விஸ்வா

விஸ்வா

‘தமிழியல் விருது – 2010’ படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம் ஆண்டு தோறும் வழங்கும் தமிழியல் விருதுக்கு படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பிவைக்கும் படி கேட்கப்பட்டுள்ளது. ‘தமிழியல்விருது – 2010’ இற்கே படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் படைப்பாளிகள் 2009 ஜனவரி தொடக்கம், டிசெம்பர் 31வரை வெளிவந்த தமது ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், நாடகம், அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, இனமத நல்லறவு இலக்கியம். தொழில்நுட்பம், என பல்துறை சார்ந்த நூல்களையும், சுமார் 30 நிமிடம் வரை ஒளிபரப்பக்கூடிய குறுந்திரைப்படங்களின் இறுவட்டுக்களையும் தேர்வுக்காக அனுப்பி வைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் 13 நூல்களுக்கும், மூன்று குறுந்திரப்படங்களுக்கும், இலக்கிய மேம்பாட்டிற்கு உரமிட்ட மூத்த படைப்பாளி ஒருவருக்கும் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். படைப்பாளிகள் தங்கள் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட்ட விபரங்களை குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விபரப்பட்டியலுடன், ஆக்கங்கள் நூல்களாயின் அவற்றின் நான்கு பிரதிகளையும், இறுவட்டாயின்  இரண்டு பிரதிகளையும், இணைத்து 10.08.2010 இற்கு முன்னர் அனுப்ப வேண்டும். ஒரு படைப்பாளி எத்தனை படைப்பாக்கங்களையும் அனுப்பலாம். விருது வழங்கும் விழா இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும்.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு இலங்கை. தொலைபேசி- 0776041503.

வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய சிமெந்து பக்கற்றுக்கள்!

Construction Workவடக்கில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு எட்டு பக்கற் என்கிற அளவில் இவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 45ஆயிரத்து 415 குடும்பங்களுக்கு 3 இலட்சத்து 63 ஆயிரத்து 385 சிமெந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தபட்ட குடும்பங்களுக்கே இவை வழங்கப்பட்டுள்ளன. இச்சிமெந்து மக்கற்றுக்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டவை என்பதும், அப்பக்கற்றுக்களில் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பு என பொறிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீள்குடீயெற்றத்திற்கான இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இந்திய அமைச்சர் ப சிதம்பரம் 50 000 மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கான உதவிவை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கே வழங்கப் போவதாகவும் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த உதவித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த சிமெந்துப் பக்கற் வழங்குவது இடம்பெறுவதாக அறியமுடிகிறது. வீடுகட்டுவதங்கான ஏனைய பொருட்களும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் அறிய முடிகிறது. மீள்குடியேற்ற வீடமைப்பிற்கான இந்திய உதவி பொருட்களாகவே வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்!

நேற்று (Jnue 6 2010) மிருசுவில் பகுதியில் எற்பட்ட விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். ‘தினக்குரல்’ பத்திரிகையின் அச்சு இயந்திர இயக்குநரான, யாழ்ப்பாணம் இளவாலையை வசிப்பிடமாக் கொண்ட பேரம்பலம் ஜெயசந்தர் (வயது 32) என்பவரே விபத்தில் பலியானவராவார்.

மிருசுவில் ஏ-9 விதியில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இவரது மோட்டார் சைக்கிலும், இலங்கைப் போக்குவரத்து பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து எற்பட்டது.  பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்ற போதும். வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களின் சாரதிகளும் அவற்றைக் கவனக்குறைவாக  செலுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.

மட்டக்களப்பில் 20 000 பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்!

Batticaclalo_Studentsமட்டக்களப்பு மாவட்டத்தில் போரினாலும், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும், எனைய சமூக காரணிகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் தங்கள் பெற்றொரை இழந்து நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநாதைகளாக்கபட்டுள்ளர்கள். இவர்கள் தங்கள் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருகினறனர்.  இதனால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் வசதிகளற்றவர்களாகவுள்ளனர்.

