வவுனியா செட்டிக்குளம் அகதி முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்ட கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அழைத்து வரப்பட்டு மூன்று மாதங்களாகியும் பாடசாலையொன்றிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
கிளிநொச்சியில் இரணைமடுவிற்கும் தெற்கில் ஏ-9 பாதைக்கு கிழக்காக அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் வறியமக்கள் வாழும் ஒரு கிராமமாகும். இக்கிராமத்திலுள்ள காணிகள் இராணுவத் தேவைகளுக்காக எடுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இம்மக்கள் மீள்குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் வைக்கப்பட்டிருந்து தற்போது சாந்தபுரம் பாடசாலைக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அப்பாடசாலை சிறிய கட்டடமாகையினால் வெளியில் சிறு கூடாரங்களும் அமைக்கப்பட்டு இம்மக்கள் வசதிகளற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாந்தபுரம் பாடசாலையில் இப்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள தங்கள் காணிகளைப் பார்வையிட படைத்தரப்பால் தடைசெய்யப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள 10ஆம் ஒழுங்கைக்கு அப்பால் சென்று பார்வையிட படையினரால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிகளிலுள்ள தங்கள் வீடுகளின் கூரைகள், மரந்தடிகள் காணாமல் போயுள்ளதாகவும், தென்னை மரங்களிலுள்ள தேங்காய்களும் களவாடப்பட்டிருப்பதாகவும் அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.