரநீரானது எப்படி ராஜிவ்காந்தி பாரதப் பிரதமராய் இருந்த காலத்தில் இந்தியாவுக்கு விற்கப்பட்டிருக்கிறது? உலக அழிவுக்கே வித்திடும் பாரநீர் எப்படி இந்தியாவை அடைந்தது? நோர்வேயின் வெளிநாட்டு அரசியலின் சாசனம் இதை ஒத்துக்கொண்டதா? இவர்கள் விற்கும் கொலைக் கருவிகளை மற்றைய நாடுகள் மூன்றாமுலக நாடுகளுக்கு விற்கலாமா? ஆயுத விற்பனையில் அறுதி அத்தாட்சிப் பத்திரம் கைச்சாத்திடும் போது விற்பனை செய்யும் நாடுகள் அந்த ஆயுதங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறை. சமாதானப் புறாவை சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு தம்மைச் சமாதானப் பிரியர்களாகக் காட்டிக் கொள்கிறது நோர்வே. அறுதி அத்தாட்சிப் பத்திரம் பற்றிய சர்ச்சை நோர்வேஜிய நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாகவே எடுக்கப்பட்டது, எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அறுதி அத்தாட்சிப் பத்திரத்தை சர்ச்சையாய் ஆட்சியில் இல்லாத போது எடுத்துக்கொண்ட சிவப்பங்கிக்காரர்கள் (எரிக் சூல்கெயும் கட்சி) இன்று ஆளும் கட்சியில் வந்தபின் மௌனிகளாகிப் போயினர். ஏன் அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே.

நோர்வேயின் ஆயுதப்பட்டடையில் தயாரிக்கப்பட்ட இராக்கட்டுகள், மெசையில்ஸ்கள் சுடுகலன்கள் நாட்டோயூடாக நிக்கராகுவா கெரில்லாக்களை அடைந்தது எப்படி? இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக நோர்வேஜியப் பத்திரிகையில் வந்தபோது ஊதி ஊதி எரிப்பதற்குப் பதிலாக அணைத்தார்கள். நோர்வேயுடன் சேர்ந்து நாட்டோ எப்போ ஆயுத வியாபாரியானது? நாட்டோவுடனும், அமெரிக்காவுடனும் இணையக்கூடாது என்று தொழிற்கட்சியில் இருந்து பிரிந்து போன சோசலிச இடதுசாரிகள் (சூல்கெய்மின் கட்சி) ஏன் கண்ணை மூடிக்கொண்டிருந்தார்கள். இதைத் தடுப்பதற்கு என்ன செய்தார்கள்?

அழிவாயுதங்களைத் தயாரிப்பது மட்டுமல்ல அதை விற்பனை செய்யும் நாடான நோர்வேக்கு சமாதானத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்னதான் அருகதை இருக்கிறது? ஆயுதமே சமாதானத்தின் விரோதி. இது தெரியாதா?

2008 மார்கழியில் இருந்து காசாவை ஆக்கிரமிக்கப் படை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், அன்று நாசிகளால் ஈன இனமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனரை அழிப்பதற்காக சுடுகலங்கள், போர் விமானங்கள், கெலிக்கொப்டர்கள் இருந்தும் ஏவப்படும் கெல்ஸ் வயர் எனும் ரொக்கட் நோர்வேயிலேயே தயாரிக்கப்படுகிறது. ஆதாரம்: ரிவி2 நியூகெத்தர் (ரிவி2 செய்திகள்) 10.01.2008 நிகழ்ச்சி கொறொஸ்பொன்டான்ச. இதைப்பற்றி வெளிநாட்டமைச்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பூசி மெழுகினார்கள். இப்படி: ”நாங்கள் செய்வதில்லை அதில் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறோம்” என்று ஆத்தாக்கொடுமையில் அலம்பினார்கள். விழுந்தாலும் மீசையில் மண்பட விடமாட்டார்கள்.

கெல்வ்வெயர் ஏ ஜி எம் 144எம்

நோர்வேயில் தயாரிக்கப்படும் உதிரிப்பாகத்தின் (கொம்பொனட்) தொழில் என்ன? லாசர் கதிர்நோக்கி ஊடு இதை குறிபாத்துச் செலுத்தலாம். 0,5 கிமீ இருந்து 8கிமீ வரை குறிதவறாது பாயக்கூடியதும், பேரழிவைக் கொடுக்கக்கூடியதும் ஆகும். இதை தாங்கி எதிர்ப்பு ஏவுகளைகளாலும் செலுத்தலாம்.

