நாளை (07-06-2010) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றியும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வலியுறுத்தவிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா பயணமாகவுள்ள நிலையில் நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே திரு. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை ஜனாதிபதியுடன் நடத்தப்படுகின்ற பேச்சுக்களின் விபரங்களை என்னால் இப்போது முழுமையாக கூற முடியாது. வன்னிப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் முதலில் கலந்துரையாடவுள்ளதாகவும், அடிப்படை வாழ்வாதார உதவிகளின்றி அம்மக்கள் அல்லல் படுவதாகவும் அவர்களுக்கான உதவிகளை உடனடியாக செய்தாக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கூட்டமைப்பினர் அங்குள்ள நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றைத் தாயரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், போருக்குப் பின்னான மீள்குடியேற்றம், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பான விடயம், விடுதலைப் பலிகள் எனத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்ற விடயங்களும் வலியுறத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதே வேளை, நாளை மறுதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்லவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அப்பயணத்தில் இணைந்து கொள்வார் என தெரியவருகின்றது.
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் செல்கின்றனர். எனினும், குழுவில் யார்? யார்? அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப் படவுள்ளது.