இதேவேளை, மத்திய கிழக்குப் போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற பெண்களின் பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதபடி பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.  இவ்வாறு சுமார் 20 ஆயிரம் பிள்ளைகள் தங்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் ஐயாயிரம் வரையிலானவர்களே பாடசாலைக்கல்வியை கைவிட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவ்வாறு பாசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட பிள்ளைகளை மீண்டும் கல்விகற்க வைப்பது. அல்லது, தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் அங்கு போதிய வளங்களில்லாததாலும், சரியான திட்டங்கள் வகுக்கப்படாத காரணத்தினாலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளையும் அது எவ்வாறு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பாதிக்கின்றது என்பதனையும் பிபிசி தமிழோசைக்காக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலரட்ணம் சீவகன் அந்த மண்ணின் வாசனையுடன் தொகுத்துள்ளார். மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்தத் தொகுப்பின் முதல் பாகத்தை அருகில் உள்ள இணைப்பினூடாகக் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100704_battischooldropout.shtml

மருத்துசிகிச்சையை உடனடியாகப் பெற முடியாத தாய் மரணமாகிறாள் தாயின் மரணத்திற்குப் பின் தந்தை குழந்தைகளை அநாதரவாக கைவிட்டுச் சென்று மறுவாழ்வை அமைக்கிறார். கைவிடப்பட்ட குழந்தைகள் தாய்வழி உறவுகளால் குறிப்பாக வயதான அம்மம்மா அம்மப்பாவால் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களது முதுமை வறுமை குழந்தைகளைப் பராமரிக்க முடியாதநிலை. குழந்தைகளின் பள்ளி வரவு ஒழுங்கீனமாகிறது. அல்லது பள்ளிக்கே செல்வதில்லை.

இன்றைய குழந்தைகளே நாளைய சமூதாயம். ஒரு மாவட்டத்தில் மட்டுமே 20 000 மாணவர்கள் பள்ளி செல்லவில்லை என்றால் உருவாகப் போகும் சமூதாயம் எவ்வாறு அமையும் என்கின்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களால் முடிந்த பணிகளைச் செய்யவே முற்படுகின்றனர். செய்தும் வருகின்றனர். ஆனால் அந்த சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையோ மிக ஆழமானது மிக விசாலமானது. அதனை வெளி ஒத்துழைப்பின்றி ஓரளவு தன்னும் பூர்த்தியாக்க முடியாது.

SLVisistலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர், ஆலயம் அகிலன் பவுண்டேசன், லூசியம் சிவன் கோயில் போன்றன முன்னுதாரணமாக பல முயற்சிகளை எடுத்துள்ளன. இவ்வமைப்புகள் நூற்றுக்கணக்கான அநாதரவான மாணவர்களை தங்களது இல்லங்களில் வைத்து பராமரிப்பதுடன் அவர்களுக்கான கல்வியையும் உறுதிப்படுத்தி உள்ளன.

London_Sivan_Kovil_illamஆனால் அங்குள்ள மாணவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முன்னரே குறிப்பிட்டது போல ஆழமானது விசாலமானது. இதனை ஒரு சில அமைப்புகளின் தீவிர ஒத்துழைப்பினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் பொதுஸ்தாபனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மாணவர்களின் நிலையை மாற்றியமைக்க பல்வேறு வகைகளிலும் உதவமுடியும். அதற்கு முன்வர வேண்டும்.

‘ஒரு பானை’ என்கின்ற லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இவ்வாறு ஏனைய அமைப்புகளும் இந்நிலையை மாற்ற முன்வர வேண்டும். இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று சொல்லி அதன் பொறுப்பில் மட்டும் இம்மாணவர்களைக் கைவிட்டால் நாம் குறைவிருத்தியான ஒரு தமிழ் சமூகத்தைத்தான் அடுத்த தசாப்தத்தில் காண நேரிடும்.

