மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினாலும், சுனாமி இயற்கை அனர்த்தம் மற்றும், எனைய சமூக காரணிகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் தங்கள் பெற்றொரை இழந்து நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அநாதைகளாக்கபட்டுள்ளர்கள். இவர்கள் தங்கள் உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வருகினறனர். இதனால், அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் வசதிகளற்றவர்களாகவுள்ளனர்.
இதேவேளை, மத்திய கிழக்குப் போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்ற பெண்களின் பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதபடி பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு சுமார் 20 ஆயிரம் பிள்ளைகள் தங்கள் பாடசாலைக் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.
ஆனால் ஐயாயிரம் வரையிலானவர்களே பாடசாலைக்கல்வியை கைவிட்டுள்ளதாக அரச நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட பிள்ளைகளை மீண்டும் கல்விகற்க வைப்பது. அல்லது, தொழில் பயிற்சிகளை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் அங்கு போதிய வளங்களில்லாததாலும், சரியான திட்டங்கள் வகுக்கப்படாத காரணத்தினாலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளையும் அது எவ்வாறு மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைப் பாதிக்கின்றது என்பதனையும் பிபிசி தமிழோசைக்காக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலரட்ணம் சீவகன் அந்த மண்ணின் வாசனையுடன் தொகுத்துள்ளார். மூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்தத் தொகுப்பின் முதல் பாகத்தை அருகில் உள்ள இணைப்பினூடாகக் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100704_battischooldropout.shtml
மருத்துசிகிச்சையை உடனடியாகப் பெற முடியாத தாய் மரணமாகிறாள் தாயின் மரணத்திற்குப் பின் தந்தை குழந்தைகளை அநாதரவாக கைவிட்டுச் சென்று மறுவாழ்வை அமைக்கிறார். கைவிடப்பட்ட குழந்தைகள் தாய்வழி உறவுகளால் குறிப்பாக வயதான அம்மம்மா அம்மப்பாவால் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களது முதுமை வறுமை குழந்தைகளைப் பராமரிக்க முடியாதநிலை. குழந்தைகளின் பள்ளி வரவு ஒழுங்கீனமாகிறது. அல்லது பள்ளிக்கே செல்வதில்லை.
இன்றைய குழந்தைகளே நாளைய சமூதாயம். ஒரு மாவட்டத்தில் மட்டுமே 20 000 மாணவர்கள் பள்ளி செல்லவில்லை என்றால் உருவாகப் போகும் சமூதாயம் எவ்வாறு அமையும் என்கின்ற அச்சம் தவிர்க்க முடியாதது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களால் முடிந்த பணிகளைச் செய்யவே முற்படுகின்றனர். செய்தும் வருகின்றனர். ஆனால் அந்த சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையோ மிக ஆழமானது மிக விசாலமானது. அதனை வெளி ஒத்துழைப்பின்றி ஓரளவு தன்னும் பூர்த்தியாக்க முடியாது.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர், ஆலயம் அகிலன் பவுண்டேசன், லூசியம் சிவன் கோயில் போன்றன முன்னுதாரணமாக பல முயற்சிகளை எடுத்துள்ளன. இவ்வமைப்புகள் நூற்றுக்கணக்கான அநாதரவான மாணவர்களை தங்களது இல்லங்களில் வைத்து பராமரிப்பதுடன் அவர்களுக்கான கல்வியையும் உறுதிப்படுத்தி உள்ளன.
ஆனால் அங்குள்ள மாணவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முன்னரே குறிப்பிட்டது போல ஆழமானது விசாலமானது. இதனை ஒரு சில அமைப்புகளின் தீவிர ஒத்துழைப்பினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் பொதுஸ்தாபனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மாணவர்களின் நிலையை மாற்றியமைக்க பல்வேறு வகைகளிலும் உதவமுடியும். அதற்கு முன்வர வேண்டும்.
‘ஒரு பானை’ என்கின்ற லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தனது பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இவ்வாறு ஏனைய அமைப்புகளும் இந்நிலையை மாற்ற முன்வர வேண்டும். இலங்கை அரசு செய்ய வேண்டும் என்று சொல்லி அதன் பொறுப்பில் மட்டும் இம்மாணவர்களைக் கைவிட்டால் நாம் குறைவிருத்தியான ஒரு தமிழ் சமூகத்தைத்தான் அடுத்த தசாப்தத்தில் காண நேரிடும்.