கிளாசபொம்

இலங்கையில் அரசினால் இனவழிப்புக்காக் போடப்படும் கிளாசபொம் பின் உதிரிப்பாகங்கள் நோவேயிலும் செய்யப்படுவதாக அறியப்படுகிறது. இது வானத்தில் வெடித்துச் சிதறி, பின் பரவி விழுந்து சின்னாபின்னமாகச் சிதறும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல உடனடியாக வெடிக்காது சில மணித்தியாலங்கள், கிழமைகள், மாதங்கள் கழிந்தும் பிரிந்த துண்டுகள் வெடித்துச்சிதறும். இது ஒரு குறிப்பிட்ட ஒரு முகாமையோ, நபரையோ அழிப்பதற்குப் பயன்படுத்த இயலாது. ஒரு பகுதி நிலப்பரப்பிலுள்ள உயிர் வாழ்வனவற்றையும் கட்டிடங்களையும் அழிக்க வல்லது. இக்குண்டுகள் தயாரிப்பதன் நோக்கம் என்ன? இதை இனவழிப்புக் கருவி என்பதை விட வேறு எப்படிச் சொல்லலாம். ஒரு குண்டானது 250 அலகுகளை (யூனிட்டுக்களை) கொண்டது. அதாவது ஒரு குண்டைப்போட்டால் 250 குண்டுகளை கொட்டியதற்குச் சமனானது.

ஆடு நனைகிறது என்று ஓநாய் விழுந்து விழுந்து அழுதது போல் நோர்வே, 64 நாடுகளை தலைநகர் ஒஸ்லோவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் அழைத்து ஒருமகாநாடு நடத்தி கிளாசபொம் தடைசெய்வது என்று கைச்சாத்திட்டார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த போலந்து, ரோமானிய, யப்பான் கையொப்பமிட மறுத்தன. 2ம் உலகயுத்த அழிவின்பின்பும் யப்பானுக்கும் போர் வெறியா? தன் படையை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என்ற வெளிநாட்டுக் கொள்கையைத் தளர்த்தி இராக்குக்கு யப்பான் படை அனுப்பியது. ஐ.நா வின் ஐயா அக்காசியார் இருக்கும் போதே இப்படி ஒரு கையொப்ப மறுப்பு. இம்மகாநாட்டின் சிறப்பு என்ன என்றால் இக்கிளாச பொம்பை தயாரிக்கும் முக்கியமான நாடுகளான அமெரிக்கா, இரஸ்சியா, இஸ்ரேல் கலந்து கொள்ளவில்லை. இனி நோர்வே இவற்றை தயாரிக்கும், மற்ற நாடுகள் மக்கள் தலையில் இவற்றைக் கொட்டலாம்.

அதேவேளை இலங்கையில் நோர்வேயின் நடுவத்தால் உருவாக்கமடைந்த புரிந்துணர்வு சாமாதானம் கந்தலாகி சிங்கள அரசால் தமிழர்கள் மேல் கிளாசபொம் போடப்படுகிறது. இதை எப்படி நோர்வே மறந்து போனது? இதை நினைவுபடுத்த ஊர்வலமாய் சென்று திரண்டார்கள் ஒஸ்லோவாழ் தமிழ் மக்கள். இது கருத்தில் கொள்ளப்பட்டதா? இதற்குப்பின் இருமாதங்கள் முடியுமுன்னரே நோர்வே தயாரிப்பான கொல்ஸ் வயர் பாலஸ்தீனர்கள் தலையில் வெடித்துச் சிதறியது. எங்கே சமாதானம்? எங்கே உடன்பாடு? நோர்வேஜியர் சமாதானப் பிரியரா? இரத்த வெறியரா?

பாலஸ்தீன சமாதான உடன்படிக்கை, இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பவற்றிடையில் பல ஒற்றுமைகளைக் காணலாம்

· யசீர் அரபாத்துக்கும், இஸ்ரேலிய சீமன் பெரஸ்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி தாஜா பண்ணப்பட்டது. அதே போன்று அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றப்பட்டது. இன்று சிறுநீர் கழிக்கவே வழியற்றுப்போனது தமிழ்ச் சமூகம்.

குறிப்பு: இதே சீமன் பேரஸ் இன்று அரசில் இருந்து கொண்டு பாலஸ்தீனர்களைக் கொல்வதற்கும் நாடுபிடிப்பதற்கும் படையனுப்பியுள்ளார். இவருக்கு நோர்வே சமாதானத்துக்கு நோபல் பரிசு கொடுத்தது. நோவேஜியக் கொடியில் சரிந்து கிடக்கிறது சிலுவை. இன்னுமேன் இது உலகத்திற்குப் புரியவில்லை. ஏமாற்றப்படவே பிறந்த தமிழ் இனத்துக்குத்தான் இது புரியவில்லை, மற்றவர்களுக்குமா?

·மேற்கூறியதை எடுத்து நோக்கினால் தனிமனிதத் துதிபாடல்கள் என்னத்தை எமக்குத் தெரிவிக்கிறது? பெரும் போராட்டமும், மனித அழிவுகளும் ஒருசில தனி மனிதர்களிலேயே தங்கியிருக்கிறது என்பதையும், அனைத்து ஏகாதிபத்தியத்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டம் துணிந்து போராட முயன்றால் மட்டுமே சமாதானம் என்பது சாத்தியமாகும்.

·இரண்டு ஒப்பந்தங்களும் ஒஸ்லோவில்தான் கைச்சாத்திப்பட்டன. முடிவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தான் பார்க்கிறீர்களே.

