சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

லிந்துலை தோட்டத்தில் பலத்த காற்று; மழை. மரம் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

தலவாக்கலை – லிந்துலை, தங்கக்கலை தோட்டத்தில் நேற்று (24) முற்பகல் திடீரென வீசிய பலத்த காற்று மழையினால் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் ஸ்லத்திலேயே உயிரிழந்தனர். நேற்று முற்பகல் 11.30 அளவில் தங்கக்கலை ரேப்பன்ரைன்ற் (கருப்பந்தைல) மரக் காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்றபோதே இந்தப் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்று மழையால் இரு இளைஞர்களும் அருகிலிருந்த குடிசையொன்றுக்குள் ஒதுங்கியிருந்துள்ளனர். அப்போது ஐந்தாறு மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு சரிந்து வீழ்ந்துள்ளன. இதில் பாரிய மரமொன்று குடிசை மீது வீழ்ந்ததில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரான தங்கக்கலை, கேம்பிரிட்ஜ் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் சந்திரமோகன் (17) க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருந்தவரெனத் தெரியவருகிறது. மற்றையவரான அதே தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் ரகுவரன் (18) கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவராவார்.

இருவரது சடலங்களும் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் மறேயா – எல்கின் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின் பக்கம் இலங்கையின் பார்வை

sri-lanka-air-lanka.jpgஉள்நாட்டு யுத்தத்தாலும் உலக பொருளாதார நெருக்கடியாலும் மோசமாக பின்னடைவு கண்டிருக்கும் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த சீனாவின் பக்கம் எதிர்பார்ப்புடன் பார்வையை செலுத்தியுள்ளது இலங்கை. 

சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்துறைப் பணிப்பாளர் சாவோ கிவெய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட சீனாவுக்கு சென்றுள்ளார்.

இலங்கைக்கு உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் பிரதான சந்தையாக சீனா விளங்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாகும்.

“எமது உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா முக்கியமானதாகும். குறிப்பாக நிதி நெருக்கடியால் ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று சீனத் தினசரிக்கு அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக சுற்றுப்பயணத்தின் முதலாவது இடமாக சீனாவுக்கு அமைச்சர் சென்றுள்ளார். சீனாவின் நாணயம் வலுவான பெறுமதியுடன் இருப்பதாகவும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்குரிய பாரிய சந்தை வாய்ப்பை அது கொண்டிருப்பதாகவும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரச்சினையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வீழ்ச்சியடைந்துள்ளது.

2006 ஐ விட 2008 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை எப்போதுமே நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். இப்போது நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. வடக்கு, கிழக்கிலும் நிலைமை அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு மூன்று நேரடி விமான சேவைகள் இடம்பெறுகின்றன. சீனாவின் ஏனைய நகரங்களிலிருந்து அதிகளவு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் மொரகொட கூறியுள்ளார்.

காத்தான்குடி முகைதின் பள்ளிவாயல் பிரதேசம் புனித பூமி.

kattankudy.jpgமுதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதேசத்தைப் புனித பூமியாக, நகர அபிவிருத்தி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கென பலகோடி ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனித பிரதேச திட்டத்தின் ஒருகட்டமாக முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் நீர்த்தடாகம் நவீன வசதிகளைக்கொண்ட மலசலகூடத்தொகுதி என்பனவற்றை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கென 45 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மர்சூக் அகமட் லெப்பை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சு 25 லட்சம் ரூபாவையும் பள்ளிவாயல் நிர்வாகம் 20 லட்சம் ரூபாவையும் இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

இன்று ரணிலுக்கு 60

ranil-wickramasinghe.jpgஎதிர்க் கட்சித்தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று 60ஆவது பிறந்த நாளாகும்.  இதனை முன்னிட்டு கட்சியாலும், ஆதரவாளர்களாலும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட மதவழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான வழிபாடு கொழும்பு கங்காராம விகாரையில் மாலை 6 மணிக்கு இடம் பெறவிருக்கின்றது. இந்த நிகழ்வின் போது “சுதந்திரத்துக்கான மேடை’ என்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவமும் இடம் பெறவுள்ளது.

அதேநேரம் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தொடர்ந்தும் கரு ஜயசூரிய நீடிப்பார் எனவும், கட்சித் தலைவரின் சில பொறுப்புக்கள் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், என்ன அதிகாரங்கள் செயற்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி சிரேஸ்ட தலைவர் பொறுப்பை ரணில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வர்ஷா படுகொலைச் சந்தேக நபரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு தலை துண்டிப்பு – பொலிஸார் தெரிவிப்பு

Regie_Varsa
திருகோணமலை மாணவி வர்ஷாவின் (வயது 6) படுகொலைச் சந்தேகநபரும் சயனைட் அருந்தி தற்கொலை செய்தவருமான ஜனார்த்தனனின் சடலத்தை கடந்த சனிக்கிழமை இரவு புதைகுழியிலிருந்து தோண்டி எடுத்த சிலர் தலையை துண்டித்து முகத்தை மிகமோசமாகச் சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமலை சென்.மேரிஸ் கல்லூரி மாணவியான வர்ஷாவை பாடசாலையிலிருந்து ஆட்டோவில் கடத்திய சிலர் அவரது தாயிடம் பெருந்தொகை பணத்தை கப்பமாகக் கோரியதுடன், பின்னர் அந்த மாணவியை படுகொலை செய்தனர்.