14 பேரை கொலை செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1989ஆம் ஆண்டு தொடக்கம் 14 பேரை கொலை செய்த நபர் ஒருவரை 21 வருடங்களின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறிலங்காவின் தென்பகுதியிலுள்ள எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆறு பிள்ளைகளின் தந்தையான நபரே கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் எம்பிலிப்பிட்டிய, தங்காலைப் பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்து புதைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

14வது நபரை கொலை செய்து புதைத்ததன் பின்னர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் தாம் செய்த கொலைகள்  குறித்து ஒப்புக்கொண்டுள்ளார். காணிப் பிரச்சினை காரணமாக அண்மையில் 22 வயதான ஒருவரைக் கொலை செய்து வாழைத் தோட்டமொன்றில் புதைத்தமை குறித்தும் தற்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடைசியாக கொலையுண்டவருக்கு இறுதியாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பாக விசாரணை நடத்தியபோதே கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய 16ஆயிரத்து 11 படையினர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!

Check_Pointசிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16ஆயிரத்து 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மூன்று கட்டங்களாக, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான படையினர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த யூன் மாதம் 30ஆம் தகதி முடிவடைந்த மூன்றாவது பொதுமன்னிப்பு காலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 62 படையினர் உத்தியோக பூர்வமாக தங்கள் சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சொந்த கிராமத்தில் மீள்குடியேற முடியாத நிலையில் கிளிநொச்சி சாந்தபுரம் மக்கள்!

Rehabilitation_Wanniவவுனியா செட்டிக்குளம் அகதி முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அழைத்து வரப்பட்டு மூன்று மாதங்களாகியும் பாடசாலையொன்றிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொச்சியில் இரணைமடுவிற்கும் தெற்கில் ஏ-9 பாதைக்கு கிழக்காக அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் வறியமக்கள் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்திலுள்ள காணிகள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இம்மக்கள் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது சாந்தபுரம் பாடசாலைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அப்பாடசாலை சிறிய கட்டடமாகையினால் வெளியில் சிறு கூடாரங்களும் அமைக்கப்பட்டு இம்மக்கள் வசதிகளற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாந்தபுரம் பாடசாலையில் இப்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள தங்கள் காணிகளைப் பார்வையிட படைத்தரப்பால் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள 10ஆம் ஒழுங்கைக்கு அப்பால் சென்று பார்வையிட படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளிலுள்ள தங்கள் வீடுகளின் கூரைகள், மரந்தடிகள் காணாமல் போயுள்ளதாகவும், தென்னை மரங்களிலுள்ள தேங்காய்களும் களவாடப்பட்டிருப்பதாகவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர்மாடிக் கட்டடங்கள்! – இலங்கைப் புலனாய்வுப் பிரிவு

கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 20 தொடர்மாடிக் கட்டடங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும், அவர் கனடாவில் வசித்து வருவதாகவும் புலனாய்வப்பிரிவு தெரிவித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இக்கட்டடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கே இக்கட்டடம் சொந்தமானது எனவும். நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ‘லக்பிம’ தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொடர் மாடிக்கட்டங்கள் கனடா வர்த்தகருடையது என்பதும், அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் நிருபிக்கப்பட்டால் இக்கட்டடங்கள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இதே போன்று நாற்பதிற்கும் அதிகமான கட்டடங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணம் நிறுத்தப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்க ஏற்பாடு!

யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டதால் குறித்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு  வழங்க யாழ்.மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் குறித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி நிலையத்திலிருந்து இன்று அழைத்து வரப்பட்ட இம்மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பதிவுகள், சில நடைமுறைகள் முடிவடைந்ததும் நாளை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். பாரதிபரம் பாடசாலை சில மாதங்களாக இயங்கி வருகின்ற போதும் அக்கிராமத்து மக்கள் தற்போதே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் வன்னி மக்களின் மீள்குடியேற்றப் பதிவுகள் இம்மாதத்தில் நடைபெற மாட்டாது என கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.