·இந்த ஒப்பந்தங்களுக்குப் பின்பும் நோர்வேஜிய ஆயுதங்கள், போர்க்கருவிகள், வெடி பொருட்கள் இந்நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்துப்பட்டுமுள்ளன.

·ஒப்பந்தங்கள் கைச்சாத்து இட்டபின் இன்நாடுகளின் தலைவிதிகள் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டது.

·தறிய றோலாசன் (பாலஸ்தீன ஒப்பந்தம்) எரிக் சூல்கெயிம் (இலங்கை ஒப்பந்தங்கள்) முடிந்த கையுடன் அமெரிக்கா பறந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நோர்வே அமெரிக்காவின் கைப்பொம்மையாகிப் போனதும், அமெரிக்கா தன் விரல் நுனியசைவில் நோர்வேயை வைத்து பொம்மலாட்டம் புரிவதும் ஏன் இன்னும் புரியவில்லை?

·இரு ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்ட மேசையின் கீழேயே நோர்வேஜிய கொலைக்கருவிகள் வலிமையுள்ள பக்கத்தாருக்கு விற்கப்பட்டுள்ளது. ஆதாரம்: உயிர்மெய்யில் சியாமளாவின் கட்டுரையும், ரிவி-2 கொரெஸ்போன்டன்ஸ். கேவலம் சமாதானப் பேச்சுவார்த்தை என்பதே ஆயத விற்பனையாகிவிட்டது.

·இருபக்கங்களிலும் முறுகல் நிலை ஏற்படும்போது அயல்நாடான எகிப்துக்கும், இந்தியாவுக்கும் தடிகொடுத்து ஓடுகிறார்கள். பேசவேண்டியது பிரச்சனைக்குரியவர்களுடனேயே தவிர, இவர்களோடல்லவே.

ஒரு பூனைக்குக் கால்முறிந்ததும் கூயோ மாயோ என்று குளறியடித்து ஒடித்திரிந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சிகளில் முகம் துலைக்கும் நோர்வேக்கு, இலங்கை அரசு புலிகளை வெல்வதாய் என்று உலகுக்கு காட்டாப்புக் காட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே குலையோடு கொய்தெறியும் படையெடுப்பைத் தொடங்கியுள்ளது என்பது புரியாமலில்லை. ”இந்த இன அழிப்பு நோர்வேக்குப் புரியவில்லையா…?” இப்படியொரு நினைப்பு நமக்கு ஏற்படுமாகில் பச்சை முட்டாள்கள் நாமேயன்றி வேறாருமல்ல. இந்தக் கள்ளப் பூனை இப்படியேதான் பாசாங்கு காட்டும். இது நோர்வேஜியப் பூனை.

இன்றுவரை நோர்வே ஈடுபட்ட சமாதான நடவடிக்கைகளில் வெற்றிகரமாய் நடந்து முடிந்து, மக்கள் அமைதியாக வாழும் ஒரு நாட்டைச் கூறுங்கள் பார்க்கலாம்? குவாத்தமாலா என்கிறீர்களா? அங்கும் நோபல்பரிசு கொடுக்கப்பட்டது. பிரச்சனை முடிந்ததா? தீர்ந்ததா? விடமாட்டார்கள் சமாதானப் பிரியர்கள்… சமாதானத்தைப் பிரிப்பவர்கள்.

இங்கே வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முறுகல்நிலையில், முறியும் தறுவாயில் அல்லாடும் போது திரு எறிக் சூல்கெய்ம் அவர்கள் ”நேபாளம் விரும்பினால் தாம் தரகராக இருக்கத் தயார்” என்று சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கைத்தரகர் எரிக் சூல்கெம் கூறியதை உலகமக்களே வாய்பொத்திச் சிரித்தார்கள், தம்நாடுகளிலும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு சமாதானத்துக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம்தான்.

இலங்கையில் ”புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்பது எவ்வளவு சாத்தியம் என்பதை நாம் பெரிய பெரிய ஆய்வுகள் செய்துதான் விளங்கிக்கொள்ள வேண்டிய எந்த அவசியமுமில்லை. எவ்வளவோ பொருள், உயிர், உடைமை அழிவுகளின் பின்பும் உணர்ந்து புரிய முடியாதவர்களிடம், புரிந்து உணருங்கள் என்றால் இது எப்படிச் சாத்தியமாகும். சாத்தியமாகா ஒன்றை பேச்சுவார்த்தை மேடைக்குக் கொண்டுவருவது என்பது வெறும் கண்துடைப்பு மட்டுமல்ல பெருலாபம் ஈட்டக்கூடிய ஆயுதக் கடைவிரிப்புத்தான். சமாதான மேசையை ஆயுதச்சந்தையாக மாற்றவல்ல அனுபவம் வாய்ந்தது நோர்வே போன்ற நாடுகள் என்பது ஒன்றும் அதிசயமான விடையமல்ல.