இந்தக் கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர் மறுநாள் கைது செய்யப்பட்ட அதேநேரம், அவரை மாணவியின் உடல் கிடந்த இடத்திற்கு பொலிஸார் கொண்டு சென்றபோது பொலிஸாரைத் தாக்கிவிட்டு அவர் தப்பியோடமுற்பட்டதாகக் கூறி பொலிஸார் அவரை சுட்டுக்கொன்றனர்.

அதேநேரம், இவருடன் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரும் அங்குள்ள தமிழ் அமைப்பொன்றின் பொறுப்பாளருமான ஜனார்த்தனன் எனப்படும் வரதராஜன் ஜனார்த்தனன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸாருடன் தடயப் பொருட்களை காட்டுவதாகக் கூறிக் கூட்டிச் சென்றபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு புதை குழியிலிருந்து இவரது சடலத்தை தோண்டியெடுத்த இனந்தெரியாத சிலர் கழுத்தை துண்டித்ததுடன், முகத்தை மிக மோசமாகச் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை இது பற்றி அறிந்த பொலிஸார், அங்கு சென்று சடலத்தை மீண்டும் அதே குழியில் புதைத்துள்ளதுடன், அந்தப் பகுதியை கண்காணித்தும் வருகின்றனர். மாணவியின் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான விசாரணை தொடந்தும் நடைபெற்று வருகிறது.
 

வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. – பாஜக

20-varun-ganthi.jpgதுவேஷப் பேச்சு தொடர்பாக வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதைக் காரணம் காட்டியும், தேர்தல் ஆணையம் அவரை போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியாது. காரணம், அவர் கோர்ட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தற்போதைய சட்டப்படி தேர்தலில் நிற்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு அறிவுரை மட்டுமே கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதை அமல்படுத்த அது முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அதிகபட்சம் பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிலிபித் தொகுதியில் முடக்கி வைக்க முடியும். அது கூட கடைசிக் கட்ட முயற்சியாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவசரப்படாது என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச காச நோய் தினம் உலகெங்கும் இன்று அனுஷ்டிப்பு

robertkoch_.jpgசர்வதேச காசநோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காச நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி நோய் பரவுவதைத் தடுப்பதுடன், நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வருடந்தோறும் மார்ச் மாதம் 24ம் திகதி சர்வதேச காசநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் இம்முறை சர்வதேச காச நோய் தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையங்களின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காசநோய் பற்றி வரலாறு, நோய்க்காரணி, அதன் அறிகுறிகள், நோய்பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற் கான வழிவகைகள் பற்றி மக்களைத் தெளிவுபடுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, காசநோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.

விடைபெற்றார் பக்னர்

cool.jpgதென்னா பிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 22 முடிவடைந்த 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் ஸ்டீவ் பக்னர் டெஸ்ட் நடுவர் பணியில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 62 வயதான ஸ்டீவ் பக்னர் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையும் பக்னரையே சாரும் இதற்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்காவின் ருடீ கேட்சன் 99 டெஸ்ட்களில் நடுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி நேற்று ஸ்டீவ் பக்னரின் 20 வருடகால டெஸ்ட் நடுவர் பணி முடிவுக்கு வந்தது. பக்னர் முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தியமேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது நடுவராக செயல்பட்டார்.

அடுத்து இங்கிலாந்து மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் வரும் பார்படோசில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஸ்டீவ் பக்னர் நடுவராக செயல்படவுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சர்வதேச நடுவர் பணியில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளார்.

இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜைகளுக்கு வேண்டுகோள்

uae-fla.jpgஇலங் கையில் யுத்த சூழல் உக்கிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய தேவையைத் தவிர, வேறெந்த காரணங்களுக்காகவும் இலங்கை செல்ல வேண்டாமென ஐக்கிய அரபு இராச்சியம், தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது வதியும் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜைகள், உடனடியாகத் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டு, தமது தொடர்பு இலக்கங்கள், முகவரிகள் போன்ற விவரங்களை அறியத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சரக்கு விமானம்

japan-fli.jpgஜப்பானில் தரையிறங்கிய சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பலியாகியுள்ளனர். குவாங்ஸொயுவிலிருந்து நரிடா சர்வதேச விமான நிலையத்தை திங்கட்கிழமை காலை வந்தடைந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தையடுத்து ஜப்பானின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் மேற்படி விமான நிலையம் மூடப்பட்டது. அந்த விமான நிலையத்துக்கான பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன.