விஸ்வா

விஸ்வா

இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வட பகுதிகளில் மக்கள் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வுள் மேற்கொள்வது முக்கியமானதாம்!

வடக்கில்  மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக அங்குள்ள தொல்லியல் மையங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என தொல்லியல் திணைக்கள பிரதிப் பொதுப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொல்லியல்சார் இடங்களை அடையாளம் கண்டு யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

30 வருடங்கள் வடபகுதியில் போர் நடைபெற்றதால் தொல்லியல் சார் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடமுடியவில்லை. அதனால், தற்போது அப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும், வெடிபொருட்களை  அகற்றிய பின்னரே முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. அதனால் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஊர்களில் மீள்குடியேற்றப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் யுத்தத்திற்கு ஊக்கமளித்த ரிஎன்ஏ வட பகுதி மக்களின் அவலங்களுக்கு முக்கிய பொறுப்பு – பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vவடபகுதி மக்களின் இன்றைய அவலங்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறிய போதிலும், தமிழ்தேசியக்கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தியடையக் கூடிய நிலையில் இல்லை என்பது உண்மை. ஆனால் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமானது. கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாது, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. இவை இப்போது இரண்டு மாகாணங்களாக செயற்படுவதில் தவறில்லை. இரு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘வெசாக்’ கொண்டாட்டத்திற்காக நயினாதீவுக்கு 27 ஆயிரம் சிங்கள மக்கள் வந்து சென்றுள்ளனர்!

யாழ். மாவட்டத்தில் இம்முறை நடைபெற்ற ‘வெசாக்’  பண்டிகை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து 27 ஆயிரம் பேர் நயினாதீவு நாகவிகாரைக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையினர் மேற்படி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். புங்குடுதீவு கடற்படையினரும், குறிக்கட்டுவான் பொலிஸாரும் இணைந்து இம்மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் முன்னரெப்போதும் இல்லாத அளவில் ‘வெசாக்’கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

Sampanthan_Rநாளை (07-06-2010) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வலியுறுத்தவிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகவுள்ள நிலையில் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே திரு. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை ஜனாதிபதியுடன் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் விபரங்களை என்னால் இப்போது முழுமையாக கூற முடியாது. வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் முதலில் கலந்துரையாடவுள்ளதாகவும், அடிப்படை வாழ்வாதார உதவிகளின்றி அம்மக்கள் அல்லல் படுவதாகவும் அவர்களுக்கான உதவிகளை உடனடியாக செய்தாக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கூட்டமைப்பினர் அங்குள்ள நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றைத் தாயரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நடாளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், போருக்குப் பின்னான மீள்குடியேற்றம், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பான விடயம், விடுதலைப் பலிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு  வழங்குவது போன்ற விடயங்களும் வலியுறத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதே வேளை, நாளை மறுதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அப்பயணத்தில் இணைந்து கொள்வார் என தெரியவருகின்றது.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் செல்கின்றனர். எனினும், குழுவில் யார்? யார்? அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப் படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத்தளபதி நியமிக்கப்படவுள்ளார்.

Mullaitivu_Districtமுல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக தற்போது கடமை புரியும் இமெல்டா சுகுமாரை அப்பதவியிலிருந்து விடுவித்து, வடமாகாணசபையில் அவருக்கு பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Mullaitivu_Districtவடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசஅதிபராக ஒரு முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்படவிருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பனவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தமிழ்மக்கள் பலருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

கிளிநொச்சியில் சில பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளுக்கு விரைவில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என வடமாகாண மின் அத்தியட்சகர் குகராஜ் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் நிதியுதவியின் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி. உருத்திரபுரம் கிழக்கு, பரந்தன், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, கனகபுரம், கணேசபரம், திருநகர் வடக்கு, தொண்டமான் நகர். பாரதிபரம், ஆகிய கிராமங்களுக்கு  இன்னும் இரண்டு மாதங்களில் மின்சாரம்  வழங்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளையில், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளால் அழிவடைந்த, சேதமுற்ற வீடுகள் இன்னமும் மீளமைக்கப்படாமல் மக்கள் இன்னமும் சிறு கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு  குறிப்படத்தக்கதாகும்.

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாக ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

Traffic_Police_SLவன்னியில் மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளின் போக்குவரத்து ஒழுங்குகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் இவ்வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் யாவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்று வீதிகளில் காவல் கடமைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர். வாகனப் பயன்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள பகுதிகளில் சிவில் நிர்வாக நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு கட்டமாக வாகனப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் பேணப்படவுள்ளதாகவம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது, பொது மக்கள் பலர் தங்கள் வாகன அனுமதிப்பத்திரங்கள் ஆவணங்கள் போன்றவற்றை இழந்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட வாகனங்கள் சில  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் அதன் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை  பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நாவற்குழி பகுதிகளில் நள்ளிரவில் கொள்ளையிடும் கும்பலினால் மக்கள் அச்சம்!

நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் கும்பல் ஒன்று நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி வீடுகளுக்குள் புகுந்த சிலர் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் பெண்களின் நகைகளை அபகரித்துக் கொண்டு ஓடிவிடுவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கொள்ளைச் சம்வவத்துடன் தொடர்புள்ளதான சந்தேகத்தின் பேரில் அப்பகுதி இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறான நள்ளிரவு கொள்ளைகளில் ஈடுபடும் கும்பல்கள் குறித்த அச்சத்தினால் அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீட்கப்பட்ட ஐந்து சடலங்களும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதால் அவை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியாமலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சடலங்கள் பெண்களினது என முன்னர் செய்திகள் வெளி வந்த போதிலும் சரியாக அடையாளம் காணமுடியாத நிலையில் சடலங்கள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அவற்றில் இரு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரிச்சீருடையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சடலத்தில்  இராணுவச் சீருடை போன்ற தன்மை காணப்படுவதாகவும், ஏனைய இரு சடலங்களும் ஆடைகளற்று நிர்வாணமாக காணப்படுவதாகவும். நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டைக் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இச்சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறிதரன், கிளிநொச்சி, மாங்குளம் அகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், படை அதிகாரிகள் கணேசபரம் கிராமசேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் நேற்று இச்சடலங்கள் மீட்கப்பட்டன.