அரசியல், பொருளாதார, கலாச்சார, சரித்திரப் பின்னணிகளைப் புறம்தள்ளி பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்பது வெறும் ஆயுதச்சந்தைப்படுத்தலே. இலங்கை ஒப்பந்தத்தில் மேற்குறிப்பிட்ட எதுவுமே கருந்தில் கொண்டதாக தெரியவில்லை. பலவகையான சமாதானங்கள் உலகில் உண்டு. அமைதி என்பது பலவழிகளில் ஆக்கப்படலாம். இரு சமூகங்களும் ஒன்றை ஒன்று சமமாக மதிப்பதூடும், சுயநிர்ணய உரிமையுடனும், மற்றை அல்லது ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில்… இப்படிப் பலமுறைகளில் பலநாடுகள் பல்லினக்கலாசார சமூகங்கள் சேர்ந்து வாழுகின்றன.

இன்னுமொரு அமைதியான சமாதான வாழ்வும் உண்டு என்பதை இலங்கை அரசாங்கம் மட்டுமே உணர்ந்துள்ளது. ஒரு இனத்தை முழுமையாக அழிப்பதூடும், வாய்மூடி மௌனியாக்குவதூடும் சாமாதானத்தை ஏற்படுத்தலாம் என்பதை இலங்கையரசு நன்கறியும். காரணம் கையாலாகாத தமிழ்சகோதரங்கள் அயல்நாட்டில் வாழ்வதும், காசைமட்டும் கொடுப்பதால் சமாதானத்தை வாங்கிவிடலாம் என்று கனவுகாணும் புலம்பெயர் சமூகம் இருப்பதுமேயாகும். தமிழ்நாடு துப்பித்தள்ளினால் இலங்கையில் சுனாமி ஏற்படும் என்ற நிலையிருந்தும், தமிழக மீனவர்கள் கன்னாபின்னமாக பாவத்தின் ஒரு கண்ணீர்துளியாய் காட்சியளிக்கும் இலங்கையின் இராணுவத்தால் சுடப்பட்டபோதும் கண்மூடிக் கிடந்தது இந்திய மத்திய அரசம், மாநிலஅரசு? கொடிபிடிக்கலாம், ஊர்வலம் நடத்தலாம் முடிவு என்ன என்பதே முக்கியமானது. தள்ளாத வயதிலும் தளராத ஆசையுடன், கெட்டுப்போன கண்ணுக்கு கறுப்புக்கண்ணாடி போடும் கிழவனால் எப்படித் தன் மக்களைக் பார்க்க முடியும். இப்படிப்பட்டவரிடம் எம்மக்கள் மதிப்பும், மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தார்களே என்பது வேதனைக்குரியதுதான்.

இந்தியத் தமிழர்களே! சிந்திப்பீர்களா? உங்கள் கடற்கரைகளில் பிணமாய் மிதந்து எண்ணின உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன? கித்துல் மரங்களில் கள்ளு இறக்கியவர்களை இராணுவத்தில் சேர்த்து எம்மினத்து இந்தியகரைஞர்களை கொன்று கடலில் விதைத்தார்களே…. உங்கள் விலை என்ன என்பது புரிகிறதா? ஈழப்போராட்டம் உண்மையிலேயே தமிழ்நாட்டிலேயே மையம் கொண்டிருக்க வேண்டும்…. நடந்தா? ஏன் இன்னும் இல்லை. கெடுகிறேன் பிடிபந்தம் என்றால் நாம் என்ன செய்வது?

இனி இலங்கைக்கு வருவோம். அன்ரன் பாலசிங்கத்துக்கு சிறுநீரகம் மாற்றி புலிகளிடம் நன்மதிப்பைப் பெற்று பின் தமிழரின் சிறுநீரகங்களை எடுப்பதற்காக சமாதானம் பேசிக்கொண்டு ஆயுதவிற்பனையை மேற்கொண்டது நோர்வே. கேட்டுப் பாருங்கள் நாம் எங்கு விற்றோம் என்பார்கள். செக்கியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளுக்கு அறுதி அதிகாரசாசனம் இன்றி ஆயுதங்களை விற்றது யார்? இன்று கூட அறுதி அதிகாரசாசனம் இன்னும் கைச்சாத்திடப் படவில்லை. நோர்வேயால் தன்கொடியில் சரிந்து கிடக்கும் சிலுவையை நிமிர்த்தி, நெஞ்சில் கைவைத்து தம் ஆயுதங்களால் உலகில் எவரும் சாகவில்லை என்று கூறமுடியுமா?

