சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்தீன் ராஜினாமா

கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார்.

இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார்.  தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப்பதாக யு.எல்.எம். முபீன் தெரிவித்தார்.

கூட்டமைப்பு எம்.பிகளுக்கு விடுமுறை வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – தினேஷ்

parliament-of-sri-lanka.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு இனிமேல் விடுமுறை வழங்குவதை மீள்பரி சீலனை செய்ய வேண்டி வருமென்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத் திற்கு மூன்று மாத காலம் விடுமுறை வழங்குவதற்கான பிரேரணை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் எம்.பியின் சார்பில் சொலமன் சிறில் எம். பி. விடுமுறை விண்ணப்பத்தை சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் தினேஷ், ‘கூட்டமைப்பு எம்.பிக்கள் இங்கு விடுமுறை எடுத்துக்கொண்டு போய், வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு எதிராகவும், சத்திய உரைக்கு எதிராகவும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள். அரசியலமைப்புக்கு முரணான விதத்தில் செயற்படுவோருக்கு நாம் இன்னமும் விடுமுறையை அங்கீகரிக்க வேண்டுமா? சிந்திக்க வேண்டும். என்று அமைச்சர் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா, ‘நீங்கள் இந்த விடயத்தை ஏற்கனவே குறப்பிட்டிருக்க வேண்டும். எதிரணி உறுப்பினரின் பிரச்சினை என்பதால் இதனைக் கூறுகிறேன். அவருக்கு (சிவாஜீக்கு) எதிராக சட்டப்படியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையே! எனவே இப்போதைக்கு விடுமுறையை அங்கீகரிப்போம்’ என்றார். இதற்கு உடன்பட்ட அமைச்சர் தினேஷ், உறுப்பினர்களின் சிறப்பு உரிமையைப் பறிக்குமாறு நான் சொல்லவில்லை.

எதிர்காலத்தில் இதுபற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறேன்’ என்றார். அதற்கமைய சிவாஜிலிங்கம் எம்.பிக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதேநேரம், கனகரட்ணம் எம்.பியின் விடுமுறை விண்ணப்பத்தை, துரை ரெட்ணசிங்கம் எம்.பி. சமர்ப்பிக்க சபை அங்கீகரித்தது.

பூகம்பத்தை உணரும் மேலும் இரு முன்னெச்சரிக்கை மையங்கள்

இலங்கைக்குள்ளும், இலங்கையைச் சூழவுள்ள பிரதே சங்களிலும் ஏற்படுகின்ற நில அதிர்வுகளைப் பதிவு செய்யவும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுவதற்குமென ஜேர்மன் நாட்டின் உத வியுடன் இரண்டு நில அதிர்வு பதிவு, மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றது.

இந்த நிலையங்கள் அனுராதபுரம், கனதராவ விகாரை வளாகத்திலும், ஹக்மன விகாரை வளாகத்திலும் அமைக்கப்படவிருப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியல் நிபுணர் நில்மினி தல்வெல நேற்றுத் தெரிவித்தார். இந்த இரண்டு நிலையங்களும் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணிக்கப்படுவதுடன் அவை செயற்படவும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு தான் ஜேர்மன் நாட்டின் ஜி. எப். இஸட் நிறுவனத்தின் உதவியோடு நில அதிர்வு பதிவு மையங்கள் இரண்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இந்த இரண்டு மையங்களுக்கும் அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கு ஜேர்மன் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையங்களை அமைப்பதற்கென நாம் இரண்டு மில்லியன் ரூபாவை செலவிடவிருக்கின்றோம்.

தற்போது இந் நாட்டில் நில அதிர்வுகளை பதிவு செய்யவென ஒரே ஒரு நிலையம் தான் கண்டி, பள்ளேகலையில் இயங்குகின்றது. இதற்கு மேலதிகமாக இந்த இரு நிலையங்களும் செயற்படத் தொடங்கும் போது 4 ரிச்டர் அளவுக்கு குறைவான நில அதிர்வுகளையும் துள்ளியமாகப் பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.