இலங்கைக்கு இரஸ்சிய ஆயுதங்களையும், இரஸ்சிய பழங்கிடவல் மிக்-29 போன்ற போர் விமானங்களையும் இலங்கைக்கு விற்பனை செய்தது உக்கிரேனியா? இரஸ்சியா நாட்டேவில் இல்லையா? இதே நாட்Cவில்தானே நோர்வேயும் இருக்கிறது. இந்த நாட்டோவைத்தானே வேண்டாம் என்று புறக்கணித்து புதிய சோசலிச இடதுசாரிகள் உருவானார்கள் (எரிக் சூல் கெய்மின் கட்சி)

நடுவர்களாகவோ, இணைப்பாளர்களாகவோ, தொடர்பாளராகவோ இருப்பவர்களுக்கு குறைந்த பட்சம் அந்நாட்டுப் பின்னணிகள் தெரிவதுடன் அம்மக்கள் மேல் அக்கறையும் அபிலாசைகளும் இருப்பது முக்கியமானது. ஏரிக் சூல்கெய்ம் கொம்பனிக்கு இந்த அக்கறைகள் இருந்ததாக யாராவது சொல்லட்டும்…? அப்படி அக்கறை இருந்திருந்தால், இரு தரப்பினரும் ”ஒப்பந்தத்தை நீதான் முதல் முறித்தாய், இல்லை நீதான் முதலில் மீறினாய்”; என்று ஒருவரையொருவர் சாட்டுச் சொல்லிக்கொண்டு சுடுபட்டதுமல்லாமல் உடன்படிக்கையை முறித்து, மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும் சிதைத்து, இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலைக்கு மக்களை மரணத் தீயில் தள்ளி போரை முதன்மைப் படுத்திய போது குறைந்த பட்சம் எரிக் சூல்கெய்ம் அமெரிக்காவுக்கு முதுகு சொறியவாவது போயிருக்கலாம். போனாரா? அது எமக்குத் தேவையுமல்ல. பத்திரிகையில் பார்த்தேன் நோர்வேயின் அறிக்கை ஒன்றை ”பெரிதாகச் சண்டை பிடியாதீர்கள்” என்றிருந்தது. கொலை என்று வந்தபின் அதில் பெரிதென்ன, சிறிதென்ன?

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து, இனவழிப்புப்போர் உக்கிரமடைந்தும் நோர்வே வாய் மூடி மௌனியாக இருந்தது ஏன்? செஞ்சோலையில் சிறுவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்களே, உலகெங்கும் தமிழ் வானெலிகள், இணையங்கள், சகல ஊடகங்களும் கண்ணீர் விட்டதே, நோர்வே மட்டும் கண்மூடிக்கிடந்தது ஏன்? சரி அரசு சொல்வது போல் புலிப்பிள்ளைகளாவோ அன்றி புலிக்குட்டிகளாகவோ இருக்கட்டுமே. நோர்வேயின் அக்கறை என்ன ஆனது? உயிர்களின் விலை என்ன? நோவேயிய தெருப்பூனையின் விலையை விடக்குறைவுதான்.

புலிகளின் தரப்பிலிருந்து செய்திகளைக் காவிவந்த தமிழ்ச்செல்வன் சமாதானத்தின் முகமாக உலகுக்கு காட்டப்பட்டு வந்தார். இந்த முகம் சிதைக்கப்பட்டபோது இந்த ஒப்பந்ததைத்தை எற்படுத்திய நடுமக்குழு யாருக்கு சிறுநீரகம் மாற்றிக் கொண்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக இவர்களிடமிருந்து வெளிவந்த காத்திரமான கண்டனமோ, கனமான கவலைகளோ, குறைந்தபட்ச கேள்விகளோ இல்லை. வந்தோம், பார்த்தோம், கதைத்தோம், விற்றோம், சண்டை பிடிக்கப் போறோம் என்றீர்கள் விட்டுவிட்டோம். இச்சமாதானக்குழுவை நடுமக்குழு என்பதா? தரசர்கள் குழு என்பதா? சமாதானத்தின் பெயரில் பொழுது போக்கும் சுயலாபக்குழு என்பதா?

சமாதான ஒப்பந்த காலத்திலேயே பல அறிவாளிகளையும், அப்பாவிப் பொது மக்களையும் துரோகிகள் என்ற முத்திரையை முகத்தில் குத்தி உயிர்களைக் கிழித்துப் போட்டார்களே அவற்றையும் இந்தக் எரிக் சூல்கெய்ம் கொம்பனி கண்காணித்துக் கொண்டு பேசாமல்த்தானே நின்றது. அக்கறை அக்-கரையானதேன்? அக்கறை ஆயுத விற்பனையில் இருக்கும் போது உயிர்களைப் பற்றி ஏன் இவர்கள் அக்கறை கொள்ளப்போகிறார்கள். புலிகளுக்கு நவீன தொலைத் தொடர்புசாதனச் சாமான்கள் கொஞ்சத்தைக் கொடுத்துக் குளிரப் பண்ணிவிட்டு, மறு கதவால் சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட சமூக அழிவுப் போராயுதங்களை இலங்கைக்கு வியாபாரம் செய்த இவர்களின் அங்கிடு தத்தங்களை எந்த நீதியின் தராசில் வைத்துத் தீர்ப்பிடுவது.

Pigeon_&_Peaceசமாதானத்தைப் பயன்படுத்தி புலிகளை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசும், நோர்வேயும் நினைத்த வெற்றியை ஈட்டியுள்ளனர் என்பதே நிதர்சனம். இதற்கு ஒரு உதாரணத்தை வைக்க விரும்புகிறேன். தமிழ் செல்வனுடனான குழு தம்பிரச்சினைகளையும், அரசாங்கத்தின் அத்துமீறல்களையும் நோர்வேயிடம் கூறுவதற்காக வந்திருந்தபோது, பின்கதவால் சிங்கள அரசை அழைத்துவந்து பேசும்படி திணித்தது நடுமக்குழு. தமிழ்செல்வன் குழுவினர் முன்கூட்டியே நடுமக்குழுவுக்கு அறிவித்திருந்தார்கள் நாம் வருவது நோர்வேயுடன் கதைப்பதற்கே அன்றி இலங்கையரசுடன் அல்ல என்பதை.

சமாதான உடன்படிக்கை இழுபறிப்படும்போது எறிக் சூல்கொயும் எங்கே போனார்? அவர் தனது பிள்ளையையும் புதுமனைவியையும் அழைத்துக்கொண்டு சீனாவுக்கு உல்லாசப்பயணம் போயிருந்தாராம். அங்கும் ஆயுதவிற்பனையோ யாருக்குத் தெரியும். அவ்வளவென்ன இன்னும் எவ்வளவோ நடத்தும் நோர்வே மௌனம் சாதிப்பதில் இருந்து என்ன தெரிகிறது? ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திடும்போது, மீறுபவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை குறிப்பிட்டிருந்தார்களா? குறிப்பிட்டிருந்தால், மீறியவர்கள்மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டதா…? ஏன் எடுக்கப் படவில்லை. ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்திருந்தால் இது வெறும் அரசியல் உல்லாசப் பொழுது போக்கும், ஆயதக் கடை விரிப்புமே. நோர்வேயின் சமாதானத்தின் மேலுள்ள நேர்மை, நோக்கம், மனிதநேயம், இரட்டைவேடமும் கபடத்தனமும் என்பன புலனாகிறது.

நோர்வே இதைத்தான், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த அபிப்பிராயமும் சொல்லாதாம், (ஒரு தரப்புக்கு சாதகமானதொரு சிறு அபிப்பிராயத்தைச் சொல்லப்போய், மற்றைய தரப்பின் மனஸ்தாபத்தை உண்டாக்கி, ஏன்தான் வீணாக ஆயுத மார்க்கெற்றை அநியாயமாக்குவான்) எதையும் திணிக்காதாம், மிகவும் நல்ல பிள்ளையாம், புலிகளும் அரசும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு நோர்வே இருசாராரையும் அழைத்து வந்து வட்டமாய் குந்தியிருந்து கதைக்க மட்டும் ஏற்பாடு செய்யுமாம். என்றால் இதற்கு நோர்வே எதற்கு? ஒரு கொட்டேல் பணியாளர் போதுமே. 1948ல் இருந்தே இரு தரப்பும் பேசிக்கொண்டு தானே இருந்தன. பேசிப் பேசிக் கொண்டேதான் இருக்கின்றன. எடுக்கப்பட்ட முடிவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனாவா? அப்படி நடக்காவிட்டால் முடிவு என்ன?, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனும் நிறைவேற்று அதிகாரமோ, அன்றி உலக அரங்கிற்கு இந்தப் பிரச்சனையை காவிச் செல்லும் வலுவோ, வல்லமையோ இல்லாத நோர்வேக்கு எதற்கு இந்த சாமாதான வேசம். இருபகுதியினரையும் தட்டிக்கேட்க திராணியற்ற நோர்வேக்கு எதற்கு இந்த தரகு வேலை.

சமாதானத்தரகு வேலைக்கு முன் எம்அடிப்படை பிரச்சனைகள் அலசி ஆயராயப்பட்டிருந்தால் தரகர்குழுவுக்கு புரிந்திருக்கும் இரு இனத்துக்கும் ஆணிவேரிலேயே துவேசம் ஏறிக்கிடக்கிறது என்று. இதைக் கழுவித் துடைத்தபின்பே ஒற்றையாட்சியையோ, அதிகாரச் சமபயிர்வையோ கதைக்கலாம். இலங்கையின் அமைதிக்கான எந்தவித அடிப்படை வேலைகளையும் செய்யாமல் காடுகளில் கட்டவிழ்த்து நின்ற முரட்டு மாடுகளை எழுத்துவந்த வண்டியில் கட்டினால் அவை எப்படி வண்டியை இழுக்கும். இழுக்கும். முரண்டுதான் பிடிக்கும். எலியையும் பசியுடன் இருக்கும் பூனையையும் பிடித்து வந்து ஒருவரை ஒருவர் கதைத்துக் கொண்டிருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டால் என்ன நடக்குமே அதுவே நடந்தது. இது கூடத்தெரியாமல் என்ன பேச்சுவார்த்தை வேண்டியிருக்கிறது?

ஒன்றை ஒன்று வி(பி)ராண்டத் தொடங்கியபோதும் நடுமக்குழு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இவர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருப்போம் என்று தானே சொன்னார்கள். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் பேச்சு வார்த்தையின்றி போரைப்புகைய விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கலாமே. என்ன புலிகளை வலுவிழக்கச் செய்திருக்க இயலாது. ஆயுதங்களும் கைமாறியிருக்காது. அன்று புலிகள் மிகப்பலத்துடன்தான் இருந்தார்கள்.