இவற்றை அடிப்படையாக வைத்து நில அதிர்வு ஏற்பட்ட இடம். ஆழம், நேரம் என்பவற்றை மிகவும் இலகுவாக கணிப்பிட்டு விட முடியும் என்றும் அவர் கூறினார்

புலமைப்பரிசில் மாணவரை ஊக்குவிக்க விசேட திட்டம்

sri-lankan-schools.jpgஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்¨ச்ககுத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்மொன்றினை ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கோட்ட கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி புலமைப்பரிசில் பரீட்சையில் 100 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 144 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். இஸட். ஆப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வி. அமீர்தீன் தனது கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் மீட்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாட வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்

pr-tam-deli.jpgதமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அரச படையினரால் மீட்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் கலந்துரையாடி புலிகளால் அவர்கள் தள்ளப்பட்டுள்ள தற்போதைய மன நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். தமிழ் கட்சிப் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் நேற்று மாலை சந்தித்து உரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

சகோதர மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான தமது பொறுப்பையும் கடமையையும் தாம் நன்குணர்ந்;துள்ளதுடன் அதனை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அதற்கு அனைத்து தமிழ் கட்சிகளினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகத்தின்; சவால்களுக்கு மத்தியில் தமது நாட்டையும் சகோதர மக்களையும் பாதுகாத்து அவர்களை நிரந்தர வசிப்பிடங்களில் குடியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம்  அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். சர்வதேச சக்திகள் பயங்கரவாதத்தை வலுவடையச் செய்வதற்காகவல்லாமல் அப்பாவி மக்களை வாழவைக்கவே முன்வரவேண்டும்.

வடக்கு மக்கள் 30 வருட காலமாக அனுபவித்து வரும் வேதனைகளை நன்கு உணர்ந்துள்ளேன் அவர்களின் மீள் குடியேற்றத்தின் பின்னர் அதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது. வடக்கின் நகர்ப்புரங்களுக்கு மட்டுமன்றி கிராமப்புறங்களுக்கும் வீதி, மின்சாரம்,  போக்குவரத்து, சுகாதாரம் உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேல்மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக ரோஷி சேனநாயக்க

rosi-senanayake-t.jpgமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பிரபல நடிகையான ரோஷி சேனநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தீர்மானம் கட்சியின் உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்

vesak.jpg
நாடெங்கிலுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களையும் இறைச்சி கடைகள் மற்றும் மிருகங்களை அறுக்கும் நிலையங்களையும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 8ம்,  9ம் திகதிகளில் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேநேரம் இத்தினங்களில் உல்லாச ஹோட்டல்களில் மதுபானம் விற்பனை செய்வதையும்,  சுப்பர் மார்கெட்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இத்தினங்களில் குதிரைப் பந்தய நிலையங்கள்,  கெஸினோ கிளப்கள்,  இரவு களியாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கும் அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கனேடிய அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

canada_min.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பெவர்லி ஜே ஒடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஆறுமுகம் தொண்டமான்,  டக்ளஸ் தேவானந்தா,  விநாயகமூர்த்தி முரளிதரன், புத்ரசிகாமணி,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  வெளிவிவகார அமைச்சின் செயலளார் கலாநிதி பாலித கொஹன மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அன்ஜெலா பொக்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

தேசிய வெசாக் வைபவம் மாத்தறை ரஜமகா விகாரையில்

vesak.jpgதேசிய வெசாக் வைபவம் மாத்தறை வெஹெரஹேன ரஜமகா விகாரையில் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கிணங்க சமய விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இவ்வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இதேவேளை,  தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு தபால் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. முத்திரை வெளியீட்டு வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பதில் தபால் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ்வைபவத்தில் களனி பல்கலைக்கழக வேந்தர் வெலமிடியாவே குசலதம்ம, ஊவா பல்கலைக்கழக வேந்தர் அலுத்வௌ கோரத தேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன,  டளஸ் அழகப்பெரும,  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் சந்திரசிரி கஜதீர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

sri-lanka-parliament.jpgபாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுகிறது.இன்றைய சபை அமர்வின்போது அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரனையை முன்வைக்கவுள்ளார்.

மேல் மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டதன்; பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.