புலிகளை விரட்டுகிறேன் சிங்கக்கொடி தேசம் எங்கும் பறக்கும் நாளை விரைவில் எதிர்பாருங்கள் என்று மகிந்த குதிக்கிறார். இதை நோர்வேதான் தேடித்தந்தது என்பதை சிங்களமக்கள் என்று உணர்வார்களோ? நோர்வேயின் சதுரங்கதைத்தைப் புலிகள் எப்போ புரிவார்களோ?

புரிந்துணர்வு ஒப்பந்தம் 6 மாதம் ஒரு வருடத்துக்கு மேல் இழுபடுமானால் இது புலிகளைப் பலவீனப்படுத்துவதுடன் போருக்கே வழிவகுப்பும் என்று தன்னைத்தான் புலியா பிரமைகாட்டுபவரின் கூறியபோது அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. நீங்கள்தான் அறிவாளிகள் அங்குள்ளவர்கள் எல்லாம் முட்டாள்களா என்றார். இன்று நடந்தது என்ன? நாம் கொடுத்த உயிர்கள் என்ன? விலைகள் என்ன?….? மனமுவர்ந்து இருபகுதியும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தால் தீர்வுக்கு ஒரு மணிநேரம் போதும். எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்களும், நடுமையாய் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கூடிக்கதைத்தால் சாவது சனங்கள் தான். இப்படி இழுபட்ட பேச்சுவார்த்தைகாலம் பெரும் போருக்கான, மனிதஅழிவுக்கான தயார்படுத்தல் காலமாகவே இருந்திருக்கிறது. இங்கே அழிந்ததும் அழிந்து கொண்டிருப்பதும் தமிழ், சிங்கள மக்கள் மட்டும் தான். நோர்வே பார்த்துக்கொண்டுதான் இருக்கும். முடிந்தால் கண்ணாடி வாங்கிக் கொடுங்கள் இன்னும் வடிவாகப் பார்க்கட்டும்.

சுனாமி வந்து இலங்கையைத் தின்றது, 60 000 மேற்பட்டோரைக் கொன்றது. இதில் தமிழர்களே அதிகம். ஆனால் நோர்வேயின் உதவிப்பணம் யாரைப்போய் சேர்ந்தது? ஆழிப் பேரலையால் அழிந்து அல்லற்படும் மக்களை அந்தப் பணம் போய்ச் சேர்ந்ததா?, அப்படி சேர்ந்தால் அனுப்பப்பட்ட பணத்தில் எத்தனை சதவீதம் அந்த மக்களைச் சென்று சேர்ந்தது போன்ற கேள்விகளை ஒருபுறம் தள்ளி வைப்போம். இந்த சந்தர்ப்பத்தில் நடந்த சில சம்பவங்களை அறியும்போது நமக்குச் சிறுபிள்ளைத் தனமாகத் தெரியலாம், ஆனால் அதன் பின்னணியில் பொதிந்துள்ள அரசியல் இனம் இனத்தோடு என்பதுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பேரினவாதம் பேரினவாதத்தோடு கை குலுக்கி தனது காதலை வெளிப்படுத்தும். அதாவது ஒரு சிறு சம்பவத்தைப் பாருங்கள்: சுனாமியில் அழிக்கப்பட்ட புத்தவிகாரை ஒன்றை நோர்வே தாம் திருத்தித் தருவதாக செய்தி பத்திரிகைகளில் வந்தது. எத்தனையோ கோவில்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டனவே நோர்வேக்கு அவை ஏன் புலப்படவில்லை. இதையெல்லாம் சிலாகித்து எழுதும் அளவிற்குப் பெரிய விடயமா எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். நான் இதை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. ”நான் உன் மீது காதலும் பாசமும் கொண்டனான்தான் கண்ணா, என்னையும் வெள்ளைப் புலியாக்கி கொடும்பாவி கொழுத்தாதே…” என்று சிங்களப் பேரினவாதத்திடம் தன் லவ்வை வெளிப்படுத்தும் ஒரு சென்ரிமென்ற் உளவியல் நடவடிக்கை என்பதுதான் உண்மை.

எத்தனை துரோகங்களைச் சந்தித்தது ஈழத்தமிழினம், ஆனால் நோர்வே செய்தது போன்ற துரோகத்தையோ, ஈனச்செயலையோ எவரும் இந்த இனத்துக்கு இழைத்ததில்லை.

உலகப் பேரினவாத அரசுகள் தத்தமக்குள் ஒன்றுசேரும், உறவாடும் என்பதுவே சர்வதேசிய யதார்த்தம். இந்த சர்வாதிகார அரசுகளால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களை இவர்கள் ஒன்றுசேர விடாமல் தடுக்கும் பணியையும் கூட்டுச் சேர்ந்தே செய்வார்கள். இதற்குத்தானே இனம் மதம் சாதி குலம் கோத்திரம் என்று எண்ணிலடங்கா வகைகளில் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பேரினவாதிகளும், சர்வாதிகாரிகளும் இவற்றையெல்லாம் தாண்டி ஒன்று சேர்வார்கள். உதாரணம் இந்திய மத்திய அரசு, அமெரிக்கா, பாக்கிஸ்தான் நோர்வே….

தமிழ்மக்களின் மக்கள் தொகையைவிடக் குறைந்த கொசோவோ, மெந்தோநீகரோ, எரித்திரியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள் தனியாக, தனித்துவத்துடன் வாழப் பிரிந்து போகலாம் என்பதை ஏகோபித்து மானசீகமாக அங்கீகரிக்கும் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரிவினையில் மட்டும் விதிவிலக்காக நடக்கிறார்களே ஏன்? (ஈழப் பிரிவினைதான் ஒட்டுமொத்த இலங்கைப் பிரச்சனைக்குமான ஒரே தீர்வு என்ற கருத்தியலோடு இயங்கிய பலர் இப்போ புலிகளைப்போல் அதை மறு பரிசீலனை செய்தார்கள். தனித்தமிழீழம் இப்போ தேவையா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் ஒரு புறமிருக்கட்டும் அதை இன்னொரு கட்டுரையில் பேசுவோம். ஒரு கண்ணுக்கு எண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் போடும் இந்த சர்வதேச பெரும்பான்மைப் பயங்கரவாத அரசுகளின் பக்கம்சார் நடவடிக்கைக்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றேன்.)

நோர்வேயிலும் சிறுபான்மை இனமாக வாழ்ந்து வரும் சாமர் எனும் இனத்தவர் நோர்வேஜியரால் அடிமைகளாக நடத்தப்பட்டனர், உரிமைகள் மறுக்கப்பட்டனர். தாயிடம் பால் குடிக்கும் விலங்குகளுக்கு உரிய உரிமை கூட சாமர் இன மக்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சாமர் தான் நோர்வேயின் ஆதிக்குடி என்பது உணரக்கடவது. இவர்கள் தமது மொழியான சாமிஸ்கை பேசும் உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் குடும்பங்களை சிதைத்துச் சுக்கு நூறாக்கப்பட்டது. தாயின் முலையில் பால்குடித்துக் கொண்டிருந்த சாமர் குழந்தைகள் நோர்வேஜியப் பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்கு பரிசுப் பொருளாக, வீட்டு வேலைக்காரராக, குழந்தைத் தொழிலாளர்களாக கொடுக்கப்பட்டு அடிமைகளாக தம்வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து தீர்த்தார்கள். இச்சாமரைப்பற்றி தொடர்ந்து எழுதினால் இதுவே ஒருதனிப் புத்தமாகி விடும்.

நோர்வேஜியர்களும் ஆதிக்கவாதிகளே, அதிகார வெறியர்களே. அயல் நாடுகளைக் கொள்ளையிட்டு தம்மை வளர்த்த வீக்கிங்குள் எனும் கடற்கொள்ளையர் இனமே இந்த நோவேஜிய இனம். இன்றும் இவர்களது அடிமன அரசியலில் சாமர் இன மக்களை இழிவானவர்களாக, கீழானவர்களாக நோக்கும் தன்மையைக் காணலாம், சட்டம் இறுக்கமாக இருந்தாலும் கூட. இவர்களிடம் இருந்து சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் எதிர்பார்த்த எம்மை என்னத்தால் அடிக்கலாம் சொல்லுங்கள்.

இந்தச் சாமர் மக்களும் நோர்வேஜிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்டம் செய்தார்கள். தங்களுக்கென்று தனிப் பாராளுமன்றமும், கொடியும், தேசியப் பெருநாளும் (மாசி 6) அமைத்துக் கொண்டார்கள். ஆயினும் அவர்களால் வெல்லப்படாத இன்னும் பல உரிமைகள் விடுபட்ட படியேதான் இருக்கின்றது. தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தின் தார்மீக உரிமைகளையே மறுக்கும் இந்த நோர்வே எமது பிரச்சனையில் சுத்தமான மத்தியஸ்தம் வகிக்கும் என்று எதிர்பாக்கும் எமது தலையில் எதைக் கரைத்து ஊற்றுவது சொல்லுங்கள்.

._._._._._.

இது ஒரு கட்டுரை மட்டுமல்ல வேறுவழியின்றி இந்நாட்டில் இருப்புக் கொண்டதால் எற்பட்ட வலியும், வேதனையும் மனச்சாட்சியின் தண்டனையுமே இந்தக் கட்டுரை.

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். – தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரா

Thuparamaya_Dagobaமுப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள். ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார். அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொண்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.

இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது ”மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக” இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடியேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணிமேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்திருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட்டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்திருந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களவர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்பட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.

இயக்கர் – நாகர்:
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.

இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதியில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்ணணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது
 
பூகோளமாற்றம்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா- இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முழக்கமிடும் இராஜபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்?  புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இராஜபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிக்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எளிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும், கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டதிருத்தங்கள் என்ற குணங்குறிகளைக் காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழவிருக்கும் புதிய ஆயுதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.
 
தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசால் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வுகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்.

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.